Tuesday, November 12, 2013

கொஞ்சநாள்......சும்மா இரு! (????)

கொதிக்கும் உடம்போடு வீட்டுக்குள் நுழைஞ்சவர் விடுவிடுன்னு நேரா உள்ளே போய் படுத்துட்டார். தொட்டுப் பார்த்தால் நல்ல ஜுரம். கொஞ்ச நேரம் தூங்கட்டும் என்று விட்டுட்டு நான் போய்க் கொஞ்சம் கஞ்சி வைக்க அடுப்பைப் பத்த வச்சேன்.

சீன தேசம் போனவர் இப்படி  ஜுரம் பிடிச்சு வந்துட்டாரேன்னு கலக்கம். மூணு நாள் முன்னால்தான்  எங்கூரில் இருந்து ஆக்லாந்து போய் அங்கிருந்து ஏர் நியூஸிலேண்ட்  விமானத்தில்  ஷாங்காய் போயிருந்தார்.  இது ஒரு நீண்ட நெடும்பயணம்தான். நடுராத்திரி நேர ஃப்ளைட் என்பதால் தூங்கிக்கிட்டேப் போய்ச் சேரலாம். பனிரெண்டரை மணி நேரம் பறந்தபின்  சீன நேரம் காலை எட்டரைக்கு ஹொட்டேல் அறைக்குப் போனவுடன் குளிச்சு ரெடியாகி பத்து மணிக்கு ஃபேக்டரிக்குப் போயிட்டார்.  அதுவும் கிட்டத்தட்ட ஒரு மணி நேர கார் பயணம். தொழிற்சாலைகள் எல்லாம் எப்பவும் நகருக்கு வெளியில்தானே!

ஆரம்பகட்ட  வேலைகளை முடிக்கவே மணி மூணரைக்கும் மேல். பகல் சாப்பாடு இன்னும் நடக்கலைன்னு வயிறு ஒரு பக்கம் கூவ ஆரம்பிச்சு ரொம்ப நேரமாயிருக்கு. சின்ன ஊர் என்பதால் சாப்பிடும்  இடங்கள் ஒன்னும் சரியில்லை.அப்போதைக்கு கூச்சலை அடக்க ஒரு இடத்தில் சாண்ட்விச் வாங்கி சாப்பிட்டு இருக்காங்க இந்தக்குழுவினர்.  ட்டூனா சேண்ட்விச்சாம்.

நம்ம புள்ளி மறுநாள் விடிகாலையில் வயித்து வலியோடு எந்திரிக்கிறார். என்னை ஃபோனில் கூப்பிட்டு வலியைச் சொன்னதும் ஹொட்டேல் டாக்டரைப் பார்க்கச் சொன்னேன். நம்ம அதிர்ஷ்டம் பெரிய ஹோட்டேலா இருந்தும் டாக்டர் இல்லை(யாம்)  பக்கத்தில் ஒரு மருத்துவமனை இருக்குன்னு வரவேற்பில் சொன்னதும் அங்கே போயிருக்கார். இண்டர்நேஷனல் பிரிவு ஒன்னு தனியா அங்கே இருக்காம்.

இன்றைக்குக் காலை எட்டுமணிக்கு இவரை வேறொரு ஃபேக்டரிக்குக் கூட்டிப்போக வண்டி வரும். ரெண்டரை மணி  நேரப் பயணம் அங்கே போய்ச்சேர. நமக்கு வயித்து வலி என்பதால் மற்றவர்களைப் போகச் சொல்லிட்டு இவர் மருத்துமனைக்குப் போயிருக்கார். ஃபுட் பாய்ஸனிங் என்று பழியை ட்டூனாவின் மேல் போட்ட  டாக்டர்  சிங்கையில் உள்ள இன்னொரு டாக்டரிடம்   கலந்து பேசிட்டு  ஆண்ட்டிபயாடிக் கொடுத்து ஒரு பாட்டில் ஸலைனும் ஏத்தியிருக்கார். கூடவே ஆயிரம் டாலர்கள் சார்ஜ்.

வயித்துவலி என்பது  உண்மையா வலது பக்க மார்புக்கூட்டின் கீழே பிச்சுப்பிடுங்கும் வலி. சீனாவிலிருந்து எனக்கு ஃபோனில் வலி விவரம் சொல்லி பயணத் திட்டத்தை கேன்ஸல் செஞ்சு  அன்றே அங்கிருந்து கிளம்பலாமுன்னா, சீன மருத்துவர் பயணம் செய்யும் நிலையில்  உடல் இல்லைன்னு சொல்லிட்டார்:(  அப்படியும் மறுநாளாவது அங்கிருந்து  புறப்பட்டே ஆகணுமுன்னு  டிக்கெட்டை  மாத்திட்டார் நம்மவர்.


என்னுடைய நெருங்கிய தோழி இங்கே நியூஸியில் நம்மூரில்  மருத்துவர். அவருக்குத் தகவல் சொன்னதும், வலப்பக்க வலி என்றால் உடனே கவனிக்கணும். ஜூரம் எவ்ளோ இருக்குன்னு கேட்டுச் சொல்லுங்கன்னார். டிக்கெட்டை மாற்றியெடுத்த விவரமும், சனிக்கிழமைக்கு பதிலாக வெள்ளியே வருகிறார் என்றும்  தகவல் தந்தேன்.  சீனத்தில் வியாழன்  பகல் ரெண்டேகாலுக்கு ஃப்ளைட். விமானம் ஏற வந்தவரைக் காய்ச்சல் காரணம்  பயணம் செய்ய அனுமதிக்கலை. நாம்  அந்த வழியில் நடந்து வரும்போதே நம் உடல் வெப்பநிலையை ஸ்கேன் செஞ்சு அளக்கும் கருவிகள் அங்கே வச்சுருக்காங்க. சிங்கையிலும் பார்த்திருக்கேன்.

உடனடியாக ஊர் திரும்பியே ஆகணுமுன்னு இவர் பிடிவாதமாக் கேட்டு விமானத்துக்குள்ளே  வந்துட்டார்.  ரெண்டு நாளா கொலைபட்டினி. வெறும் தயிர் மட்டும் கொஞ்சம் சாப்பிட்டுருக்கார். சீனதேசத்து ஹொட்டேலிலும் கஞ்சி செஞ்சு கொடுத்தாங்களாம். அவுங்க நல்லா இருக்கணும்.

பனிரெண்டு மணி நேர ஃப்ளைட். எப்பவும்  கிழக்கு நோக்கிய பயணம் என்றாலே டெயில் விண்ட் காரணம் கொஞ்சம் சீக்கிரமா  வந்துருவோம். காலை ஏழுமணிக்கு ஆக்லாந்து வந்ததும் எனக்குத் தகவல் சொல்லிட்டு,  லோக்கல் ஏர்ப்போர்ட்  வந்து, ஒன்பது மணி ஃப்ளைட் பிடிச்சு நம்மூருக்கு வந்துட்டார்.   வாசலில் டாக்ஸி  வந்து நின்னப்பச் சரியா பதினோரு மணி.
தோழி இடைக்கிடை  ஃபோன் செஞ்சு நிலவரத்தைக் கேட்டுக்கிட்டே இருந்தாங்க. பதினொன்னரைக்குக்  கூப்பிட்டாங்க 'வந்தாச்சா?'   வந்து ஜுரத்தோடு படுத்துத் தூங்கறார்.


எவ்ளோ ஜுரம் இருக்குன்னு பார்த்தியா?  இல்லை. இதோ பார்க்கிறேன். 39.5.  உடனே ஆஸ்பத்திரிக்குக் கிளம்பிப்போங்க. குடும்ப டாக்டர் வேணாம். நேரடியா மருத்துவ மனைக்கே போயிருங்கன்னதும் 'ஆம்புலன்ஸைக் கூப்பிடவா'ன்னேன். " வேணாம்.  கணவரை  அனுப்பறேன்.அவர் உங்களை ஆஸ்பத்திரியில் கொண்டு விடுவார்.  அவருக்கு ஒரு நைட் ட்ரெஸ் மட்டும் கையோடு எடுத்துக்குங்க"

நண்பர் (தோழியின் கணவர்)  வந்தவுடன் கிளம்பிப் போனோம். உடம்பின் நடுக்கம் தாங்கமுடியாமல் பெரிய ஜாக்கெட் ஒன்றை போட்டுக்கிட்டார் நம்ம கோபால்.

மெயின் ரோடில் இப்பெல்லாம் பயங்கர  ட்ராஃபிக்:(  நிலநடுக்கம் வந்தபின் கிழக்குப்பகுதி மக்களும், வியாபார நிறுவனங்களும் நம்ம மேற்குப் பகுதிக்கு இடம் பெயர்ந்ததால்  எங்க ஏரியா எப்போதும் ஒரே கஜகஜன்னு கிடக்கு!

நம்ம வீட்டுக்கும் மருத்துவமனைக்கும் ஆறே கிமீ தூரம்தான். முந்தியெல்லாம் அஞ்சாறு நிமிசத்துலே போயிருவோம். இப்ப அதுவும் இன்னிக்கு இருவது நிமிசத்துக்கு மேலாச்சு. எமெர்ஜென்ஸியில் இறக்கிவிட்டுட்டு, பார்க்பண்ணிட்டு வரேன்னு சொன்ன நண்பரை வேண்டாம்.நீங்க ஆஃபீஸ்போங்க. நான்  எதாவது தேவைன்னா ஃபோன்  செய்யறேன். இல்லேன்னா 'டெக்ஸ்ட்'பண்ணிடறேன்னு ஜம்பமாச் சொன்னேன்.

அவசர சிகிச்சையில் கொஞ்சம்பேர் காத்திருக்காங்க. முதலில் ஒரு கவுண்ட்டரில்  இருக்கும் நர்ஸ்களிடம் பிரச்சனை என்னென்னு சொல்லிட்டு அடுத்த கவுண்ட்டரில் நம்ம பெயரை ரெஜிஸ்ட்டர் பண்ணிக்கணும்.  'ஜுரத்தோடு ஓவர்சீஸ்லே இருந்து திரும்பி இருக்கார்' சொன்னேன். பக்கத்து கவுண்டரில் நம்ம ஸர் நேம் சொன்னதும் நம்ம ஜாதகம் முழுசும் கணினியில் காமிச்சது.  தற்போதைய விலாசமும் தொலை பேசி, அலைபேசி எண்களை சரிபார்த்தபின்  இருக்கைகளில் காத்திருக்கச் சொன்னார்கள். நாலெட்டு நடந்து உட்காருமுன்  நம்மைத்தேடி ஓடிவந்த மருத்துவமனைப் பணியாளர்  நம்மை உள்ளே கொண்டு போயிட்டார். ஓவர்சீஸில் இருந்து  ஜுரத்தோடு  வந்தால்  போச்சு. அதுவும் சீனத்திலிருந்து வந்துருக்கார்.  பறவை, பன்றின்னு எத்தனையோ காய்ச்சல் இருக்கு. நம்மால் அவை  கம்யூனிட்டிக்குள் பரவிவிட்டால்............   ஐயோ:(  Threat to the communityன்னு  நம்மை ஐஸொலேட்  பண்ணிருவாங்க. 

ஆஸ்பத்ரி ட்ரெஸ் போட்டுக்கச்சொல்லி  கவுனைக் கையில் கொடுத்ததும்  எனக்கு 'தலைகால்' புரியலை. தனி அறை ஒன்றில் படுக்கவைத்து பரிசோதனைகள், கேள்விகள்  எல்லாம் ஆரம்பிச்சது.  நான் ஒரு பக்கம் இருக்கையில் உக்கார்ந்து  கவனித்துக்கொண்டு இருந்தேன். ஏழெட்டு ஒயர்களுடன்  மார்புப்பகுதியை  மானிட்டரில் இணைச்சுட்டு, நாடித்துடிப்பைக் கவனிக்க  வலது கை பெருவிரலுக்கு தொப்பியும் போட்டாச்சு. ஐவி  ட்ரிப்ஸ் போட ஊசியும் குழாயும் குத்தி வச்சுட்டாங்க. ரொம்ப தெரிஞ்சமாதிரி மாறும் பச்சை எண்களைப் பார்த்துக் கிட்டு  இருந்தேன்.

ரெண்டு மூணு மருத்துவர்கள்,  மேல் அண்ட் ஃபீமேல் நர்ஸுகள் இப்படி மாறி மாறிவந்து மீட்டிங் போட்டுட்டு அப்பப்ப என் பக்கம் திரும்பி நோ ஒர்ரீஸ். ஹி வில் பி ஆல்ரைட்ன்னு சொல்லிட்டுப் போனார்கள்.  இதுக்கிடையில் எனக்கு காஃபி டீ எதாவது வேணுமான்னு செயிண்ட் ஜான்ஸ் ஊழியர்களின் உபசரிப்பு வேற.

இப்படியே ஒரு மணி நேரம் ஓடிப்போனது. படுக்கையுடன் கட்டிலை உருட்டிக்கிட்டே எமெர்ஜன்ஸி  ஏரியாவின் இன்னொரு  பகுதியில் இருந்த  அறைக்குக் கொண்டு போனாங்க. 'மேல்நர்ஸ்' ஒரு நாற்காலியைத் தூக்கிவந்து போட்டு இதில் உக்காந்துக்குங்கன்னு உபசரிச்சார்.

எனக்கு வேற ஒரு பிரச்சனை.  இப்ப ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காக மருந்து சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன்.  சாப்பாட்டுக்கு அரை மணி முன் மருந்து உள்ளே போகணும்.  அரைமணிக்குப் பின்  சோறெங்கேன்னு வயிறுசண்டை போட்டுரும். இன்னிக்கு  மருத்துவமனைக்கு  வருமுன் மருந்தை விழுங்கிட்டு, கையோடு லஞ்ச் கொண்டு வந்திருந்தேன்.  இவரோ அப்பப்ப,  போய் சாப்பிடுன்னு  சொல்லிக்கிட்டே இருக்கார்.  கொஞ்சம்நேரம் ஆகட்டும். வெளியே போய் சாப்பிடறேன்னு சமாளிச்சுக்கிட்டே இருந்தேன்.

பகல் ரெண்டரை ஆகி இருந்தது. இவரும் கண்ணை மூடி  உறங்க ஆரம்பிச்சார். நான் பூந்தோட்டம் உள்ள நதிக்கரைக்குப் போனேன்.  போனவருசம் இதே சமயம் மகளுக்கு உடல்நலமில்லாமல் மருத்துவமனையில்  அதிக நாட்கள் இருந்தாள். அப்போ தினமும் வந்து போனதில் (எங்கே போறது? காலையில் வந்தால் நாள் முச்சூடும் இங்கேதான் இருப்பேன்)  எதெது எங்கெங்கேன்னு  ஏறக்குறைய எல்லா இடங்களும் அத்துபடி.  

லஞ்சை முடிச்சுட்டு (அரிசி உப்புமா!)  அலைபேசியை எடுத்து மகளுக்கு டெக்ஸ்ட் ஒன்னு கொடுக்க ஆரம்பிச்சேன்.  இது ஒரு பெரிய விஷயமான்னு  நினைப்பீங்க. எனக்கு இது ஏதோ மலையைப் புரட்டும் சமாச்சாரம். வளர்ந்து விட்ட டெக்னாலஜிகளில்  இந்த செல்ஃபோன்  மட்டும் மூளைக்குள் நுழையமாட்டேங்குது. ஒவ்வொருமுறை டெக்ஸ்ட் (எஸ் எம் எஸ்) அனுப்பறதுக்குள்ளே தலையால் தண்ணி குடிச்சது போல்தான்:(  இந்த  அழகுலே  இது எனக்கு புது ஃபோன் வேற. மகள் புதுசு வாங்குனதும் பழசு எனக்கு வந்துரும்.  ஒரு அவசரம், ஆபத்துக்குன்னுதான் செல்ஃபோன் வச்சுருக்கேனே தவிர அதோடு குடித்தனம் பண்ணுவதற்கில்லையாக்கும் கேட்டோ!

தட்டித்தடுமாறி 'அப்பா   எமெர்ஜென்ஸியில்'  சேதி அனுப்பிட்டேன். இதுக்கே காமணி ஆச்சுப்பா:(  திரும்ப அவசர சிகிச்சைக்குள் போய்  உள்ளே இருக்கும் நோயாளியைப் பார்க்கணும்.நான்  நோயாளியின் மனைவி'என்றதும்  ஒரு பட்டனை அமுக்கி  என்னை உள்ளே அனுமதிச்சாங்க. நேரா இவர் இருந்த அறைக்குப் போனால்........... ஆளைக் காணோம். அறை காலி!

தொடரும்........

PINகுறிப்பு: விஸ்தரிப்புக்கு  மன்னிக்கணும். இது கோபாலின் சேமிப்புக்கு:-)





35 comments:

  1. என்னங்க.. இந்த விஷயத்துலே சஸ்பென்சா...?

    இப்ப கோபாலு எப்படி இருக்காரு ?

    எதுக்கும் அடையாறு அனந்தபத்மநாப சாமி கோவில்லே இருக்கும்
    ஆஞ்சநேயனை வேண்டிக்கறோம்.

    நல்லபடியா குணம் ஆகி வூட்டுக்கு வரணுமே.

    சுப்பு தாத்தா.
    மீனாட்சி பாட்டி.

    ReplyDelete
  2. படிக்கவே பதட்டமாக இருக்கு துளசி.
    ஏதோ திகில் சினிமா பார்க்கிற மாதிரி.
    நானும் தண்ணித்துறை ஆஞ்சனேயரிடம் சொல்லிட்டு வந்தேன்.

    ReplyDelete
  3. :-(
    கோபால் அண்ணா இப்போ எப்படி இருக்கார் டீச்சர்?

    ReplyDelete
  4. உங்கள் கணவர் நலமுடன் வீடு திரும்பி விட்டார் இல்லையா? இத்யார் இது ரொம்பத் தெரிந்தாற் போல் என்று யோசிக்கிறீர்களா? உங்கள் பதிவுகளை படிப்பதுண்டு. இரண்டாம் முறையாக கருத்திடுகிறேன். படித்தவுடன் நலம் விசாரிக்காமல் நகர முடியவில்லை.

    ReplyDelete
  5. உங்களை எப்படித் தொடர்வது?தெரியவில்லையே!

    ReplyDelete
  6. விரைவில் நலம்பெற வேண்டுகின்றோம்.

    ReplyDelete
  7. அக்கா!
    அத்தார் நல்லபடி குணமாகியிருப்பார் என நம்புகிறேன்.
    என்ன? வருடா வருடம் வைத்தியசாலை கூட்டி வருகிறது.
    இந்த மன, உடல் உளைச்சலிலும் உங்கள் நகைச்சுவை உணர்வு குன்றவில்லை.
    இந்த அலைபேசிச் சமாச்சாரத்தில் , நானும் உங்களைப் போலே//ஒரு அவசரம், ஆபத்துக்குன்னுதான் செல்ஃபோன் வச்சுருக்கேனே தவிர அதோடு குடித்தனம் பண்ணுவதற்கில்லையாக்கும் //
    இதைப் படித்துச் சிரித்தேன். ஆனானப்பட்ட பதிவுலக வித்தகி துளசி அக்காவுக்கே , அலைபேசிச் சமாச்சாரம் பிடிபடவில்லை. நான் ஏன் இது பற்றி தெரியாததையிட்டு அலட்டிக் கொள்ளவேண்டும்.

    ReplyDelete
  8. வேலை தூரம் தொலைவு
    நம்மை என்ன பாடுபடுத்தி விடுகிறது
    சௌகரியம் ஆனபின்தான் பதிவு
    போட்டிருப்பீர்கள் என உணர்கிறேன்
    இறைவனுக்கு நன்றி

    ReplyDelete
  9. படிக்க சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. ஆனால் இன்னும் ரொம்ப இழுக்குமோ? - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்) சென்னை

    ReplyDelete
  10. அண்ணா உடம்பு நல்லபடியாத் தேறி வரட்டும்..

    ReplyDelete
  11. Hope Gopal sir is o.k.. :(( Hard to read..

    ReplyDelete
  12. வாங்க சுப்புரத்தினம் ஐயா & மீனாட்சி அக்கா,

    ஆஞ்சநேயனை வேண்டியது வீண் போகலை.

    கோபால் குணமடைந்து வருகிறார்.

    உங்கள் அன்புக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்களும் நன்றிகளும்.

    ReplyDelete
  13. வாங்க வல்லி.

    முதல் ரெண்டுநாள் பேயறைஞ்ச மாதிரித்தான் இருந்தேன்.

    ஆஞ்சிகிட்டே சொன்னதுக்கு நன்றிப்பா. அவன் பொறுப்பு இனி!

    ReplyDelete
  14. வாங்க ரிஷான்.

    கோபால் குணமடைந்து வருகிறார்.

    அன்பான விசாரிப்புக்கு நன்றி

    ReplyDelete
  15. வாங்க ராஜலக்ஷ்மி பரமசிவம்.

    கோபால் நலமடைந்து வருகிறார். அன்பான விசாரிப்புக்கு நன்றிகள்.

    தொடர்வதற்கான 'உரலை'இன்னும் போட்டுக்கலை.

    நம்ம தளத்தில் பொதுவாகத் திங்கள், புதன், வெள்ளி என்று வாரம் மூன்று இடுகைகளை வெளியிடுவது வழக்கம். இப்போ உடல்நலக் குறைவு காரணம் எல்லாம் கொஞ்சம் குழறுபடியாக இருக்கு:(

    ReplyDelete
  16. வாங்க தருமி.

    கோபாலின் நன்றி இத்துடன்.

    என் நன்றிகளும்தான்.

    ReplyDelete
  17. வாங்க யோகன் தம்பி.

    கோபால் குணமடைந்து வருகிறார். Thanks.

    டெக்னாலஜியில் ஒட்டாமப் போயிருவோமோன்னு பயம் வந்துருக்கு.

    கோபாலின் மருந்து மாத்திரைகளுடன் இன்னொரு மாத்திரையும் முந்தாநாள் வாங்கிக் கொடுத்திருக்கு.

    Samsung Galaxy 10.1 2014 edition.

    இதுலே ஆண்ட்ராய்ட் வேற இருக்காம். அதைத் தெரிஞ்சுக்க இன்னும் தீவிரமா மண்டையை உடைச்சுக்கணும் நான்:(

    ReplyDelete
  18. வாங்க ரமணி.

    வேற நாட்டுக்குப் போயிருக்கும்போது உடல்நிலை பாதிக்கப்பட்டால் அவதிதான்:(

    கொஞ்சம் குணமானதும்தான் கணினியையே திரும்பிப் பார்த்தேன்.

    இறைவனுக்கு நன்றிகளுடன், உங்கள் அன்பான விசாரிப்புக்கும் எங்கள் நன்றிகள்.

    ReplyDelete
  19. வாங்க கவிஞரே!

    கொஞ்சம் இழுக்கும்தான். வலிக்க வலிக்க இழுவை. வேற வழி????

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  20. வாங்க அமைதிச்சாரல்.

    அன்புக்கு நன்றிப்பா. அவர் சீக்கிரம் குணமாகி, என்னைப் பார்த்துக்கணும்.

    ஒரு வீட்டில் ரெண்டு நோயாளிக்கு இடமில்லையாக்கும், கேட்டோ:-))))

    ReplyDelete
  21. வாங்க அகிலா.

    குணமடைந்து வருகிறார்.

    அன்பான விசாரிப்புக்கு நன்றிப்பா.

    ReplyDelete
  22. நலமடைந்து சீக்கிரமே வீட்டுக்கு வர வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  23. இப்போது குணமடைந்து வருகிறார் எனும் செய்தி ஆறுதல் தருகிறது.

    ReplyDelete
  24. என்ன டீச்சர், விளையாடுறீங்களா?

    "தொடரும்"-ல்லாம் வந்தியத் தேவன் கதைக்குப் போட்டா, suspense வச்சிப் படிக்கலாம்;
    தெரிஞ்சவங்க கதையில் போட்டா என்னத்துக்கு ஆகுறது?

    நானே உடம்பு சரியில்லாம, மருத்துவ மனையிலே சேர்ந்து, வீடு திரும்பி..
    ரொம்ப நாள் கழிச்சி இப்பத் தான் உங்க பதிவுக்கு வாரேன்..

    இங்க வந்தா, அதே போலொரு கதை, ஊடால உங்க குறும்புகளோட:)
    //ஒரு அவசரம், ஆபத்துக்குன்னுதான் செல்ஃபோன் வச்சுருக்கேனே தவிர அதோடு குடித்தனம் பண்ணுவதற் கில்லையாக்கும் கேட்டோ!//
    --------

    கோபால் சார், விரைவில் புத்துணர்ச்சி பெறட்டும்!
    காக்க காக்க கனகவேல் காக்க!

    ReplyDelete
  25. Best wishes for speedy recovery. God Bless... rajamani

    ReplyDelete
  26. என்னங்க ,
    இப்போதான் pc சரி பண்ணினதும் துளசிதளம் பாத்தா ....

    அப்புறம் முந்தின பதிவில் கோபால் அவர்களுக்கு நலமின்மை என்று சொல்றீங்க . வீட்டுக்கு வந்துட்டாரா ?இப்போ தேவலாமா . உங்க கை எப்படி இருக்கு ?please do reply.

    ReplyDelete
  27. என்னங்க இப்போதான் pc சரி பண்ணினதும் துளசிதளம் பாத்தா ....

    அப்புறம் முந்தின பதிவில் கோபால் அவர்களுக்கு நலமின்மை என்று சொல்றீங்க . வீட்டுக்கு வந்துட்டாரா ?இப்போ தேவலாமா . உங்க கை எப்படி இருக்கு ?please do reply

    ReplyDelete
  28. I Believe Mr.Gopal is alright now

    ReplyDelete
  29. துளசிம்மா..இதை இப்பதான் படிக்கிரேன்.கோபால் சாருக்கு என்ன ஆச்சுன்னு என்ற என் மெயிலுக்கு பதில் இல்லை.இப்ப இப்படி ஒரு பகிர்வு..இதிலும் சஸ்பென்சா?நல்ல படி குணம் ஆகி வீடு திரும்பிய விபரம் தெரியும் நல்ல அரோக்கியத்துடம் நீண்டகாலம் உங்களுடன் சந்தோஷமாக குடித்தனம் நடத்த பிரார்தனை செய்கிறேன் துளசிம்மா வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  30. படித்துக் கொண்டே வரும் போது உங்கள் மனநிலை எப்படி இருந்துருக்கும் என்பதை யோசித்துக் கொண்டே வந்தேன்.

    நலம் பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  31. பரிவுடன், நலம் விசாரித்துப் பின்னூட்டிய நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றிகள்.


    நம்முடைய கஷ்டத்தை மிஞ்சும் வகையில் தோழி வல்லி சிம்ஹனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியும் இழப்பும் மனதை உலுக்கி விட்டது. ஒன்றும் செய்ய இயலாமல் ஒரேதவிப்புதான்:(

    இரு கோடுகள் தத்துவம்

    ReplyDelete
  32. கோபால் விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  33. கோபால் சார் ரொம்பவும் கஷ்டப்பட்டு இருக்கிறார். அவர் நலம் பெற ஆண்டவனிடம் வேண்டிக் கொள்கிறேன். ( படித்துவிட்டு தொடராமல் இருக்கும் உங்கள் பதிவுகளை நேற்று இரவுதான் படிக்க தொடங்கினேன் அயல்நாட்டு மருத்துவமனை நடைமுறை விஷயங்கள், படிக்கும் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும்..)

    ReplyDelete