நாகரஹாவு
யாராவது காஃபின்னு சொன்னதும் நமக்கும் காஃபித் தாகம் வந்துருமே. இதுக்குள்ளெ மலைப்பாதையிலிருந்து ஹைவே 17 இல் வந்து கலந்துருந்தோம். ஒரு இடத்துலே நிறுத்தி காஃபி ஆச்சு. ப்ரஷாந்துக்கு மட்டும் செட் தோசை. அது என்ன செட் தோசைன்னு நம்ம இவருக்கு ஒரு ஆர்வம். ஆனால்.....பசி இல்லை இப்போ வேணாமுன்னுட்டார். இனி நேரா உடுப்பிதான்.
வண்டி ஓடும்போது என்னவோ விசித்திரமா ஒரு சத்தம். நிறுத்திப் பார்க்கணுமுன்னு கோபால் கண்டிப்பாச் சொன்னார். பார்த்தா...... சந்தேகம் சரி. பின் சக்கரத்தில் பங்ச்சர். அதுவும் என் பக்கம்:( மெயின்ரோடைவிட்டுக் கீழிறங்கி நிறுத்துன்னு சொன்னதைக் கேக்காம நல்லா பிஸியா இருக்கும் ஹைவேயில் நிறுத்துனதும் நல்லதாத்தான் போச்சுன்னு சொல்லணும். ஸ்டெப்னி இருக்கு. மாத்திக்கலாமுன்னு ஜாக்கை எடுத்து தப்பான இடத்தில் வைக்கும் ப்ரஷாந்தைப் பார்த்துக் குலை நடுங்குனதென்னவோ நிஜம். வண்டி பேலன்ஸ் இல்லாமத் தரையில் உக்காரப்போகுது. சும்மா அப்படியே வண்டியை நிறுத்துனா ஆச்சா? ஹஸார்டு லேம்ப் போடணும் போடணுமுன்னு அதுவும் ஆச்சு. வண்டிக்குப் பக்கத்தில் நின்னாதான் 2 விபத்துகள் பலதும் நடக்கும். கீழே இறங்கி அந்தப் பக்கம் போய் நில்லுன்னு நம்ம இவர்வேற என்னிடம் உறுமுறார்.
ஒரு முறை சுத்துனவுடன் அந்தக்கம்பி ரெண்டாய் பிட்டுக்கிச்சு:(
சாலையில் கொஞ்ச தூரம் தள்ளி ஒரு (100 மீட்டர்தூரம்) கொஞ்சம் கீழே இறங்கிப்போகும் மண்பாதையில் இருக்கும் கடைகளில் வாசலில் உக்கார்ந்து பேசிக்கிட்டு இருந்தவர் வந்தார். அசப்பில் நம்ம ஜெய்கணேஷ் மாதிரி இருந்தார். மனிதர் பாவம், அந்த ஸ்டெப்னியை எடுக்கச் சாலையில் வண்டிக்கடியில் படுத்தெல்லாம் முயற்சி செஞ்சார். பொழுது சாயும் முன்னே அடுத்த ஊருக்குப் போயிறணும் என்ற திட்டம் அம்பேல்.
சாலையில் போய்க்கிட்டே இருந்த ஒரு மோட்டர்பைக் தடதடன்னு உறுமிக்கிட்டே வட்டமடிச்சு நம்ம வண்டிக்குப் பக்கம் வந்து நின்னுச்சு. ஹெல்மெட்டைக் கழட்டினார் ஒரு இளைஞர். அவர் பங்குக்கு அவரும் சாலையில் உருண்டு அங்கப்ரதக்ஷணம் செஞ்சும் ஒன்னும் நடக்கலை. எப்படியும் ரெண்டா உடைஞ்ச கம்பியை எங்கியாவது வெல்ட் செஞ்சால் வேலை நடக்கும்னு ஒரு தியரி. அதோ அங்கே ஒரு கடை இருக்குன்னு நம்ம ஜெய்கணேஷ் கை காட்ட , வெல்டிங் கடையைத் தேடி தன்னுடைய பைக்கிலே ப்ரஷாந்தைக் கூப்பிட்டுப் போனார். ஜெய்கணேஷும் தன்னுடைய கடைக்குப் போயிட்டார்.
சூரியன் மலைவாயில் விழுந்தான். இருட்டு வரப்போகுது. எங்கேதான் இருக்கோமுன்னும் தெரியலை.சுத்துமுத்தும் கண்ணை ஓட்டினேன். கோபாலடி ரோடு! தேவுடு காக்க வச்சுட்டான்ய்யா........
நாங்க ரெண்டு பேரும் பேய் முழியோடு நிக்கிறோம். ஒரு கால்மணி நேரத்துலே வெல்டு பண்ணக் கம்பி வந்தாச்சு. பார்த்துக்கிட்டே இருந்தார் போல நம்ம ஜெய் கணேஷ். அவரும் எழுந்து வந்தார். நல்லா டைட்டா வச்சுத் திருப்புன்னு கோபால் லெக்சர் கொடுத்துக்கிட்டு நிக்க..... ஆளாளுக்குக் கம்பியைத் திருப்ப ஒரு அனக்கமும் இல்லை. இதுக்கு நடுவில் போற வர்ற ஆட்கள் நின்னு பார்த்துட்டு, எங்கமேல் ஒரு (பரிதாப) லுக் விட்டுட்டுப் போறாங்க. போகட்டும், சக்கரத்தைக் கழட்டிப் பஞ்சர் ஒட்டிக்கலாமுன்னா..... அதையும் கழட்ட முடியலை ப்ரஷாந்துக்கு. மும்மூர்த்திகள் உதவலாமுன்னு போனா....
பைக் வாலிபர் சர்னு கிளம்பிப்போயிட்டார். பக்கத்துலே யாரையாவது கராஜ்லே இருந்து கொண்டுவரேன்னு போயிருக்கார் புண்ணியவான். நல்லா இருக்கணும். பத்தே நிமிசத்துலே ஒரு பையனோடு திரும்பி வந்தார். சின்னப் பையன். ஆனா எண்ணிப் பத்தே நிமிசத்தில் ஸ்டெப்னியை இறக்கி, டயர் மாத்தியாச்சு!!!! எல்லார் முகத்திலும் நிம்மதியான சிரிப்பு.
கம்பியை விட்டு முடுக்கறார். க்ருஷ்ணான்னு நான் மனசுலே கூப்புடவும், டடக் னு ஒரு சத்தத்தோடு ஸ்டெப்னி கீழே இறங்கவும் சரியா இருந்துச்சு. அடப்பாவி. எவ்வளோ அரற்றினேன். அப்பெல்லாம் பேசாம இருந்துட்டு இப்போ.....உதவும் பாவனையா?
எதுக்கும் அந்த டயருக்குப் பங்ச்சர் ஒட்டிக்கிட்டுப் போயிருங்க. இந்த பையன் ஒட்டித் தருவார்ன்னு சொன்னார் பைக் வாலிபர். ஆமாம் இவர் யார்? எதுக்கு வேலை மெனெக்கெட நம்மோடு ஒன்னரை மணிநேரம் மாரடிச்சு இருக்கார்?
இன்னோவா வண்டி ஏன் இப்படி ரோடோரத்தில் வாயைப் பிளந்துக்கிட்டு நிக்குது? கூடாதேன்னு பார்க்க வந்தாராம். இங்கே காபு (Kaup) ஏரியாவில் டொயோட்டாவுக்கான சேல்ஸ் மேனேஜராம். உடுப்பியிலிருந்து திரும்பி வந்துக்கிட்டு இருந்துருக்கார். அப்பத்தான் அவர் பெயரைக் கேக்கணுமுன்னு தோணி இருக்கு எனக்கு. அஷ்வத்.
நம்ம ஜெய்கணேஷ்க்கு நன்றி சொல்லிப் பெயரைக் கேட்டால்..... நாராயணா!!!!