மேற்குத் தொடர்ச்சி மலையை ஓரக் கண்ணால் பார்த்தவாறே பறந்துக்கிட்டு இருக்கோம் புது ஹைவேஸ் சாலையில். வள்ளியூர் வந்தால் மெயின் ரோடில் கடையும் கண்ணியுமா ஜேஜேன்னு இருக்கு. கொஞ்சம் பழங்கள் வாங்கிக்கிட்டா நல்லதுன்னு வண்டியை நிறுத்துனோம். ஆப்பிள்களையெல்லாம் வலைப்பையில் பிடிச்சுவச்சுத் தூக்கி(ல்) தொங்க விட்டுருந்தாங்க. திராட்சை சீஸன் போல. ஆனால்...... பார்க்க ஃப்ரெஷா இல்லை. கோபால்தான் போய் என்னவோ வாங்கினார். நான் கொஞ்சம் சப்போட்டா வாங்கிடச் சொன்னேன். இதையெல்லாம் பார்த்து எத்தனை நாளாச்சுன்னு இந்தப் பக்கம் திரும்புனா ஐயோ.....நெசமாவே பார்த்து நாளான பொருள்தான் இந்தப் பனங்கிழங்குகள். பழங்களைவிடக் கூடுதல் ஃப்ரெஷாக் குவிஞ்சு கிடக்கு. வித்துக்கிட்டு இருந்த அம்மாவும் பார்க்கவே அருமையான அம்மாவா இருந்தாங்க. 'ஆக்க இடமில்லை அம்மா'ன்னு சொல்லிட்டு அவுங்க அனுமதியோடு ரெண்டு படம் புடிச்சுக்கிட்டேன்.ஒத்தைக் கண்ணனா ஒரு காற்றாலை நிக்குது. கேமெராவை எடுக்கும்போது உலகநாதன் சொன்னார், 'இன்னும் எக்கச்சக்கமா வரும் பாருங்க'. சத்தியமான உண்மை. கூட்டம் கூட்டமா அனக்கமில்லாம நிக்குதே. காத்துலே சுத்தறதைப் பார்க்கணுமுன்னு ஆசையா இருக்கு. (இங்கே நியூஸியில் ஒரு காற்றாலை வச்சப்பக் கொஞ்சதூரத்துலே இருந்த பண்ணையின் சொந்தக் காரர்கள் இதோட சத்தம் பெருசாக் கேக்குது அதை எடுத்தே ஆகணுமுன்னு புகார் கொடுத்தாங்க. இத்தனைக்கும் ரெண்டுக்கும் இடவெளி ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமாவே இருந்துச்சு. கடைசியில் காற்றாலையை எடுத்துட்டாங்க) எவ்வளவு சத்தம் வருமுன்னு தெரிஞ்சக்கலாமுன்னு பார்த்தால் அசைவேனாங்குதுகள். காத்தே இல்லைன்னார் கோபால். நம்ம வண்டிதான் காத்தாப் பறந்துச்சு. புது ரோடு அட்டகாசமா இருக்கே.
'ஆரல்வாய்மொழி'ன்னு ஒரு கைகாட்டி பார்த்த நினைவு. எவ்வளோ அழகான பெயர் இல்லை? ராஜாஸ் டெண்டல் காலேஜ் ஹாஸ்பிட்டல் கண்ணுலே விழுந்துச்சு. கட்டிட முகப்பா இப்படி மும்மதமும் சம்மதமுன்னு இருக்கு! இந்தப் பெயர் எப்பவோ பத்திரிக்கைகளில் அடிபட்டுச்சேன்னு விசாரிச்சேன். கேஸ் நடக்குதுன்னு தெரிஞ்சது.
அஞ்சுகிராமம் கடைத்தெரு
அஞ்சுகிராமம் வழியாப் பறந்துக்கிட்டு இருக்கோம். கடைவீதி கலகலன்னு இருக்கு. கண்சிமிட்டும் நேரத்தில் கடந்தோம். இதோ வந்துருச்சு விவேகானந்தர் கேந்திரம். வண்டி போய் நின்ன இடம் ஹொட்டேல் ஸீவ்யூ.பார்க்கிங்கிலே காரைவிட்டு இறங்குனா...ஹைய்யோ..... கண்ணெதிரில் திருவள்ளுவரும் விவேகானந்தர் நினைவு மண்டபமும். முதல்வரவேற்பே இப்படி இருக்குமுன்னு நான் எதிர்பார்க்கலை. மசமசன்னு இருட்டும் நேரம்.
(கன்யாகுமரிக்கு ஒரு நாப்பது வருசம் முன்னாலே வந்துருக்கேன். அப்ப இதெல்லாம் இல்லவே இல்லை)
ஸீ வ்யூவில் எல்லாம் இளைஞர்களா (மிஞ்சிப்போனா இருபத்தியொன்னு, இருபத்திரெண்டு இருந்தா அதிகம்) இருக்காங்க. ஒருத்தர் பெரிய உருளியில் பூக்களை அலங்கரிச்சுக்கிட்டு இருக்கார். ஜில்லுன்னு செவன் அப் கொண்டுவந்து கொடுத்தாங்க. வரண்ட தொண்டைக்கு இதமா இருந்துச்சு. கடலைப் பார்க்கணுமா தெருவைப் பார்க்கணுமான்னு வரவேற்பில் கேக்கறாங்க. ரெண்டுக்கும் என்ன வித்தியாசமாம்? ஆயிரம் ரூபாய். முதலில் ரெண்டையும் காமிங்க. அப்புறமாச் சொல்றோமுன்னு மாடிக்குப்போய்ப் பார்த்தோம். தெருவிலே என்ன அற்புதம் கிடக்கு? பேசாமக் கடலையே பார்க்கலாமுன்னு சொன்னேன். ஆயிரமுன்னு சொன்ன கோபாலை..... டாலர்லே பாருங்க. சின்ன எண்ணிக்கையா இருக்குமுன்னு ஒரே போடாப் போட்டேன். நாலு நாள் தங்கப்போறதால் டிஸ்கவுண்டு வேணுமுன்னு கேட்டு இருபத்தியஞ்சு சதம் கழிவு கிடைச்சது.
அறைக்குப் போனதும் ஜன்னல் திரையை விலக்குனா பளிச் என்ற விளக்கலங்காரத்தில் அய்யனும் (விவேக்) ஆனந்தனும். களைப்பைப் போக்க காஃபிக்குச் சொன்னதும் கொண்டுவந்த பணியாளர், காலையில் சூரிய உதயம் பார்க்கணுமாம்மா? ஆறேகாலுக்குக் காஃபி கொண்டுவந்து எழுப்பி விடறேன். குடிச்சுட்டு மாடியில் போய் பாருங்கன்னார். ஆறரைக்கு வருவானாம் சூரியன்.
இன்னிக்கு ரொம்பவே சுத்தியாச்சு. நாலுநாள் ரிலாக்ஸா இருக்கப்போறேன். கோவிலுக்கு நாளைக்குக் காலையில் போகலாமுன்னு இவர் டிவி போட்டுக்கிட்டு படுக்கையில் சாஞ்சுட்டார். போயிட்டுப்போகுது போன்னு நானும் இருட்டுலே மினுங்கும் கடற்புரக் காட்சிகளைப் பார்த்துக்கிட்டு இருந்தேன். ஒரு மணிநேரம் இப்படிப் போயிருக்கும், திடீர்னு இவர் எழுந்து, 'தூக்கம் கண்ணை இழுக்குது....போய் எதாவது சாப்பிட்டு வந்துறலாமு'ன்னு சொன்னதும் கொஞ்சம் ஃப்ரெஷப் பண்ணிக்கிட்டுக் கீழே போனோம்.கடைத்தெரு
ஹொட்டேல் ரெஸ்ட்டாரண்டுக்குப் போகாம வெளியே எப்படி இருக்கு, என்ன கிடைக்குமுன்னு பார்த்துக்கலாமுன்னு ஹொட்டேல் இடதுபக்கம் ஒரு பத்து மீட்டர் தூரத்தில் இடப்பக்கம் இருக்கும் ஒரு தெரு(சந்நதித்தெரு?)வுக்குள் நுழைஞ்சோம். பலதரப்பட்டக் கடைகள். பூ, சங்கு, சோழி, நாட்டுமருந்து, துணிமணி, கைவினைப்பொருட்கள் இப்படி........ வேடிக்கைப் பார்த்துக்கிட்டே போனப்பச் சரவணா என்ற பெயரில் ஒரு உணவகம். பார்க்கக் கொஞ்சம் சுத்தமாவே இருந்துச்சுன்னு நுழைஞ்சுட்டோம். முன் ஜாக்கிரதையா நான் ஒரு தோசை & சக்கரை. முடிச்சுட்டு வெளியே வந்து இன்னும் ஒரு ரெண்டு நிமிஷம் நடந்தா..... கோயில் வாசலில் நிக்கிறோம். பகவதி க்ஷேத்ரமுன்னு எழுதி இருக்கு.
வந்தது வந்துட்டோம் உள்ளே போய்க் கும்பிட்டால் ஆச்சு. கிழக்கு பார்த்த வாசலில் நுழைஞ்சு இடது பக்கம் போனால் நமக்கு இடப்புறம் மூணு இல்லை நாலு மீட்டர் உயரம் வரும் கதவுகள். மூடிக்கிடக்கு. வலப்பக்கம் தலையைத் திருப்பினால், கொஞ்ச தூரத்தில் உள்புறமா ரெண்டு வாசல் கடந்துச் சின்னப் பொண்ணாக் கன்யாகுமாரி நிற்கிறாள். சாமி சந்நிதிக்குப் போனால் குங்குமம், பன்னீர் வச்சுப் பூஜைப்பொருட்கள் விக்கறாங்க. அதையும் வாங்கிக்கிட்டோம். சந்தனக்காப்பில் குமரியம்மன். சாமி தரிசனம் முடிஞ்சு வரிசையாப் போய், கர்ப்பக்கிரகத்தின் முன்னால் நின்ற போத்தியிடம் குங்குமப் பிரசாதம் வாங்கியாச்சு. துளிச் சந்தனத்தை இலையில் வச்சுப் பூஜைப்பொருட்கள் கொடுத்த ஆட்களுக்கு மட்டும் தர்றாங்க. இதென்னடா.... கோபாலுக்குக் கொடுக்கலைன்னு கேட்டேன். அங்கே கர்ப்பக்கிரகம் முன்பு ரெண்டுபெஞ்சு ஒட்டுனாப்போல இருக்கு. அதுலே இடப்பக்கம் இருந்ததுலே,(ஒரு பெஞ்சைக் காமிச்சு) அந்தப் பொருட்களை வைக்கணுமாம். இவர் வலப்பக்கம் வச்சுட்டாராம்.
அதனாலே என்ன? ஒரு பெஞ்சுலே வச்சாரா இல்லையான்னு கேட்டேன். லேசான முறைப்போடு சந்தனம் கிடைச்சது. உள்ப்பிரகாரம் வலம் வந்தோம். மக்கள், கையில் இருக்கும் எக்ஸ்ட்ரா குங்குமத்தால் கர்ப்பக்கிரகத்தின் வெளிச்சுவர் முழுக்க அபிஷேகம் பண்ணிவச்சுருக்காங்க.
நம்மூர்க் கோவில்களில் எத்தனை இடத்தில் 'கோவில் பிரசாதங்களைச் சுவற்றில் தடவவேண்டாம். ஆலயத்தைத் தூய்மைப் பேணவும்'ன்னு அறிவிப்புப் பலகை வச்சாலும், அது மக்கள்ஸ் கண்ணுலே பட்டாலும் அதனால் ஒரு பயனும் இல்லை. பேசாம, சாமி முன்னாலே இருக்கும் பெஞ்சில் ஒரு கிண்ணத்தில் குங்குமம் விபூதி வச்சுட்டால் வேணுங்கறவங்க ஒரு துளி எடுத்துப்பாங்க இல்லையா? ( ஃபிஜித் தீவில் நம்ம கோவில்களில் இந்த மாதிரி இருக்கு. தீபாராதனைத் தட்டுகூட ஒவ்வொருவருக்கா நீட்டப்படாது. குருக்கள் கற்பூராரத்தித் தட்டை சாமிக்குக் காமிச்சுட்டு அப்படியே மக்கள் பக்கம் திரும்பி உயர்த்திக் காமிப்பார். எல்லோரும் இருந்த இடத்தில் இருந்தே கை உயர்த்தி மானசீகமா தொட்டுக் கண்ணில் ஒத்திக்கறதுதான்.) இப்படி இருந்தாத் தட்டு வருமானம் போச்சேன்னு மனம் உடைஞ்சுறாதா? ஞாயம்தான். பேசாம பக்கத்துலே ஒரு தட்டை வச்சுட்டா ஆச்சு. அதுலே கொஞ்சம் காசையும் போட்டுவைக்கணும். அப்பத்தான் மக்கள்ஸ்க்கு அதுலே காசு(ம்) போடணுமுன்னு தெரியும்:-)))))
சின்னக்கோவில்தான். இருட்டுலே சரியாப் பார்க்க முடியாது. பகல்வெளிச்சத்தில் பார்த்துக்கலாமுன்னு சின்னதா ஒரு நாலடி இருந்த வாசலில் குனிஞ்சு நுழைஞ்சு வெளிப்பிரகாரம் வந்தோம். அப்போ அங்கே எதிரில் இருந்த ரெண்டுபேர், 'என்ன வெளியே போறீங்க? அர்த்தஜாமப்பூஜை நடக்கப்போகுது உள்ளே'ன்னு சொல்றதுக்கும் கணகணன்னு பூஜை மணி ஒலிக்கவும் சரியா இருந்துச்சு. அச்சச்சோ....சுத்திக்கிட்டு உள்ளே போகணுமா என்னன்னு வந்த வழியிலே மீண்டும் குனிஞ்சு உள்ளே போயிட்டோம். சரியா சாமிக்கு முன்னாலே கம்பிப்பக்கம் ரெண்டாளுக்கும் இடம் ஏதோ ஒதுக்கிவச்ச மாதிரி காத்துருக்கு! மற்ற கூட்டமெல்லாம் சாமிக்கு நேரா இருக்கும் மண்டபத்தில். தீபாராதனையை கண்ணுநட்டுப் பார்த்தேன். தீபஒளியில் மூக்குத்தி அப்படியே மின்னித் திளங்குது!!!!! ஆஹா............ பகவதீ..... இதுக்குத்தான் நாளைக்கு வரலாமுன்னு நினைச்சுக் கிடந்தவங்களை இன்னிக்கே கூப்ட்டியா? உடம்பு கொஞ்சம் சிலிர்த்துப் போச்சு........ வெளியே வரும்போது பேசவே நா எழும்பலை.
கோவில் மண்டபத்தில் இருந்து இடதுகைப் பக்கம் பிரியும் தெரு கொஞ்சம் உசரமா இருக்குன்னு ஏறிப்போக நாலைஞ்சு படிகள். அதுவழியாப் போகலாமுன்னு நினைச்சுப் படியேறினோம். படிகள் முடியும் இடத்தில் சங்கு, சோழிகளால் செஞ்சச் சின்னச் சின்னப் பொருட்களை ஒரு அட்டைப்பெட்டியில் அடுக்கி வச்சு ஒருத்தர் வித்துக்கிட்டு இருந்தார். அவரைக்கடந்து நாங்க போயிட்டோம். ஒரு நிமிச நடைக்குப்பின்னர்தான்....
இந்தத் தெரு எங்கேபோய்ச் சேருமுன்னு தெரியாம இருட்டுலே போகணுமான்னு ஞானோதயம் ஏற்பட்டுத் திரும்பி வந்தவழியே வந்தப்பப் பேச்சு, 'நிறைய மக்கள் மலையாளம் பேசறாங்க. போத்திகள் உள்ளக் கேரள பாணிக் கோயில் வேற. எப்படி இது தமிழ்நாட்டுலே?'ன்னு போனப்ப.... அம்பத்தாறுலே இது மெட்ராஸ் கவர்மெண்டுலே சேர்ந்துருச்சுன்னு ஒரு குரல் வருது. சரியா அப்பப் படிக்கட்டுக்கிட்ட வந்துருக்கோம். குரல்வந்த திக்கை நோக்கினால் சங்கு பொம்மை விக்கறவர். சரித்திரக்குறிப்புச் சொல்றாரேன்னு அங்கே நின்னு கொஞ்சம் பேச்சுக் கொடுத்தோம். சுவாரசியமான நபர். பேச்சு மும்முரத்தில் நாங்களும் அந்தப் படிக்கட்டிலே உக்கார்ந்தாச்சு.
சிவகாமிநாதனுடன் கோபால்
திருவிதாங்கூர், கொச்சி, சமஸ்தானங்கள் ஒன்னாச் சேர்ந்து 'கேரளா'ன்னு புதுசா ஒரு ஸ்டேட் உதயமானதும் இதே ஆயிரத்துத் தொளாயிரத்து 4 அம்பத்தியாறுலேதான். இதைத்தான் 'கேரளாப் பிறவி'ன்னு வருசாவருசம் கொண்டாடுறாங்க. நிறையப்பேர் தமிழ்ப் பேசும் மக்களா இருந்த காரணத்தினால் கன்யாகுமரி தமிழ்நாட்டோடு சேர்ந்ததும் அப்போதான்.
பெயர் சிவகாமிநாதன். பிள்ளைகள் எல்லாம் பெருசாகி இப்ப அவுங்கவுங்க பொழைப்பு நடக்குது. இவர்தான் கைகால் செயலா உள்ள அளவும் வேலை செய்யணுமுன்னுச் சின்ன வியாபாரமாப் பொம்மைகளை வாங்கிவித்துக்கிட்டு இருக்கார். 'எனக்கும் மனைவிக்கும் இதுலே கிடைப்பதே போதும். ரொம்பவும் எளிய வாழ்க்கை. சின்ன வயசுலே குடும்பத்தைக் காப்பாத்தவும் புள்ளைங்களை வளர்த்துப் படிக்கவைக்கவும் கஷ்டப்பட்டேன். அதுக்காகப் பிள்ளைகள் கிட்டே இருந்து இப்போக் காசுபணம் எதிர்பார்க்கக்கூடாது. பெத்தவங்க கடமை, அவுங்களை வளர்த்துவிடணும். நாமாதானே பெத்தோமு'ன்னார். சொன்னது ரொம்பச் சரின்னு ஆமோதிச்சேன். வாழ்க்கைப் பாடங்கள் எங்கெருந்தெல்லாம் கிடைக்குது பாருங்க!
பழைய கதைகளைச் சொல்ல ஆரம்பிச்சா யாராலே நிறுத்தமுடியுது? 'நான் பொறந்த கதையைச் சொல்லவா? வளர்ந்த கதையைச் சொல்லவா? இப்போ வாழ்ந்துக்கிட்டு இருக்கும் கதையைச் சொல்லவா? 'ன்னு விக்ரமாதித்தன் கதையில் வரும் பதுமைகள் கேக்குது பாருங்க அதேதான் ஒவ்வொரு மனுச மனசுக்குள்ளும்...... நேரமாகுது, போகலாமுன்னு புறப்பட்டோம். ஒரு இடத்துலே ரெண்டு கணினி இருப்பதைப் பார்த்ததும் நாம் திரும்பிப்போகவேண்டிய ரயில் ரிஸர்வேஷன் கன்ஃபர்ம் ஆச்சான்னு பார்க்கலாமுன்னு கடைக்குள்ளே போனோம். கோயில் மண்டபத்தூண்கள் தெரியுது. கடையா மாத்தியிருக்காங்க. அப்படீன்னா..... இவ்வளோ தூரம்வரை நீண்ட மண்டபங்களாவா அந்தக் காலத்துலே .... அடடா......
கடையை நிர்வகிக்கும் பெண் உள்ளூர் சுற்றுலாவுக்குப் போகணுமுன்னாச் சொல்லுங்கன்னாங்க. போகணும். ரெண்டு இல்லை மூணு நாளுக்கு கார் ஒன்னு வேணுமுன்னு சொன்னதும், அப்படி ஏற்பாடு ஒன்னும் இல்லைங்க. கேட்டுச் சொல்றேன்னு செல் நம்பரை குறிச்சுவச்சுக்கிட்டாங்க. வலையில் ரயில்வே பக்கம் போனா...நமக்கு ரெயில் டிக்கெட் இன்னும் கன்ஃபர்ம் ஆச்சா இல்லையான்னு ஒன்னுமே சொல்லமாட்டேங்குது. என்னடா இது ஒரு புது சோதனை? எத்தனை நாளாச்சு பதிவு செஞ்சுன்னு புலம்பிக்கிட்டே அறைக்கு வந்து கட்டையைக் கிடத்துனோம்.
நல்ல தூக்கம்....... திடீர்னு தூக்கிப்போட்டாப்புலெப் பாட்டுச் சத்தம் கேக்குது. கண்ணைத் திறக்கவே முடியலை........பயங்கர இரைச்சலாக் காதுக்குள் வந்து அறையும் பாட்டு.
தொடரும்................:-)
Thursday, May 07, 2009
பாட்டுச் சத்தம் கேட்டதைய்யா........பாட்டுச் 'சத்தம் சத்தம்' .....(2009 பயணம் : பகுதி 21)
Posted by
துளசி கோபால்
at
5/07/2009 09:06:00 PM
29
comments
Labels: அய்யன், அனுபவம், பனங்கிழங்கு
Tuesday, May 05, 2009
ஏரிகளும் மலையும் ............. (2009 பயணம் : பகுதி 20)
ஹைய்யோ.......... இது என்ன? வடை! அதுவும் மசால் வடை!! ஜானகிராமா....உமக்கு எப்படிப்பா நம்ம விஷயம் தெரிஞ்சது? இது.....பதிவர் உலகத்துக்கே தெரியும்போது...... சரிதான். நீங்களும் ஒரு பதிவர்ன்னு சேதி வந்துச்சே!நிறைய நாள் காய்ஞ்சுபோய்க் கிடந்ததுக்கு இங்கே உணவு அருமையா இருந்துச்சு. பருப்பு, ரஸம், கேஸரி சாப்பிட முடிஞ்சது. கோபாலின் பரிந்துரையில் சுடச்சுட இன்னொரு வடை என் தட்டுக்கு வந்துச்சு. ஒரு மணி நேர ஓய்வுக்குப் பிறகு ஆர்யாவில் கணக்கை முடிச்சுக்கிட்டுக் கிளம்பிட்டோம்.
ஆர்யாவில் இருந்த (திரு)வாசகம். நியாயம்தானே?
இங்கிருந்து ஒரு அஞ்சாறு கிலோமீட்டர் தூரத்தில் புதுசா ஒரு ஹவுஸிங் கம்பெனி வீடுகள் கட்டிக்கொடுத்துக்கிட்டு இருக்காங்க. ஒருசில வருசங்களுக்கு முன்னே, ஒருவேளை இந்தியா திரும்பிவந்தால் எங்காவது தண்ணீர்ப் பஞ்சம் இல்லாத நல்ல இடத்தில் இருந்துக்கலாமுன்னு வலையில் தேடிப் பிடிச்சுவச்சுருந்த இடம் இது. நம்ம பதிவர்களில் 'அந்தூர்க்காரவுக'கிட்டே விசாரிச்சதில் நல்ல கம்பெனின்னு தெரிஞ்சது. ஆனாலும் நேரில் பார்க்காம வீடு வாங்கிப்போட முடியுமா? வந்து பார்த்துட்டுச் சொல்றேன்னு மயில் அனுப்பினேன். 'நீ வர்ற காலத்துலே விலை ஏறிப்போயிரும். அப்போ என்ன விலையோ அதுக்குச் சம்மதிக்கணும்'. சரி. டீல் சரியாத்தான் இருக்கு.மாடல்வீடுகளில் ஒன்னு
இந்த இடத்தைப் பற்றி நம்ம உலகநாதன்கிட்டே கேட்டதுக்கு, 'கவலையே படாதீங்க. அவுங்க(ளும்) நமக்குத் தெரிஞ்சவங்கதான். போய்ப் பார்த்துட்டே போகலாமுன்னுட்டார். அங்கே போனால் இடம் சூப்பரா இருக்கு. முதல் ஸ்டேஜ் முடிஞ்சு ரெண்டாவது பகுதியில் வீடுகள் முளைச்சுக்கிட்டு இருக்கு.
ரெண்டு, மூணு படுக்கை அறைகளும் நாலு டிசைன்களும். எல்லாத்தையும் போய்ப் பார்த்தோம். ஆசையாத்தான் இருக்கு. கட்டிமுடிச்ச வீடுகள்
ஆனாலும் 'சட்'ன்னு முடிவு எடுக்கமுடியுதா? வீடுகட்டித்தரும் கம்பெனியைப் பொறுத்தவரை நல்ல பெயர் உள்ளதுதான். பெரிய நிறுவனம். இவுங்க அனைத்து வசதிகளும் கொண்ட ஒரு மருத்துவமனைகூட நடத்தறாங்க. (வயசான காலத்துலே 'சட்'னு போக (சிகிச்சைக்குத்தான்)மருத்துவ வசதிகள் இருக்கும் இடமான்னு முதலில் கவனிச்சுக்கணுமே). அதான் இப்பப் பார்த்தாச்சே...வாங்கிப்போட்டேனா? ஊஹூம்...... இன்னும் கொஞ்சம் யோசிக்கணும்(-:இந்தச் செடி/மரத்தைக் கண்ணாட்டம் கன்ஸர்வேட்டரியில் வச்சுருக்கேன் நியூஸியில். எண்ணி அஞ்சு இலை வந்துருக்கு. இங்கே பாருங்களேன் அதுபாட்டுக்குச் செழிப்பா ...... மரத்தின் பெயர் CYCA Palm
போறவழியில் இன்னொரு கோவில் இருக்கு. அதையும் பார்க்கலாமுன்னு உலகநாதன் சொன்னார். நாங்குநேரி வானமாமலைன்னதும் எனக்கு ஜீயர் நினைவு வந்துச்சு. ரொம்ப தூரத்துலே இருந்தே கோயில் கோபுரம் லேசாத் தெரிஞ்சது. சாலையைவிட்டு ஊருக்குள் வண்டி போகும்போதும் மற்ற கட்டிடங்களுக்கு நடுவில் கோபுரம் கொஞ்சமாத் தரிசனம். கோயில் பின்புறத்தாலே போய்க்கிட்டு இருக்கோம். ஒரே வட இந்தியக் கூட்டம். ஒரு பக்கம் பெரிய பாத்திரங்களில் சமையல் ஜரூரா நடக்குது. பஸ் நிறையப் பயணிகள். கோயிலுக்கு முன்புறம் பெரிய மண்டபம். வண்டியிலிருந்து இறங்கி மண்டபத்துலே கால் வச்சதும் அங்கிருந்த காவல்காரர் ஓடிவந்து, கோபாலிடம், 'கமீஸ் நிகாலோ'ன்னு கத்தறார். கேரளாக் கோயிலா என்ன? சட்டை போட்டுக்கப்படாதாமே(-:
ஜீயர் இருக்காரான்னு கேட்டதுக்கு, டூர் போயிருக்கார்னு பதில் வந்துச்சு. ரொம்ப அழகான தூண் சிற்பங்கள். மூலவர் வானமாமலை என்ற தோத்தாத்ரி. தாயார் ஸ்ரீவரமங்கை. இந்தக் கோயிலில் உள்ள மூர்த்தி 'இருந்த கோலம். வெண்சாமரம் வீச அசல் தேவலோக மங்கையர் ஊர்வசியும் திலோத்தமையும். பொதுவா நாம் ரம்பா, ஊர்வசி மேனகாவோட நிறுத்திக்கறோமே. திலோத்தமையைச் சட்னு நினைச்சுக்கறதில்லையேன்னு......காரணம் புரிஞ்சுபோச்சு. இந்தப் பெயரில் ஒரு நடிகை(யும்) இல்லை:-))) (வத்தலகுண்டுக் காலத்தில் என் பள்ளித்தோழன் ஒருத்தன் பெயர் தத்தாத்ரி. தத்தாத்ரியும் தோத்தாத்ரியும் ஒன்னுதானோ? ஆன்மீகச் செம்மல்கள் பதில் சொல்லுங்கப்பா)
சுப்ரபாதம் சொல்லும்போது , 'மாத சமஸ்த ஜகதாம் மது கைடபாரே' ன்னு வருது பாருங்க, இந்த மது & கைடபனை 'அழிச்சதும்' இங்கத்துத் தலபுராணக் கதையில் வருது. அவுங்க என்ன பண்ணாங்க? பிரம்மா உக்கார்ந்துருக்கும் தாமரைப்பூவின் தண்டைப் பிடிச்சு ஆட்டி விளையாடி அவரைக் கீழே விழவைக்கப் பார்த்தாங்களாம். பயந்துபோன பிரம்மாவுக்கு அபயமுன்னு அரக்கர்களான மது, கைடபனைப் போட்டுத் தள்ளிட்டார் விஷ்ணு. அரக்கர்களின் ரத்தம் சிதறி பூமி முழுசும் ஒரே நாத்தமா நாறிப்போச்சு. பூமாதேவிக்கு மூச்சுவிட முடியலை. சக்ராயுதத்தை ஏவி பூமி முழுசும் அமிர்தம் மழையாகப் பொழியச்செய்து க்ளீனிங் வேலை நடந்துருக்கு.
சுயம்புவாக ஸ்வாமி தோன்றிய எட்டு இடங்களில் இது எட்டாவது. மற்றது என்னென்ன? எப்படியும் உங்களுக்குச் சந்தேகம் வரத்தான் போகுது. அதையும் தீர்த்தால் ஆச்சு. அவை பத்ரிகாஸ்ரமம், சாளக்கிராமம், நைமிசாரண்யம், புஷ்கரம், திருமலை, திருவரங்கம், ஸ்ரீமுஷ்ணம் என்பவை. இந்தக் கோயிலும் அந்த நூற்றியெட்டில் ஒன்னுதான்.கோவில் திருக்குளம் இருக்குமிடத்தில் நான்கு ஏரிகள் முந்தி இங்கே இருந்ததால் இந்தப் பெயர் வந்திருக்கலாம் போல.
இங்கத்துத் தாயார்பெயரான ஸ்ரீவரமங்கை என்றும் இந்த ஊருக்கு ஒரு பெயர் உண்டு. ஏரிகளும் காடுமா வனம் இருந்ததால் இங்கே தோன்றியவர் வனமாமலையா இருந்து இப்ப வானமாமலை ஆகிட்டார்ன்னு நினைக்கிறேன். வானமுன்னு சொன்னாலும் பொருத்தம்தான். இவர் வானத்தையே தன் காலால் அளந்தவரல்லவா? ( பெயர்க் காரணத்தைத் துருவித்துருவிப் பார்க்கற புத்தியை விட்டுத் தொலைக்கணும் இனிமேல்)
இந்தக் கோயிலில் எண்ணெய்க்கிணறு இருக்கு பார்க்கறீங்களான்னு கோயில் ஊழியர் ஒருத்தர் கேட்டார். ஆஹா....பார்த்தால் ஆச்சு. அதுக்குத் தனியா ஆளுக்கு அஞ்சுரூபாய்க் கட்டணம். காசைக் கொடுத்துச் சீட்டு வாங்கிக்கிட்டு வலதுமூலை நந்தவனத்துப்பக்கம் இருந்த படிகளில் ஏறிப்போனோம். இடுக்கமாத்தான் இருந்துச்சு. அங்கே பெரிய கிணறு மாதிரி
இருக்கும் ஒன்னும் அதில் பாதிவரும் அளவுக்கு இன்னொண்ணும் இருக்கு. கறுப்பான திரவம்போல் குமிழ்களோடு எண்ணெய். தோல் சம்பந்தமான வியாதிகள் தீர்க்கும் அருமருந்தாம். பாட்டிலில் எடுத்துத் தருவாங்களாம். (அதுக்கும் எதாவது கட்டணம் இருக்கும்) வேணுமான்னார். கண்ணால் பார்த்ததே போதுமுன்னு சொன்னேன். தினம் மூலவருக்கு இங்கே நல்லெண்ணெய் திருமஞ்சனம் உண்டாம்.(சுயம்பு என்பதால் நீரபிஷேகம் இல்லை) அந்த எண்ணெய்தான் இந்தக் கிணத்துலே சேகரம் ஆகுதாம். விசேஷ நாட்களில் கூடுதல் எண்ணெய் அபிஷேகம் ஆகுமாம். தினமும் எண்ணெயா? பேஷ் பேஷ் அதுதான் பெருமாள் நிகுநிகுன்னு இருக்கார். ( சீயக்காப்பொடி தேய்ச்சுக்கிட்ட காலமெல்லாம் போய் இப்ப ஷாம்பூ மட்டுமே ஆனதில் இருந்து எண்ணெய்த் தேச்சுக் குளிக்கும் வழக்கம்தான் நமக்கு போயே போச்சே)வானமாமலை ஜீயர் மடத்தின் நிர்வாகத்தில் இந்தக் கோயில் இருக்குன்னு சொன்னாங்க. தரிசனம் முடிஞ்சு வெளிவரும்போது ஒரு சின்னப் பையன் (ஆறேழு வயசு இருக்கும்) முழங்கால்வரை தொங்கும் தொளதொளச் சட்டையோடுக் கோயிலின் வெளிப்பிரகாரத்தில் சுத்திக்கிட்டு இருந்தான். "ஏண்டா அம்பி உன்னைச் சட்டையைக் கழட்டச் சொல்லலியா?" அவன் திருதிருன்னு முழிக்க.... 'கழட்டிட்டா அவ்ளோதான்'னு கோபால் சொல்றார். (பின்னம்பக்கம் ஓப்பன் சிஸமே)
பள்ளிக்கூடத்துப் பசங்க
கோயிலுக்கு நேர் எதிரே இருக்கும் அக்கிரஹாரம் வழியாப் பள்ளிக்கூடம்விட்டுப் பசங்க வந்துக்கிட்டு இருந்தாங்க. பள்ளிக்கூடச் சீருடை சல்வார் கமீஸ். ஆனாக் குட்டிப்பசங்களும் துப்பட்டாவை மடிச்சுப் பின் குத்திக்கிட்டு....... அதென்ன நியமமோ........ ஒரு கைப்பம்புக் குழாய் இருந்துச்சு. எவ்வளோ நாளாச்சு இதையெல்லாம் பார்த்து! ஒரு பையன் சைக்கிளில் கொண்டுவந்த ரெண்டு ப்ளாஸ்டிக் குடத்துக்குத் தண்ணி அடிச்சு ரொப்பிக்கிட்டு இருந்தான். இவர் போய் அவனுக்குத் தண்ணீர் அடிச்சுக் கொடுத்தார். பழசை மறந்துறக்கூடாது பாருங்க:-)))) (நான் வீடியோ புடிச்சுவச்சுக்கிட்டேன்)கிடைச்சக் குழாயடியை விடாம ஒரு அம்மா, புடவையைத் தொவைச்சுக் காயவச்சுருந்தாங்க. கோவிலில் இருந்து கிளம்பி வரும்வழியில் சமையல் முடிஞ்சு எல்லாரும் தெருவோரத்திலேயே பந்தி போட்டுச் சாப்பிட உக்காந்தாச்சுத் தட்டை வச்சுக்கிட்டு. உண்மையான 'தலயாத்திரை' என்றது இதுதான். நம்பளை மாதிரி நோகாம நோம்பு கும்பிடுறது.......இல்லை.
தொடரும்.....:-)
Posted by
துளசி கோபால்
at
5/05/2009 01:31:00 PM
22
comments
Labels: அனுபவம், நாங்குநேரி
Saturday, May 02, 2009
காந்திமதி, நீ என் செல்லக்குட்டி.....(2009 பயணம் : பகுதி 19)
இந்த ரெண்டுநாளா திருநெல்வேலி டவுனைச் சுத்திச் சுத்தி வந்ததால் எல்லா இடமும் சட்னு பழக்கப்பட்டது போல ஆயிருச்சு. நெல்லையப்பர் கோவிலுக்கு முன்னாலே தெருவிலே அழகான அலங்கார நுழைவு வாயில். மற்ற போக்குவரத்துகளைக் கவனிக்காமல் சைக்கிளில் போகும் மக்கள். இதுவரை பார்த்த ஊர்களில் இங்கேதான் சைக்கிள்களின் புழக்கம் கூடுதலா இருக்கு. பெருசா ரெண்டுமூட்டைகளை ஏத்திக்கிட்டு போறார் ஒருத்தர். முன்னாலேயும் பின்னாலேயும் ஆள் வருதா இல்லையான்னு கவனிக்காம அசால்ட்டா, ஒரு நீளமான ஏணியைச் சைக்கிளில் கட்டி எடுத்துட்டுப்போறார் இன்னொருத்தர்.கோவிலுக்குள் நுழைஞ்சோம். சாமி 'பவர்' இல்லாமல் உக்கார்ந்துருக்கார்.
கெமெராவுக்குச் 'சீட்டு' எடுக்கணுமுன்னு சொன்னதும் எனக்குச் சொல்லொண்ணா மகிழ்ச்சி. கோவில் கொடிமரம் தேய்ச்சு மினுக்கி இருக்கு. வெள்ளை நந்தி நாக்கைச் சுழட்டிக்கிட்டு ராஜபார்வை பார்க்குது. எல்லாம் இருக்கும் இடம்தான்,வேறென்ன? அட்டகாசமான அலங்காரங்கள் கழுத்தைச் சுற்றிலும்.
நந்திகொடிமரம்
பார்வையைக் கொஞ்சம் தரையில் திருப்பினால்...... நேற்றைய மகாசிவராத்திரி விழாவின் கோலாகலங்களும் கோலங்களும்.
சுவாமி மண்டபத்துக்கு நாலைஞ்சு படியேறிப்போகணும். மண்டபத்தில் ஒரு அம்மாவும் பிள்ளையும் செல்லம் போல இருந்தாங்க. கூடவே நம்மாளும். இவர் இல்லாத கோவில்களே கிடையாது:-) சுவாமிக்கானக் குட்டிப் பல்லக்கு அழகா ஒரு ஓரத்தில்.
இருட்டிலேயே தடவித்தடவி நடந்து நெல்லையப்பரை தரிசிச்சோம். வெளிப்புறப் பிரகாரங்களில் இயற்கையான வெளிச்சம் இருந்துச்சு. நாங்க போனதும் முற்பகல்தானே? பிரமாண்டமான பிரகாரங்களைச் சுற்றிப் பார்த்துக்கொண்டேஏஏஏஏஏ........... போகிறோம்.
சிற்பங்களைக் கல்லிலே இழைச்சு வச்சுருக்காங்க. நெசமாவே இதெல்லாம் கல்லுதானான்னுத் தொட்டுப் பார்த்தேன். என்னமோ களிமண்ணுலே இஷ்டத்துக்கு இழுத்துவளைச்சுச் செஞ்சதுபோல.....கல்லு எப்படித்தான் சிற்பிகளின் விருப்பத்துக்கும் எண்ணத்துக்கும் வளைஞ்சு கொடுத்துருக்குன்னு ஒரே வியப்பு. ஒவ்வொன்னும் நுட்பமான வேலைப்பாடு. ஒரு தூணைக்கூடச் சும்மா விட்டுவைக்கலை. யானைகளாத் தாங்கி நிக்குதே ஒவ்வொன்னையும். நிதானமாப் பார்க்கணுமுன்னா ஒரு நாலு நாள் வேணும்போல இருக்கே.
ராவணேஸ்வரனுக்கு ஒரு சிற்பம். வலைக்கம்பிக் கதவு போட்டுப் பூட்டி இருக்கு. இந்த ராவணன் சிலைக்குப் பின்னால் சுரங்கப்பாதை ஒன்னு இருப்பதாகவும் அது மதுரைவரை போகுதுன்னும், பாண்டிய மன்னர்கள் காலத்துச் சமாச்சாரமுன்னும் ஒரு 'கதை' இருக்கு. இதுக்குப் பக்கத்துலேயே ஒரு இடத்தில் தலையைக் கொஞ்சமா நீட்டி ஒரு ஆமை எட்டிப்பார்க்க அதன் முதுகின்மேல் ஒரு மலை. அச்சச்சோ...கோவிலுக்குள்ளே ஆமை பூந்துருச்சு..... அங்கிருந்து வலப்பக்கம் வந்தால் ரெண்டு பக்கமும் யானைச்சிற்பங்கள் உள்ள கற்றூண்கள் தாங்கி நிற்கும் அழகிய மண்டபத்துக்கு நேரா தாமிரசபை.
பெயருக்கேத்தாற்போல் தாமிர ஒடுகள் வேய்ஞ்ச மண்டபம். சுத்திவர மரவேலைப்பாடுகள் பிரமிக்கவைக்குது. (இதைப்போல ஒரு மரவேலைப்பாடு உள்ள நேபாளக்கோவில் மண்டபத்தை ஆஸ்தராலியாவில் ப்ரிஸ்பேன் நகரில் பார்ந்த நினைவு) மண்டபத்தை உள்ளே போய்ப் பார்க்கமுடியாதபடி பூட்டி வச்சுருந்தாங்க. சிவனைத்தவிர வேற யாரும் ஆடக்கூடாதுன்னோ என்னவோ......
சிவபெருமான் நடனமாடிய ஐந்து சபைகளில் இது ஒன்னு. சிதம்பரத்தில் கனக சபை, மதுரையில் ரஜத சபை, இங்கே தாமிரசபை, குற்றாலத்தில் சித்திர சபை திருவாலங்காடு ரத்தின சபை. ஆனந்தத் தாண்டவம், சந்தியா தாண்டவம், முனித் தாண்டவம், திரிபுரத்தாண்டவம், காளித் தாண்டவம் இப்படி ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு உணர்ச்சிகளில் தாண்டவமாடிட்டார்.
சபையைச் சுற்றி வந்தப்ப அடுத்தபக்கத்துப் படிகளில் ஒரு பெரியவர் இருந்தார். சாந்தமான முகம். வணக்கம் சொன்னேன்."ஒற்றைக்கொம்பன் விநாயகனைக் கைத்தொழ
எற்றைக்கின்பம் தானேவரும்" என்றார். இதுலே என்ன சந்தேகமுன்னு கொஞ்சம் பேச்சுக் கொடுத்தேன். தமிழறிஞர் நெல்லை கா.சு.மணி அவர்கள். கல்லத்தித் தெருவில் வசிக்கிறார்.(கார்டு வாங்கிக்கிட்டேன்)ஐயா
விநாயகனின் மகிமை, விநாயகனின் மூலம் அறியக்காணும் தத்துவம், சைவ சித்தாந்தக் கோட்பாடுகள், அண்டமும் பிண்டமும், தேர்த்திருவிழாவின் தத்துவம், திருமந்திரம், அரசியல் இப்படித் தலைப்புகளில் எழுதி அச்சடிச்ச தாள்களின் கொத்து (16 பக்கம்), அவருடைய பையில் இருந்து எடுத்துக் கொடுத்தார். படிச்சுப் பார்த்துட்டு வலையில் போட்டுவைக்கிறேன்னு சொன்னேன்.
முரண்பாட்டில் ஒரு முழுமைன்னு விநாயகனை விவரித்துச் சொன்னார். நான் ஆவலாக் கேட்டுக்கிட்டு அப்பப்பப் பதில் சொல்லிக்கிட்டு இருந்தேன். இந்த சத்சங்கத்தால் கவரப்பட்ட ஒரு இளைஞர் கூட வந்து சேர்ந்துக்கிட்டார். அவர் பெயர் கருப்புசாமியாம். அவருடைய மனைவியும் கூட இருந்தாங்க. ரொம்பச் சின்னவயசா இருக்காரேன்னு பார்த்தால் மூணு பிள்ளைகளாம். நம்பவே முடியலை.. நேற்று அவுங்களும் திருச்செந்தூர் போயிட்டு வந்துருக்காங்க. அங்கே பஞ்சலிங்கம் பார்த்தீங்களான்னு அவுங்க கேட்டதும்..... அடடா...கோட்டைவிட்டுட்டோமேன்னு இருந்துச்சு. தமிழய்யாகூட எல்லாருமாக் கொஞ்சநேரம் கதைச்சோம். நம்ம கருப்புச்சாமி இருக்காரே, இவர் சிவகாசிக்காரர். அச்சகம் வச்சுருக்காராம். ஐயாவுக்கு விஸிட்டிங் கார்டு இலவசமா அச்சடிச்சுத் தரேன்னு சொன்னார். நல்ல மனிதர்கள் நிறையவே இருக்காங்கப்பா.கருப்புச்சாமி
எந்தப் பக்கம் இருந்து படம் பிடித்தால் தாமிரசபை முழுசும் அடங்குமுன்னு ஐயா, கோபாலுக்குச் சொல்லிவச்சார்:-) நாங்க அங்கிருந்து கிளம்பி வலம்வந்து குபேரலிங்கத்தைத் தரிசிச்சுக்கிட்டோம். இவருடைய துவாரபாலகர்கள், தண்டீஸ்வரரும் முண்டீஸ்வரரும். நூற்றுக்கால் மண்டபம் அருமை.
நீரழிமண்டபதோடு கோவில் தெப்பக்குளம் விஸ்தாரமா பரந்து விரிஞ்சிருக்கு. மொத்தக் கோயிலும் 14 ஏக்கராமே. கோயிலைச் சுத்திதான் ஊரே வளர்ந்துருக்கு நம்ம மதுரையைப்போல. குளத்தில் ஏராளமான மீன்கள்.புலியைப்பார்த்துப் பூனை சூடு போட்டுக்கிட்டது. நம்ம இளவஞ்சியைக் காப்பியடிச்சு நானும் ஒன்னும் எடுத்தேன்:-))))
அப்படியே நம்ம காந்திமதியம்மனையும் போய்ச் சேவிச்சுட்டு வந்தோம். ரெண்டுமே தனித்தனிக் கோவிலாத்தான் இருந்துச்சாம். இதை இணைச்சு மண்டபம் ஒன்னு கட்டுனது சில நூற்றாண்டுகளுக்கு முன்புதானாம்(1647 கி.பி). இந்த மண்டபத்தை அம்மா மண்டபமுன்னு சொல்றாங்க. அன்னிக்கு எதோ கூட்டம் நடக்குறாப்போல நிறைய வெள்ளைவேட்டி ஆண்கள் ரெண்டுபக்கமும் வரிசையாத் தோளில் துண்டோடு உக்கார்ந்துருந்தாங்க. ஒரு பக்கம் மூட்டைகளா அடுக்கி வச்சுருக்கு. நெல்வேலி நெல் மூட்டைகள்? ஒருவேளை கோயில் நிலத்துக்கானக் குத்தகைக்காரர்களா இருக்கலாமோன்னு நினைச்சேன். தொந்திரவா இருக்கவேணாமுன்னு 'சட்'னு அந்த இடத்தை கடந்து போனேன் அம்மனை நோக்கி. அலங்கார பூஷிதை, அப்படியே அண்ணன் மாதிரியே:-) (பாவம். புருஷந்தான் பேயாட்டம் ஆடறார்)
தலவிருட்சமா மூங்கில் புதர் ஒன்னு இருக்கு. கோயில் முழுசும் சிற்பங்கள் அப்படியே மனசை வாரிக்கிட்டுப்போகுது. ஒன்னு விடாமச் சுத்திப்பார்க்கணுமுன்னு மனசு நினைச்சாலும்....... இந்த பிரமாண்டத்துக்கே ஒரு வாரம் வேண்டி இருக்கும்போல. இவ்வளோ நல்லா இருக்குமுன்னு தெரிஞ்சிருந்தா இன்னும் ரெண்டு நாள் கூடச்சேர்த்திருக்கலாம்.
பிள்ளையாரைப் பார்த்துட்டுப் பிரகாரத்தில் திரும்புனதும் அதோ.... நம்மாளு 'ஆடி அசைஞ்சு' நின்னுக்கிட்டு இருக்கார். செல்லம்போல அந்தச் சின்னக்கண்ணாலே கொஞ்சல் பார்வை. பெயர் என்னவா இருக்கும்? வேறென்ன நம்ம 'காந்திமதி'தான்.'சட்'னு (தும்பிக்)கையை நீட்டிக் காசு வாங்குனவுடன் வாயெல்லாம் சிரிப்பு(எனக்குத் தோணுச்சு) கோபால் கெமெராவை எடுத்து ஃபோகஸ் செய்யும்போது நம்ம பாகர் தேர்ந்த இயக்குனரா டைரக்ஷன் மூடுக்கு வந்துட்டார். 'இங்கே இன்னும் கொஞ்சம் கிட்டே இந்தப் பக்கம் வாங்கம்மா. நீங்க கேமெராவைப் பாருங்கம்மா. இன்னும் ஒரு அடி பின்னாலே போங்க சார். இப்ப எடுங்க சார்' இப்படி. தும்பிக்கையால் என் தலையை வருடிக்கிட்டுக் காந்திமதி சிரிக்கிறாள். ரெண்டு மூணு க்ளிக்குக்குப் பிறகு காந்திமதிகிட்டேச் சொல்லிட்டுக் கிளம்பினோம். கோபால் படமெடுக்க நின்ன இடத்திலிருந்து அப்படியே எதிர்ப்பக்கம் நடக்கும்போது இவள் என்ன பண்ணாத் தெரியுமா? ஆச்சரியமான ஆச்சரியம் எனக்கு. சின்னத் தலை ஆட்டலுடன் கையைத் தூக்கி 'வா வா'ன்னு கோபாலை இந்தக் பக்கம் கூப்புட்டாள். 'கூப்புடறா, இந்தப் பக்கம் வாங்க'ன்னதும் இவர் வந்தாரா..... ஆசையோடு கையைத்தூக்கி அவர் தலையில் வச்சு ஒரு ஆசீர்வாதம் பண்ண அழகு இருக்கே....அப்பப்பா.... சொல்லி மாளாது. என்ன ஒரு அறிவு பாருங்களேன். அன்னிக்கு முழுக்க இதைச் சொல்லிச் சொல்லியே மாய்ஞ்சுபோயிட்டேன். செல்லம்.... என்னா அறிவுப்பா....
அதே பிரகாரத்தில் 'காந்திமதி' ன்ற பெயர்ப்பலகையோடு இவளுக்கான அறை படுசுத்தமா, விஸ்தாரமா இருக்கு. கோவிலில் குடி இருப்பு!
கொஞ்சம் பெரிய சைஸுலே இருந்த நவகிரகங்களைச் சுத்திட்டு, பக்கத்துலே இருந்த நந்திக்கு 'டாடா' சொல்லிட்டுக் கோவிலை விட்டு வெளியே வந்தோம். பளிச் என்ற பகல் வெளிச்சத்தில் இருட்டுக்கடை (பார்க்கவே பழைய கடையா) மூடிக்கிடக்கு.பட்டப் பகலில் இருட்டுக்கடை
நம்ம தி.நகர் ரத்னா ஸ்டோரை நினைவூட்டும் வகையில் ஆண்டிநாடார் பாத்திரக்கடை. ஜானகிராமுக்குப்போனோம். எனக்கே எனக்காக அவுங்க ஒரு ஸ்பெஷல் பண்ணிவச்சுருக்காங்கன்றது சவுத் இண்டியன் சாப்பாட்டுத் தட்டு வந்தப்பத் தெரிஞ்சது:-)))))
எத்தனைன்னு பதிவுலே போட? இன்னும் கொஞ்சம்(?) படங்கள் இந்த ஆல்பத்துலே இருக்கு. பாருங்க.
Posted by
துளசி கோபால்
at
5/02/2009 07:00:00 PM
30
comments
Labels: அனுபவம், காந்திமதி, நெல்லையப்பர்
