Friday, September 30, 2005

நியூஸிலாந்து. பகுதி 8

நியூஸிலாந்தின் முக்கிய நகரங்கள்! **************************************

இந்த நாட்டிலே மிக முக்கிய நகரங்கள் என்று சொன்னால் வடக்குத்தீவுக்கு மூன்றும், தெற்குத்தீவுக்குஇரண்டுமாக மொத்தமே ஐந்து தான்!
வடக்கே ஆக்லாந்து, வெலிங்டன், ஹாமில்டன். தெற்கே கிறைஸ்ட்சர்ச், டனேடின். இந்த நகரங்களின் நகராட்சிகள்,நம் இந்திய நாட்டின் மாநில அரசுகளின் சட்டசபைபோல இயங்குகின்றன!


மேயருக்கு, முதலமைச்சருக்குள்ள செல்வாக்கு இருக்கிறது.
ஒரு மேயர், சூப்பர் மார்கெட்டில் வந்து சாமான்கள் வாங்கிக் கொண்டு போவதை நம் நாட்டில் எங்காவதுபார்க்கும் வாய்ப்பு உண்டா? இங்கே மேயர்களை மட்டுமல்ல, பாராளுமன்ற அங்கத்தினர்கள், மந்திரிகள்,ஸ்போர்ட்ஸ் ஆட்கள் போன்ற எல்லோரையும் சாதாரணமாகவே கடை கண்ணிகளில் பார்க்கலாம்.நம் ஊரில் உள்ளதுபோல 'பரிவாரங்களுடன்'(வட்டம்,சதுரம்னு) இருக்க மாட்டார்கள்!
முக்கால்வாசி நகராட்சிகளில் பெண்கள்தான் 'மேயர்'பதவி வகிக்கின்றார்கள். பெண்களுக்கு நல்ல நிர்வாகத்திறமைஉண்டு என்பதை நிரூபிக்கப் பிறந்தவர்களோ? குட்டிக் குட்டி ஊர்களுக்கும் (நம்ம பஞ்சாயத்துகள்) கூட மேயர் இருக்கிறார்கள்.


அடுத்த மாதம் தேர்தல் வரப்போகிறது. இந்த முறை மும்முனைப் போட்டி. தற்போதைய ஆண் மேயரும், சென்றமுறைஇருந்த பெண் மேயரும், கூடவே ஒரு வியாபாரியும் நிற்கிறார்கள். இன்று,ஒரே நேரத்தில் மூவரும் தொலைகாட்சியில் தோன்றிஅவரவர் கருத்துக்களைச் சொன்னார்கள். இதில் முதல் இரண்டுபேருக்கும் அரசியல் அனுபவம் உள்ளது.


இருவரும்பார்லிமெண்டு உறுப்பினர்களாக இருந்தனர். இப்போதுள்ள ஆண் மேயர் காவல்துறை மந்திரியாக இருந்தவர்.


நான் இங்கே வந்த புதிதில், இப்படி யாரையாவது பார்த்தால், 'எங்கோ பார்த்த முகமாக உள்ளதே' என்றுயோசிப்பேன். பிறகுதான் ஞாபகம் வரும் இன்னார் என்று. அவர்கள் முகங்கள்தான் அடிக்கடி தொலைக்காட்சியில்வருகின்றனவே!


தேர்தல் என்றால் விளம்பரங்கள் இல்லாமலா? அதற்காக நம் வீட்டின் காம்பவுண்டு சுவர்களில் எல்லாம் எழுதிவிட மாட்டார்கள்.அந்த விளம்பரங்களை, ஒரு 'பாலிப்ரொப்லீன்' அட்டையில் அச்சடித்து, அதைக் கொண்டுவந்து, வீட்டு உரிமையாளர்களிடம்காட்டி, அவர்கள் அனுமதி பெற்ற பின்பு, ஆணி அடித்துச் சுற்று சுவரையோ, '·பென்ஸ்'ஸையோ பாழாக்காமல்,ஸ்க்ரூ ஆணியைச்செலுத்தி மாட்டுவார்கள். தேர்தல் முடிந்தவுடன், அவர்கள் அதைக் கழற்றிக் கொண்டு போவார்கள். இதையெல்லாம், அந்தவேட்பாளரே, தனியாக வந்து செய்துவிட்டுப் போவார்! இந்த 'ஸ்டைல்'கூட இந்த வருடம் தான் ஆரம்பித்துள்ளது. (கூடுதல் இந்தியர்கள் வந்துவிட்டதால் இருக்குமோ?) முன்பு இது போல விளம்பரங்கள் இல்லவே இல்லை. நாளிதழில் மட்டுமேவிளம்பரங்கள் வந்துகொண்டிருந்தன்ன. இந்தப் பெரிய நகரங்களைத் தவிர சின்னச் சின்ன நகரங்களும் பல உள்ளன. இனி ஒவ்வொரு முக்கிய நகரங்களைப்பார்ப்போம்.
ஆக்லாந்து நகரின் ஜனத்தொகை ஏறக்குறைய 14 லட்சம். இதுதான் மிகவும் கூடுதலான ஜனங்களைக்கொண்டது. அணைந்து, குளிர்ந்து போன எரிமலைகளுக்கு நடுவே உருவாக்கிய நகரம் இது. சில இடங்களில் எரிமலையில்உள்ள நடுப்பகுதியைக் காணமுடியும். பெரிய 'க்ரேட்டர்' உள்ளது. நாம் அதில் இறங்கிப்போகலாம்!


வசதிகளும், வேலை வாய்ப்புகளும் அதிகமுள்ளது. இங்கே பன்னாட்டு விமானதளம் உள்ளது.மிகவும்பரந்து விரிந்த நகரம். மக்கள்தொகை போலவே வண்டி, வாகனங்களும் அதிகம் இங்கே. காலையிலும்மாலையிலும் போக்குவரத்தின் காரணம் அடிக்கடி'ட்ரா·பிக் ஜாம்' ஆகிவிடும் இங்கே. ஆனால் ஜனங்களின் வசதிக்காக ரயில் வசதிகளும் உண்டு. 'சிட்னி'யில் உள்ள பாலத்தைப் போலவே இங்கும் ஒரு பாலம் கடலின்குறுக்காகக் கட்டி இருக்கிறார்கள்.


'ஸ்கை சிடி' என்ற சூதாட்டக்களம் 'காஸினோ'வில் உள்ள கோபுரம்தான், பூமத்திய ரேகைக்குத் தெற்கேயுள்ளமிகவும் உயரமான கோபுரம் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இங்கே பார்வையாளர்கள் மேலே ஏறிச் சென்று பார்வையிடலாம்.அங்கே ஒரு இடத்தில் உள்ள கண்ணாடித் தரையில் நின்று பார்க்கும்போது, அதல பாதாளத்தில் கார்களும், சாலைகளும்இருப்பது கண்டு மிகவும் 'பயமாக' இருக்கும். ஐய்யோ, இந்தக் கண்ணாடி உடைந்தால்..... என்ற எண்ணம் வருவதைத்தடுக்க முடியாது!


அட்டகாசமான ஒரு மருத்துவமனை குழந்தைகளுக்காக உள்ளது. மருத்துவமனையா, குழந்தைகளுக்கானபூங்காவா என்ற எண்ணமே ஏற்படும்!
வீட்டு வாடகையும், வீட்டின் விலையுமே மிகவும் அதிகம் இங்கே. ஆனால் வேலை வாய்ப்பு இருக்கும்காரணத்தினாலும், சீதோஷ்ண நிலை (அவ்வளவாகக் குளிர் கிடையாது, ஆனால் மழை அடிக்கடி பெய்யும்)காரணத்தினாலும் இந்தியாவிலிருந்து வரும் நம் ஆட்கள் இங்கே குடியேறுவதை அதிகம் விரும்புகின்றனர்.


இந்துக் கோயில்களும் இங்கே இருக்கின்றன. இதுவரை கோயில்களின் எண்ணீக்கை ஏழாகிவிட்டன.இவற்றில் இரண்டு கோயில்கள் 'இஸ்கான் ஹரே கிருஷ்ணா'வைச் சேர்ந்தவை. நான்கு கோயில்கள் குஜராத்திகளால் கட்டப்பட்டவை. வெளிப்புறம் வேறு வேறு அமைப்புகளாகக்காணப்பட்டாலும், உள்ளே விக்கிரக அமைப்புகள் எல்லாமே ஒரே மாதிரி இருக்கும்.கிருஷ்ணர், ராதை, சிவலிங்கம், பிள்ளையார், ஹனுமான், சிம்ம வாகனத்தில் காளி என்று எல்லாமேபளிங்குக் கற்களினால் ஆன சிலைகள்.



இப்போது புதிதாக ஒரு 'முருகன்' கோயில் வந்துள்ளது. இது நம் தமிழ்நாட்டு வழக்கப்படி கற்சிலைஅமைப்பில் உள்ளது. இங்கே பிள்ளையார், ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் கற்சிலைகளும் உள்ளன.முக்கியமாகக் கவனிக்கவேண்டியது என்னவென்றால், இங்கே மூலஸ்தானத்தில் இருக்கும் கடவுளர்களுக்குஉற்சவமூர்த்திகளும் இருக்கின்றனர். அங்கே சமீபத்தில் 'தைப்பூசம் திருவிழா' மிக நல்ல முறையில் 'காவடி'வழிபாடுகளுடன் சம்பிரதாயமுறையில் நடந்தது.


இந்தக் கோயிலிலே இருக்கும் 'ஹாலில்' இசை, நடன வகுப்புக்களும், தமிழ்ப்பாடம் கற்பிக்கும் பள்ளியும்இருப்பது இன்னும் விசேஷம்!


இந்த நகரில் ஏராளமான 'சமோவாத் தீவைச்'சேர்ந்தவர்கள் இருக்கின்றனர். நியூஸிலாந்து அரசுக்கும், 'சமோவா'அரசுக்கும் உள்ள உடன்பாடு காரணம் வருடத்தில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையினருக்குக் குடியுரிமை வழங்கப்படுகிறது.இன்று தொலைக்காட்சியில் கிடைத்தத் தகவலின்படி நாட்டின் மொத்த ஜனத்தொகையில் இவர்கள் 15 சதமானம் இருக்கிறார்கள்!
·பிஜித்தீவிலிருந்து வந்த இந்தியர்களும் நிறைந்த அளவில் இங்கே இருக்கின்றார்கள். தடுக்கி விழுந்தால் அது மற்றொருஇந்தியர் மேலாகவே இருக்கும் என்னும்படி,நகரின் சில பகுதிகளில் நம்ம ஆட்களைக் காணலாம்!


ஆக்லாந்தில் 'ஒட்டீரா' என்னும் இடத்தில் கூடும் வாரச் சந்தையில் காய்கறிகள் நல்ல மலிவு விலையில் கிடைக்கிறது! இந்தியப் பொருட்கள் வீற்கும் கடைகளும் ஏராளம்! 22 காரட் தங்க ஆபரணங்களும் கிடைக்கின்றன என்றால் பாருங்களேன்!வெள்ளைக்காரர்கள் உபயோகிப்பது வெறும் 9 காரட் தங்கம்தான்! இந்த நாட்டிலெ தங்கம் கூட 50 சதமானம் தள்ளுபடிஎன்று விற்கிறார்கள். நம்புவீர்களா? ஆனால் இத்தனை கிராம், இவ்வளவு விலை என்று இருக்காது. எல்லாமே ஒரு நகைக்குஇந்த விலை என்றே இருக்கும்.
தமிழ்ச் சங்கம், கேரளா சமாஜம், ஆந்திரா க்ளப் என்று மொழிக்கொரு சங்கங்களும், எல்லாவற்றுக்கும் பொதுவாக இந்தியன்அசோசியேஷனும் நன்றாகவே நடந்துவருகின்றன. இது ஒரு 'குடியேறியவர்களின் நாடு' என்பதால் இங்கே ஏகப்பட்டசங்கங்கள் இருக்கின்றன. எதைச் சொல்வது எதை விடுவது என்று நினைத்து, நம் இந்தியர்களுக்கு தேவைப்படும்விஷயங்களையே சொல்கின்றேன்.


அடுத்து வருவது வெல்லிங்டன் நகரம். இதுதான் இந்நாட்டின் தலை நகர். தலை நகரங்களுக்கேயுள்ள தனிப்பட்ட வசதிகளும்இங்கே தாராளம்! ஆனால் இந்த நகரம் அமைந்துள்ளது ஒரு '·பால்ட் லைன்' மேலே!


பூமியின் அடியிலுள்ள பகுதிகள் பல ஒன்றுக்கொன்று நெருங்கிவந்து ஒட்டிகொண்டிருப்பது போல அமைந்துள்ளது என்று சொல்கிறார்கள் அல்லவா. அந்த மாதிரி இரண்டு பகுதிகள் ஒட்டினாற்போல இருக்கும் இடத்தையே '·பால்ட் லைன்'என்று சொல்கின்றனர். நில நடுக்கம் ஏற்படும்போது இந்தப் பகுதியில்தான் சேதம் அதிகம் இருக்குமாம். இதெல்லாம்தற்போதையக் கண்டுபிடிப்பல்லவா? இந்த விவரங்கள் ஒன்றும் அறியப்படாதிருந்த காலங்களில் ஏற்பட்ட நகரம்தான் வெல்லிங்டன். இந்த நாட்டின் சரித்திரமே 164 வருடங்கள்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


இங்கேயும் மக்கள் தொகை சுமாராக நாலேகால் லட்சம் உள்ளது.இந்தத் தொகை நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார எல்லைக்கும் சேர்ந்தது.இந்தியர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு அதிகம்.
நம் ஊரில் ஒவ்வொரு ஊருக்கும் சிறப்பாக சில பொருட்கள் இருக்குமல்லவா, 'காஞ்சீபுரம் புடவை, திருநெல்வெலி அல்வா, மணப்பாறைமுறுக்கு' என்று, அதெல்லாம் இங்கெ இல்லை. வடக்குமுதல் தெற்குவரை ஒரே சாமான்கள்.


இங்குள்ள எல்லா ஊர்களிலும் 'செயின் ஸ்டோர்' என்ற அமைப்பின்படி எல்லாக் கடைகளும் உள்ளது! உதாரணமாக '·பார்மர்ஸ்'என்ற நிறுவனம், நாடு முழுவதும் கிளைகளை வைத்துள்ளது. அவர்கள் விற்கும் பொருள்கள் எல்லாம் எல்லா ஊரிலும் அதே விலைதான்!(நமக்கும் நல்லதுதான். இங்கேயே வேறு ஊருக்குப் போகணுமென்றால், ஒண்ணும் சுமந்துகொண்டு போக வேண்டாம். அங்கங்கேவாங்கிக் கொள்ளலாம்தானே!)


இங்கும் நிறைய இந்திய மளிகை சாமான்கள் விற்கும் கடைகளும், நம் நாட்டு நகை, ஆடைகள் வீற்கும் கடைகளும் உள்ளன. இந்த ஊர்சாலைகள் எல்லாம் மிகுந்த ஏற்றம் இறக்கம் உள்ளதாகையால், 'ட்ராம்'களும் பேருந்துபோல் செயல்படுகின்றன. பேருந்துகளைப் பற்றிப்பேச்சு வந்துள்ளதால், இன்னொரு விஷயத்தையும் சொல்கிறேன்.



இந்த நாட்டிலே பேருந்துகளில் ஓட்டுனர் மட்டுமே இருப்பார். நடத்துனர் கிடையாது! ஓட்டுனரிடமே நீங்கள் பயணச்சீட்டைப் பெற்றுக்கொண்டுஉள்ளே போய் உட்காரவேண்டும். நீங்கள் குழந்தையுடன் பயணம் செய்பவராக இருந்து, குழந்தையின்'ஸ்ட்ரோலர்'( தள்ளுவண்டி)வைத்திருந்தால், ஓட்டுனரே இறங்கிவந்து அந்த வண்டியை, பேருந்தின் முன்புறம் மாட்டியுள்ள கொக்கியில் தொங்க விடுவார்.நீங்கள்இறங்கும் இடம் வந்ததும், அவரே வந்து அதை எடுத்து நடைபாதையில் உங்கள் அருகே வைத்தும் விடுவார்!
மேலும், சக்கர நாற்காலி உபயோகிப்பவர்களுக்காக, அவர்கள் அப்படியே ஏறுவதற்கு வசதியாக, நாம் பேருந்தில் ஏறுமிடத்தில் உள்ளபடிகள் அப்படியே கீழே சரிந்து, தரை வரை வந்து நிற்கும் வசதிகளும் உண்டு. அதற்கான விசையும் ஓட்டுனர் பொறுப்புதான்!பேருந்துகளில் பயணிக்கும்போது, நிறுத்தம் வந்தவுடன் இறங்கும்/ஏறும் வழிக்குள்ள கதவுகளைத் திறந்து மூடவும் பயன்படும் விசையும்ஓட்டுனரின் பொறுப்புதான். வண்டி ஓடும்போது எல்லாக் கதவுகளும் மூடப்பட்டே இருக்கும். வானொலி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகிக்கொண்டே இருக்கும்! இறங்கும் பயணிகள் ஓட்டுனருக்கு நன்றி தெரிவிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.


பல்வேறு கலைகளின் தலைநகர் என்று வர்ணிக்கபடும் வெல்லிங்டனில் நம் இந்துக் கோவில்கள் இரண்டு உள்ளன.


பாராளுமன்றக் கட்டிடத்தின் பெயர் 'தேன்கூடு- பீஹைவ்' பொருத்தமான பெயர்தான். இந்த நாட்டுப் பிரதமர் பெண்ணல்லவா?ராணித் தேனீ அரசாட்சி செய்கின்றது. பள்ளி மாணவர்கள்,அடிக்கடி விஜயம் செய்வது பாராளுமன்ற நடவடிக்கைகளைப் பார்வையிடத்தான்!வருங்காலம் அவர்கள் கையில் அல்லவா?


'முதல்வன்' என்று ஒரு படம் உங்களுக்கு நினைவு இருக்கிறதா? இதேபோல் மாநகராட்சிகளில், பள்ளி மாணவர்களை ஒரு நாள்'மேயராக' இருக்கச் செய்து அவர்களின் கருத்துக்களை வெளியிடவும் வாய்ப்பு அளிக்கப்படுகின்றது!
வடக்குத்தீவில் பெரிய ஊர்களான ஆக்லாந்து, வெல்லிங்டனைத்தவிர ' பார்மஸ்டன் நார்த், கிஸ்பர்ன் என்று நடுத்தரஅளவிலுள்ள ஊர்களும், இன்னும் பல சிற்றூர்களும், கிராமங்களும் உள்ளன.


நம் நாட்டைபோல், இங்கே தனித்தனிக் கல்லூரிகள் இல்லை. ஒவ்வொரு பெரிய நகரங்களிலும் ஒன்றாக ஐந்து யுனிவர்சிடிகள் உள்ளன.இங்கேயும் 'கல்வி'ஒரு வியாபாரமாகிவிட்டது. வேறு நாடுகளில் இருந்து இங்கே படிப்பதற்காக வரும் மாணவர்களிடம் வசூலிக்கும்'ட்யூஷன் தொகை' மிகவும் அதிகம். ஆனாலும் மாணவர்கள் வந்து கொண்டேதான் இருக்கிறார்கள். உள்நாட்டு மாணவர்களுக்குஅரசாங்கமே கல்வி கற்கக் 'கடன்'தருகிறது! படிப்பு முடியும்வரை வட்டியில்லாத கடன்!


மற்ற வசதிகள், உலகின் மற்ற பெரிய நகரங்களிலி இருப்பது போலவே! வெல்லிங்டன் நகரில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதுஇன்னும் ஒன்று பாக்கி உள்ளது. அது என்ன? காற்று. எப்போதும் காற்று கொஞ்சம் பலமாகவே வீசுவதால், புடவை கட்டும் நாம்மிகவும் கவனமாக இருக்க வேண்டும்! என்ன புரிந்ததா?



'ஹாமில்டன்' நடுத்தர அளவில் உள்ள நகரம். இங்குள்ள சர்வகலாசாலையின் பெயர் 'வைக்காட்டோ யுனிவர்சிடி' இதிலுள்ள 'வைக்காட்டோ' என்பது இந்த ஊரில் ஓடும் ஆற்றின் பெயர். மாணவர்கள் கூட்டம் மிகுந்த நகரம். நம்ம 'பஞ்சாப்'மாநிலத்தைச்சேர்ந்தவர்கள் நிறையவே இருக்கிறார்கள். அவர்கள் வழிபட 'குருத்துவாரா என்னும் சீக்கியக் கோயில்'கூட இங்குள்ளது!
பொதுவாகவே வடக்குத் தீவில் வேலைவாய்ப்புகள் அதிகம். கூட்டமும் அதிகம். காலநிலையும் பரவாயில்லை. நம் நாட்டில் முன்பு எப்போதோ 'வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது' என்று அரசியல் கட்சி ஒன்று சொல்லிக் கொண்டிருந்தது, இப்போது ஞாபகம் வந்துதொலைக்கின்றது!


அடுத்த வாரம் தெற்கே உள்ள தீவைப் பற்றிக் கூறுவேன்.


நன்றி: சங்கமம் 2004

Thursday, September 29, 2005

ஆரம்பப்பள்ளியிலே



போனபதிவுக்குப்
படம்போட்டா
காட்டமாட்டேன்னு
சொன்னதாலே
இதைத் தனியாப்
போடவேண்டியாதாச்சு.

நியூஸிலாந்து. பகுதி 7

இந்தக் கூத்தைக் கேளுங்க!

நேத்து சாயந்திரம் தொலைக்காட்சியிலே முக்கியமான நியூஸ் என்ன தெரியுமா?

பள்ளிகளில் மாணவர்களால் ஆசிரியர்களுக்கு கஷ்டம் ஏற்படுகிறதாம்! எந்த் மாதிரி?


ஆசிரியர்களை வன்முறையில் தாக்குவதும், இழிவாகப் பேசுவதும், மிரட்டுவதும், உணர்வுபூர்வம்கொடுமை செய்வதும், இனவெறி கொண்டு ஏதேனும் செய்வதும் இன்னும் இந்த மாதிரி சிலவும்!


போன வருடம் மட்டும் 637 நிகழ்வுகள் நடந்திருக்கிறதாம். இவை பதியப்பட்டவையாம். ஆனால் பதியப்பாடாமல் இன்னும் பலதும் உண்டாம்! இவ்வளவு நாட்கள் பேசாமல் இருந்தார்களாம். இப்போது,அளவுக்கு மீறிப் போனதால் ஒவ்வொன்றாக வெளியில் வருகிறதாம்!


இப்போது ஆசிரியர்கள் தங்கள் பாதுகாப்பைப் பற்றிக் கவலை அதிகம் படுகிறார்கள் என்றும், ஆபத்துநேரிடும்போது தற்காத்துக்கொள்ள 'panic buttons' ( அதை அழுத்தினால் சத்தம் வரும். மற்றவர்கள்உதவிக்கு வருவார்களாம். நம்ம ஊர் போலீஸ் விசில் மாதிரியா?)


இதைக் கேட்டுக் கொண்டிருந்த என் மகள் சொன்னது,'பசங்க எல்லாம் டீச்சருங்களை விட ரொம்பஉயரமாவும், பலசாலிகளாவும் இருக்காங்க. டீச்சருங்க சின்ன சைஸ். பின்னே எப்படி இருக்கும்?'


முன்பு அதாவது ஒரு பத்து வருடங்களுக்கு முன்னே, பிள்ளைகளுக்கு 16 வயதுவரை கல்வி தரவேண்டியது கட்டாயமாக இருந்தது.அதாவது அவர்கள் கல்வி கற்கும் மொத்த காலம் 11 ஆண்டுகள்.
அப்புறம் பிள்ளைகள், பெற்றோரைவிட்டுத் தனியே போய் வாழ ஆரம்பிப்பார்கள். அவர்களுக்கு அரசாங்கமேவாழும் உதவித்தொகை கொடுத்துவந்தது! இதற்கு 'டோல்' (Dole) என்று பெயர். ஒரு சமயம் நடை பாதையில்இப்படி எழுதியிருந்தது,'I live on dole and I love it'


அதன் பின் அரசாங்கம், பிள்ளைகள் 18 வயதாகும் வரை உதவித்தொகை கிடையாது. அதனால் அவர்கள் 18 வயதுவரை பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று அறிவித்தது. இந்த இரண்டு வருடங்கள் கட்டாயக் கல்வி இல்லை. ஆனால்பிள்ளைகள் வீட்டில் 'ச்சும்மா' இருக்கவேண்டுமே என்று பள்ளிகளுக்குப் போகின்றனர்.எல்லோரும் இப்படியில்லை.உண்மையாகவே படிப்பில் ஆர்வமும், நல்ல வேலைக்குப் போகும் தகுதிகள் பெறவும் ஏராளமான மாணவர்கள் தொடர்ந்து கல்லூரியில்படித்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.


இந்த 'ச்சும்மா' இருக்கும் மாணவர்கள் கொஞ்சம்தான். ஒரு 15 சதமானம் இருப்பார்கள். இரண்டு ஆண்டுகள் கூடுதலாகபள்ளியில் வைப்பதால் வந்த வினை என்று இப்போது கூக்குரல் ஆரம்பித்துள்ளது!


இந்த 'மாதா, பிதா, குரு, தெய்வம்' வெள்ளையர் உலகிலே இல்லாத ஒரு சமாச்சாரம்! நம் நாட்டிலும் இது அருகிவந்தாலும்,குறைந்தபட்சம் பாடப் புத்தகத்திலோ, சாஸ்த்திர சம்பிரதாயம் என்ற பேரிலோ எழுத்து உருவத்திலாவது இருக்கிறது!


ஒரு முறை, நான் 'இந்தியப் பள்ளி'களைப் பற்றி ஒரு ஆரம்பப்பள்ளியிலே உரையாற்றும்போது, நம் நாட்டிலே உள்ளகுழந்தைகள்தினம், ஆசிரியர்கள் தினம் இவற்றைப் பற்றிச் சொன்னபோது, எல்லோரும் 'ஆ'என்று பார்த்தார்கள். அவர்களுக்கு இப்படிஒன்று இருப்பதை நம்பவே முடியவில்லை!
நான் இங்கே முதலில் குடியேறியபோது, அவ்வளவாக இந்தியர்கள் கிடையாது! இன்னும் சொல்லப் போனால், இந்த நகரில் குடியேறியமுதல் தமிழ் நாட்டுக் குடும்பமே நாங்கள்தான்!


ஆகவே நம் கலாச்சாரத்தைத் தெரிந்துகொள்வதற்கும், நான் நெற்றியில் வைக்கும் dot ( பொட்டு) என்ன என்று தெரிந்து கொள்வதற்கும்அதிக ஆர்வம் காட்டுவார்கள்.


நம் இந்திய உடைகள் மிகவும் அழகாக, பல வர்ணங்களில் இருப்பது மிகவும் அருமை என்றும் புகழ்வார்கள். அப்போதெல்லாம் இங்குவெறும் நான்கு நிறங்களில்தான் உடைகள் இருந்தன. சிகப்பு, பச்சை, மஞ்சள், நீலம். அப்புறம் இருக்கவே இருக்கு வெள்ளையும்கறுப்பும்! கறுப்புதான் இவர்களுக்குப் பிடித்த கலரு' இந்த நாட்டின் தேசீய நிறமே கறுப்பு தான்! அதனால்தான், இவர்களுடையகிரிக்கெட் டீம் 'ப்ளாக் கேப்' ரக்பி டீம் 'ஆல் ப்ளாக்' பாஸ்கெட் பால் டீம் 'டால் ப்ளாக்'என்ற பெயர்களில் இருக்கின்றன.


ஒருமுறை, என் மகளின் இந்திய பாரம்பரிய உடைகளையெல்லாம் கொண்டுபோய், ஒரு சின்ன வகுப்புப் பெண்குழந்தைகளுக்கு அணிவித்தும், ஒரு சின்னப்பெண்ணுக்குப் புடவைக் கட்டி,மணமகள் அலங்காரம் செய்தும் இந்தியா தினம் கொண்டாடினேன்.மற்ற எல்லா வகுப்புக் குழந்தைகளும், மொத்த ஸ்கூலும், ப்ரின்சிபால் உள்பட எல்லா ஆசிரியர்களும் அசெம்ப்ளியில் கூடி எங்களுடன் இந்தக் கொண்டாட்டத்தை அனுபவித்தனர்!


ஆண் பிள்ளைகள் எங்களுக்கு ஒன்றும் இல்லையா என்று பரிதாபமாக் கேட்டனர். அதெப்படி ஆண்களுக்கு ஒன்றும் இல்லாதிருக்கமுடியும் என்பதே அவர்களின் கேள்வியாக இருந்தது! அவர்களுக்கெல்லாம் ஒரு 'ஸ்டிக்கர்'பொட்டு வைத்து விட்டேன்.


இப்போது, இந்திய டிஸைன்கள் உலக அளவில் '·பாஷன்' ஆகிவிட்டதால் மேல்நாட்டு உடைகளிலேயும் கொஞ்சம் இந்தியன் 'டச்' வரஆரம்பித்துள்ளது.
ஆரம்பப் பள்ளிகளில்தான் இது சாத்தியம். பெற்றோருக்கு நல்ல சுதந்திரம், மரியாதை உண்டு.பள்ளியின் அநேக நடவடிக்கைகளில்'பேரண்ட் ஹெல்ப்பர்' என்று நாங்கள் பங்கேற்க முடியும். 'ஸ்கூல் கேம்ப்'களிலும்கூட நாங்களும் கூடவே போகலாம்.


பொதுவாகவே இங்கு குழந்தைகளுக்கு உரிமைகள் அதிகம். பெற்றோருக்குமே, தங்கள் பிள்ளைகளை அடிக்கும் உரிமை இல்லை!திட்டவும் கூடாது. மிரட்டவும் கூடாது. இப்படி இங்கே பெற்றோருக்குத்தான் அதிகம் 'கூடாதுகள்' ( கணவனுமே மனைவியை அடிக்கமுடியாது! ஒரு ·போன் போதும்!)
குழந்தைகள் தனிமனிதர்களே என்கிறார்கள். பெற்றோர் அடிக்கிறார்கள் என்று யாருக்காவது தெரிந்தால் உடனே அவர்கள் காவல்துறைக்கு·போன் செய்துவிடுவார்கள். சிலசமயம் அந்தப் பிள்ளைகளே 111 க்கு ( அதுதான் இங்கே காவல்துறை எண்) ·போன் போட்டுவிடுவார்கள்.உடனே அவர்கள் வந்து பிள்ளைகளை பெற்றோரிடமிருந்து கூட்டிக் கொண்டு போய் '·போஸ்டர் ·பாமிலி' என்று குழந்தை நல அதிகாரிகளால் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களில் தாற்காலிகமான கவனிப்புக்கு ஏற்பாடு செய்துவிட்டு, பெற்றோர்கள்மேல் குற்ற நடவடிக்கைஎடுப்பார்கள். ·பிஸிகல் அப்யூஸ், மெண்டல் அப்யூஸ், எமோஷனல் அப்யூஸ், வெர்பல் அப்யூஸ் என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர்வைத்துவிடுவார்கள்.


குழந்தைகள் பெரியவர்களாக வளர வளர எல்லாம் மாறிப் போகிறது. அவர்கள் உயர்நிலைப் பள்ளிகளில் சேரும்போது, எல்லாமேதலைகீழ்தான்.
பிள்ளைகளுக்கு 14 வயதுவரை, அவர்களைத் தனியாக வீட்டில் விட்டுவிட்டு பெற்றோர்கள் வெளியே போகக்கூடாது! அப்படிப் போகுமுன்'பேபி சிட்டர்'களுக்கு ஏற்பாடு செய்து, அவர்களை ஒரு பெரியவர்கள் கண்காணிப்பில் விடவேண்டும். 'ஹோம் அலோன்' என்று கேஸ்பதிவு செய்து விடுவார்கள்! ஆனால் அதே பிள்ளைகள் 16 வயதானவுடன், தனியே குடுத்தனம் கூடப் போகலாம்!


ரொம்பச் சின்னப் பிள்ளைகள் மாலை 7.30க்கு படுக்கைக்குப் போய்விடவேண்டும். கொஞ்சம் பெரிய பிள்ளைகள் 8.30க்கு. ஆனால் 16 வயதானவுடன் ராத்திரி 12 வரை ஊர் சுற்றினாலும் தாய் தகப்பன் வாயைத் திறக்க முடியாது!



எல்லா உயர்நிலைப் பள்ளிகளிலும்.'ஸ்கூல் கவுன்சிலர்' இருக்கிறார்கள். ஒழுங்காக இருக்கும் ( அப்பா அம்மா பேச்சைக் கேட்டு) பிள்ளைகளுக்குக் கூட அவர்கள் 'உரிமை'களை எடுத்துச் சொல்லியும் அந்த உரிமைகளை அச்சில் அடித்துவைத்து, அரசாங்கமே விநியோகிக்கும்புத்தகங்களைக் கொடுத்தும் ஒருவழி பண்ணிவிடுகின்றனர்! நம் பண்பாட்டில் எது எது கூடாது என்று நினைக்கிறோமோ, அது அத்தனையும்இஷ்டப்பட்டால் செய்து கொள்ளலாம். செக்ஸ் எஜுகேஷன் என்று அது வேறு.இதை நான் தவறு என்று சொல்லவில்லை. ஆனால்,பள்ளிகளிலேயே, ஆணுறைகளும் வழங்கப்படுவது அதிர்ச்சிதருகிறது என்பதை மறுக்க முடியாது! 'பாதுகாப்பான உறவு' என்பதில்தான்கவனமே தவிர, அந்த உறவு வேண்டுமா என்பதில் ஒரு வேறுபட்ட கருத்து இல்லை. என்ன ஒன்று, யாரும் யாரையும் வற்புறுத்தக் கூடாதாம்!அவர்களாக முடிவு செய்ய வேண்டுமாம்!


இதில் பெற்றோர் தலையிட முடியாது. மீறித் தலையிட்டால், கவுன்சிலரிடமிருந்து பெற்றோருக்கு அழைப்பு வரும். நம்மை உட்காரவைத்து,மணிக்கணக்காக நமக்கு 'உபதேசம்' செய்வார்கள். எங்கே போய் முட்டிக்கொள்வது?


இந்தியப் பெற்றோர்களுக்கு, இங்கே வந்தபிறகு ஏற்படும் மிகப்பெரிய கலாச்சார அதிர்ச்சி இதுதான். ஆங்கிலப் படங்களில் பலவற்றைப்பார்த்து, ஒருவிதமாக இவர்களின் கலாச்சாரத்தைப் புரிந்துகொண்டவர்களாகவும், தங்களை மேல்மட்டவாசிகளாகவும் நினைத்திருக்கும் பெற்றோருக்கும்கூட,அவர்கள் பிள்ளைகள் அந்தப் பாதையில் பயணிக்கும்போதுதான், அதோட உண்மையான கனம் புரியும்.
நாடு, இனம், மொழி, கலாச்சாரம் இவை வேறுபட்டு இருந்தாலும், பெற்றோர்கள் உலகெங்கிலும் பெற்றோர்கள்தானே! தங்கள் பிள்ளைகள்நல்லவர்களாகவும் வாழ்வில் ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பவர்களாகவும், நல்ல நிலையில் கல்வி பயின்று நல்ல வாழ்க்கை அடையவேண்டும்என்ற எண்ணம் எல்லோருக்கும் பொதுதானே? கெட்ட மனிதர்களாக இருந்தாலும், தன் பிள்ளைகள் நன்றாக இருக்கவேண்டும் என்றுதானே எண்ணுவார்கள்? இதில் ஏதாவது மாறுபட்ட கருத்து வருமா?


அப்போது, ஒரே ஒரு வார்த்தை, வாக்கியம் போதாதா 'தாய் தகப்பன் பேச்சைக் கேள்' என்று. அதை விட்டு விட்டு, அளவுக்கு மீறிஉரிமைகளை அள்ளி வழங்கிவிட்டு, இப்போது மாணவர்களால், ஆசிரியர்களுக்கு ஆபத்து என்று விவாதம் நடக்கிறது!


இனி, அடுத்த 'ஷாக் நியூஸ்' வரும்வரை தினமும் தொலைக்காட்சியிலும், பத்திரிக்கைகளிலும் இது தொடரும்! நம் காதுகள் புளிக்கும்வரைவந்துகொண்டே இருக்கும்!



நன்றி: சங்கமம் 2004


safe sex பற்றித் தெரிந்துகொள்வது நல்லதுதான். ஆனால் இந்த 16/17 வயதில் இதைச் செஞ்சுபார்க்கத் தேவையா என்பதுதான் கேள்வி.தற்போது சூடாக இருக்கும் 'குஷ்பு சொன்னது' க்கும் இதற்கும் சம்பந்தம் உள்ளதா?

*****************

28/09/2005NewstalkZB

More than 1200 students have been expelled from schools so far this year, 227 fewer than last year, but the latest statistics from the Education Ministry show schools are fed up with students out-of-control behaviour.
The Ministry says schools are required to enrol the student elsewhere and are successful in doing so 25 percent of the time, but the figures show some students have slipped through the system and are unaccounted for.
Two students are untraceable and 13 have been referred to a tracing agency.


இது நேத்து வந்த நியூஸ்.

Wednesday, September 28, 2005

நியூஸிலாந்து. பகுதி 6

வாழ்க்கையும் வசதிகளும்
*********************
நாம் வாழும் வாழ்க்கை நம் கையில்தான் என்றாலும், சொந்த நாட்டை விட்டு வந்து, புது முகங்களுக்கிடையில்நாம் புதிதாக ஆரம்பிக்கப் போகும் வாழ்வில் உள்ள நல்லது கெட்டதுகளைச் சொல்கின்றேன்!


இதுவரை, நியூஸிலாந்து நாட்டைப் பற்றிய விவரங்களை ஓரளவு(!) சொல்லியாயிற்று. இனி இங்கே வந்துபுது வாழ்வை ஆரம்பிக்க நினைத்திருப்பவர்களுக்கு இப்போது நான் தரும் சில தகவல்கள் உபயோகமாகஇருக்கும்.


நம் நாட்டுப் பெண்கள் வீட்டு வேலைக்கு உதவியாளர்களையே பெரிதும் நம்பியிருக்கின்றனர். ஒரு நாளைக்குவீட்டுவேலை உதவியாளர் வரவில்லையென்றால், வீடு திமிலோகப்படுமல்லவா? அந்த நிலை இங்கேஇல்லை. ஓஹோ..தினம் தவறாமல் வேலைக்கு வருவார்களா? நல்லாதாயிற்று என்று கனவு காணவேண்டாம்!


வேலைக்கு ஆட்கள் கிடைத்தாலும் அவர்களுக்குச் சம்பளம் கொடுத்துக் கட்டுப்படியாகாது! ஒரு மணிக்கு குறைந்ததுபத்து டாலர்கள். நம் இந்திய ரூபாயில் 300. ஒரு இரண்டு மணிநேரமாவது வேலை இருக்காதா? ஒரு நாளைக்கு600 ரூபாய்கள். மாதத்திற்கு? ஹைய்யோ!


அது மட்டுமல்ல, வெள்ளைக்கார வேலையாட்கள் நமக்கு, எவ்வளவுதூரம் 'உதவி'யாக இருப்பார்கள்? இங்கேஒரு பாத்திரம் தேய்ப்பதில்கூட அவர்கள் முறை நம்முறையிலிருந்து மிகவும் மாறுபட்டதுதான். நாம் பாத்திரங்களைஒவ்வொன்றாகத் தேய்த்து, பின் தண்ணீரில் நன்றாகக் கழுவுவோம் இல்லையா? ஆனால் இங்கேயோ?அவர்கள், 'சிங்க்'கில் தண்ணீரை நிரப்பி, அதில் சிறிது 'லிக்விட் ஸோப்'கலந்து விட்டு,பத்திரங்களை அதில் முக்கிஎடுத்து வைப்பார்கள். பிறகு அவைகளை ஒவ்வொன்றாக எடுத்து, ஒரு சிறிய 'டவல்' கொண்டு ஈரம்போக வெறுமனேதுடைத்து வைத்துவிடுவார்கள். இது எப்படி இருக்கு?


சமையலுக்கும் அவர்கள் உதவி செய்ய முடியாது. நம் சமையல் முறைகள் வேறு அல்லவா? தப்பித் தவறி செய்தார்கள்என்றால், உப்புப் பார்க்க நாம் சுவைத்துப் பார்க்கும் விதத்தில் இல்லாமல் கரண்டியை அப்படியே வாயில் வைத்துச் சுவைத்துவிடுவார்கள். 'எச்சில், கிச்சில்' எல்லாம் பார்க்க மாட்டார்கள். இதுபோல பலதும் சொல்லிக் கொண்டே போகலாம்.(எப்படியோ, வேலைக்கு ஆள் வைக்காமல் இருப்பதற்கு சாக்கு சொல்லியாச்சு!)
வீட்டு வாடகையும் இங்கே வாரத்திற்குதான். நகரங்களில் இரண்டு படுக்கை அறைகள் கொண்ட இடத்திற்கு வாரம் 200 டாலர்கள்குறைந்த பட்சம் வசூலிப்பார்கள். நகரத்தில், பேட்டைக்குப் பேட்டை அது இன்னும் கூடும்.
அடுத்த செலவு மின்சாரம்! அநேகமாக எல்லா வீட்டுச் சாதனங்களும், அடுப்பு உள்பட மின்சாரத்தாலே இயங்குகின்றன. குளிருக்காகவீட்டில் ஹீட்டர்கள் இருக்குமல்லவா? மேலும் வீட்டு உபயோகங்களுக்கான வென்னீர் 'டேங்க்'களில் எப்போதும் வென்னீர் சூடாகிக்கொண்டே இருக்கும். தூங்குவதற்கும், படுக்கையில் நாம் 'எலக்ட்ரிக் ப்ளாங்கெட்' விரித்திரிப்போம். அது ஒரு விதமான கதகதப்பைத்தரும். அப்படி இப்படி என்று மின்சாரத்துக்கும் குறைந்தது மாதம் 200 டாலர்கள் ஆகும். குளிர் காலமென்றால் இன்னும் கூடும்!


அப்புறம் கார்! பெட்ரோலின் விலை சர்வதேச மார்கெட் நிர்ணயம் என்பதால் அவ்வளவு வித்தியாசம் இருக்க வாய்ப்பில்லை. எனினும்கார் இல்லாமல் வாழ்க்கை ரொம்பவும் கஷ்டமே! பஸ் வசதிகள் அருமையாக இருந்தாலும், குறைந்தது வீட்டுக்கு ஒரு வண்டியாவதுவேண்டியிருக்கும்! 'சுண்டைக்காய் காப்பணம், சுமைகூலி முக்காப்பணம்' என்ற பழஞ்சொல்லுக்கு இங்குதான் முழு அர்த்தமும்தெரியவந்தது.


இவ்வளவு கார்கள் ஓடினாலும் , சாலைகளில் 'ஹார்ன்' சப்தம் கேட்க்காது! மிகவும் அவசியம் என்றால் தவிர யாரும்'ஹார்ன்' உபயோகிப்பதேயில்லை. என் பதினேழு வருட கார் ஓட்டும் அனுபவத்தில் ஒரு முறைகூட 'ஹார்ன்' அடித்ததே இல்லை.அடுத்த முறை இந்தியா வரும்போது ஒரு முறை அடித்துப் பார்க்க வேண்டும்!


மலிவு விலையில் கார்கள் கிடைத்தாலும், அப்புறம் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அந்த கார்கள் தெருவில் ஓடலாயக்கா என்று பரிசோதனைகள் உண்டு. அப்போது எல்லாம் சரியாக இல்லாவிட்டால் அனுமதி மறுக்கப்படும். அதற்கான செலவுகள் தனி. அப்புறம் வருடம் ஒரு முறை பதிவு வரிகள் தனி( இது நம் நாட்டிலே உள்ள 'ரோடு டாக்ஸ்')அதன்பின், இன்ஷ¥ரன்ஸ் கட்டணம். ஒரு சின்னப் பழுது பார்க்கும் வேலைக்குமே 800, 1000 என்று கறந்துவிடுவார்கள்!அதுவுமல்லாமல், நாம், மற்றவர்கள் வண்டியை இடித்து விட்டோமானால், அது நல்ல வண்டியாக இருந்துவிட்டால் அதற்குண்டானபழுது பார்க்கும் செலவுக்கு, நமக்கு மட்டும் இன்ஷ¥ரன்ஸ் இல்லாவிட்டால் தொலைந்தோம். இதற்கு பயந்தே கட்டாயம் இன்ஷ¥ரன்ஸ்எடுத்திருப்பது நல்லது.


போக்குவரத்து விதிகள் கடுமையாக அனுசரிக்கப்படுகின்றன. அங்கங்கே ரகசிய கேமெராக்கள் உண்டு. சாலை விதிகள் மீறப்பட்டால்அபராதம் அதிகம்! ஒட்டுனர் உரிமம் பெறவும் செலவு உண்டு. முதலில் சாலை விதிகளைப் படித்துத் தெரிந்துகொண்டு, ஒரு தேர்வுக்குச்செல்லவேண்டும்.உங்களுக்குத் தரப்படும் கேள்வித்தாளிலேயே விடைப்பகுதிகள் இருக்கும்.அவை'சுரண்டல் லாட்டரி'யில் உள்ளதைப்போலமறைந்திருக்கும். ஒவ்வொன்றிற்கும் நான்கு விடைகள். A B C D நீங்கள் அதில் ஒரு விடையைத் தேர்ந்தெடுத்து, 'சுரண்ட வேண்டியது'தான்.அது சரியா இல்லையா என்று உடனே தெரிந்து விடும். எல்லாம் சரியென்றால் மட்டுமே உங்களுக்கு 'லேணர்ஸ் லைசென்ஸ்' கிடைக்கும்.


அது இருந்தால்தான், நீங்கள் 'ட்ரைவிங் ஸ்கூல்'லில் சேரமுடியும்! அங்கேயும் கற்றுக்கொள்ள மணிக்கு 45 டாலர்கள் செலவாகும். பிறகுஉரிமம் பெற ஒரு முறை பணம் கட்டினால், பரிசோதகருடன்,ஒரு நாள் உங்களை சாலையில் வண்டியோட்டச் செய்து பரிசோதிப்பார்கள்.அதில் தேறினாலே உங்களுக்கு கட்டுப்படுத்தப்பட்ட ஓட்டுனர் உரிமம் கிடைக்கும். அதற்குப்பின்தான் நீங்கள் முழு லைசென்ஸ் பெறமுடியும்.


இங்கே வண்டி ஓட்டக் கற்றுக்கொள்ள, குறைந்தபட்ச வயது பதினைந்து வருடங்களும் ஆறுமாதங்களும். இதனால்தான் இந்த உரிமம் விஷயத்தில்இவ்வளவு கட்டுப்பாடும் கண்டிப்பும். 16 வயதுகூட நிறையாத இளம்பருவத்தினர் ஆர்வக்கோளாறால், விபத்துக்குக் காரணமாகிவிடுவார்களோஎன்றுதான் இந்தக் கவனிப்பு.


கட்டுப்படுத்தப்பட்ட ஓட்டுனர் உரிமம் கிடைத்தவர்கள்,காலை 6 மணி முதல் இரவு பத்து மணி வரைதான் கார் ஓட்டலாம்.அதன் பின்பு கார் ஓட்டத்தடை உண்டு.


அனைவருக்கும் பொதுவாக, மது அருந்திவிட்டு கார் ஓட்டுகின்றார்களா என்றும் அவ்வப்போது பரிசோதனைகள் நடக்கும். 'Any One, Any Where, Any Time' என்றெல்லாம் உண்டு. பிடிபட்டால் தண்டனை அதிகம். சில சமயம் உரிமம்ரத்து செய்யப்படும் அபாயமும் உண்டு!


தொலைபேசிக்கு மாதாமாதம் 40 டாலர்கள் கட்டணம் உண்டு. இதில் உள்ளூருக்குப் பேசுதல் முழுவதும் இலவசம். ஆனால் இங்கேஉள்ள மற்ற நகரங்களுக்குப் பேசினாலும், பன்னாட்டு சேவைக்கும் தனியாக பணம் கட்டவேண்டும். அது மிகவும் கூடுதல் என்பதால்இப்போதெல்லாம், நாங்கள் '·போன் கார்டு' வாங்கி வைத்துக் கொண்டு இந்தியாவுக்கு, மற்ற நாடுகளுக்குப் பேசுகின்றோம்.


அடுத்து வருவது சாப்பாட்டுச் செலவு. கணவன், மனைவி, இரு குழந்தைகள் உள்ள குடும்பத்துக்கு எப்படியும் வாராவாரம் மளிகை,பால், ரொட்டி என்று குறைந்தது 200 டாலராவது ஆகும். ரொம்பவும் சிக்கனமாக, வெளியில்போய் உணவு உட்கொள்ளாத நிலையானால்கொஞ்சம் குறையலாம்! நல்லவேளையாக இங்கே பல இந்திய மளிகை சாமான்கள் விற்கும் கடைகள் வந்துவிட்டன. அவர்களுக்கிடையில்உள்ள வியாபாரப் போட்டியினால், நமக்கு மலிவாகப் பொருட்கள் கிடைக்க ஆரம்பித்துள்ளன. நாங்கள் இங்கே வந்த புதிதில் பருப்பின்விலை கிலோ 10 டாலர்கள். இப்போது 2.50 டாலர்கள்.


இப்போதெல்லாம் நம் காய்கறிகள் கூட கிடைக்க ஆரம்பித்துள்ளது. எல்லாம் ·பிஜித்தீவிலிருந்து வருகின்றன. விலை மிகவும் அதிகம்என்றாலும், இதுவாவது கிடைக்கிறதே, கிடைத்தவரை லாபம் என்ற உணர்வுதான்! எத்தனை நாட்களுக்குத்தான் முட்டைக்கோசும்,காலி·ப்ளவருமே சாப்பிட்டுக் கொண்டிருப்பது?


சூப்பர் மார்கெட்டுகள் சிலது, எப்போதுமே திறந்திருக்கின்றன. 24 மணி நேரம், வாரம் ஏழு நாட்கள். ஷாப்பிங் சென்டர்களில் சினிமாதியேட்டர்களும், '·புட் கோர்ட்' என்று அழைக்கப்படும் உணவங்காடிகளும் நிறைந்து காணப்படுகின்றன!


இங்குள்ள மக்களை 'கிவி' என்று சொல்வார்கள். அவர்களுக்கு நம் இந்திய உணவு வகைகள் மிகவும் பிடித்துப் போய்விட்டதால்,இப்போதெல்லாம் நிறைய இந்திய உணவகங்கள் பெருகிவிட்டன. இன்றையக் கணக்கில் நான் வசிக்கும் 'கிறைஸ்ட்சர்ச்' என்றஊரில் மட்டும் 37 இந்திய உணவகங்கள் இருக்கின்றது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!


பிறகு மருத்துவச் செலவு! ஒரு முறை மருத்துவரைப் பார்க்க குழந்தைகளுக்கு 28ம், பெரியவர்களுக்கு 45ம் செலவாகும். இது தவிர ஏதாவதுமருந்து எழுதித்தரும் பட்சத்தில், மருந்தகத்தில் அவைகள் வாங்கும் செலவு தனி.


வீட்டில் உள்ள பொருட்களுக்கு 'இன்ஷ¥ரன்ஸ்' மிகவும் அவசியம். ஏதாவது விபத்தோ, களவோ நடந்தால் அதற்கு நஷ்ட ஈடு கிடைக்கும்.உயிர் இழப்பு,வன்முறையில் தாக்கப்படுதல் போன்றவைகளுக்கு மட்டுமே காவலர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். சாதாரணக் களவுகளுக்குஒரு முக்கியத்துவமும் இல்லை.


இதெல்லாமே அடிப்படைத் தேவைக்கான செலவுகள். இப்போது கணக்குப் போட்டுப் பாருங்கள், வாரம் குறைந்த பட்சம் உங்கள் குடும்பத்துக்குஎவ்வளவு தேவைப்படும் என்று!


இங்கே குடியுரிமை பெற்றுக் குடியேறும் மக்களுக்கு, முன்பு கிடைத்து வந்த உதவித் தொகைகள் இப்போது நிறுத்தப்பட்டுவிட்டன. இரண்டுஆண்டுகளுக்கு அவர்களுக்கு Unemployment benefit எதுவும் கிடைக்க வாய்ப்பிலை என்பதால், அவர்களுக்குத் தேவையான பணம்முதலியவற்றை அவர்களே ஏற்பாடு செய்து கொள்ளவேண்டும்.


வேலை கிடைத்துவிட்டால் கவலை இல்லை. ஆனால் கிடைக்கும்வரை.....


நன்றி: சங்கமம் 2004

Tuesday, September 27, 2005

நியூஸிலாந்து. பகுதி 5

சட்டம், ஒழுங்கு, காவல்துறை.
********************************
எல்லா நாடுகளையும்போல் தான் இங்கே சட்டமும் ஒழுங்கும். ஆனால் இதற்கு உதவிபுரியும் காவல்துறையைச் சேர்ந்தவர்கள், உண்மையாகவே 'உங்கள் நண்பன்'ஆக இருக்கிறார்கள். தமிழ் மற்றும்இந்தியத்திரைப்படங்களின் மூலம்,ஏன், ஆங்கிலப்படங்களில்கூடத்தான் நாம் காவலர்கள் என்று நினைத்தவுடன், மனதில் ஒரு படம் தெரிகிறது பாருங்கள். தோற்றத்திலும், உடை அமைப்பிலும் மட்டுமே நாம் நினைப்பது சரி.


ஆனால், பொதுவாக இங்குள்ள காவலர்களிடம் கைத்துப்பாக்கியெல்லாம் கிடையாது. துப்பாக்கி பயன்படுத்தும்பிரிவு ஒன்று தனியாக உள்ளது. தேவையெனில், அவர்கள் வரவழைக்கப்படுவர். இப்படித்தான் ஒரு இளைஞனை காவலர் சுட்டுவிட்டார். அவன், குடித்துவிட்டு,நடந்துபோகும்போதே ஒரு கடைத்தெருவில் எல்லாக் கடைகளின் கண்ணாடி ஜன்னல்களையும், அருகே இருந்த மற்ற வீடுகளின் கண்ணாடிகளையும் கையிலுள்ள தடியால் உடைத்துக்கொண்டே போய்க்கொண்டிருந்தான். இங்கே, சூரியவெளிச்சம் வேண்டிவீடுகளுட்பட எல்லாக் கட்டிடங்களிலும் கண்ணாடி மிகுதியாகப் பயன்படுத்தப் படுகிறது. அவனைப் பிடிக்கமுயன்று, முடியாமல், காவலருடன் நடந்த சண்டையில், எதிர்பாராத விதமாக குண்டடிபட்டு இறந்துவிட்டான்.ஊர் ஜனங்களெல்லாம் சேர்ந்து, அவனைக் காலில் சுடாமல், வேறு இடத்தில் சுட்டது தப்பு என்று கூச்சலிட்டு,அந்த பொலீஸ்காரரின் வேலைக்கே 'வேட்டு' வைத்துவிட்டார்கள். கொஞ்ச நாளில் அவனை ஏதோ 'தியாகி ரேஞ்சு'க்குஉயர்த்தின மாதிரி பேச்சு வந்தது. (நல்லவேளை அப்படியே அமுங்கிடுச்சு)


இங்கே காவலர்கள் பொதுவாக மனிதனை மனிதனாகவே நடத்துகின்றனர். முட்டிக்கு முட்டி தட்டுதல்,லாடம் கட்டுதல் போன்றவைகள் கடைப்பிடிக்கப்படுவதில்லை! ஆனாலும் இங்கேயும் நம்ப முடியாதசம்பவம் ஒன்றும் நடந்துள்ளது!


கொஞ்ச நாளைக்கு முன்னால், ஒரு பெண், தன்னை ஒரு பொலீஸ் ஸ்டேஷனில், சில காவலர்கள்கற்பழித்துவிட்டனர் என்று குற்றம் சாட்டினார். இது அப்போது டி.வி. யில் செய்தியாக வந்தது. அட! இங்குமா? என்று செய்தியில் கவனம் செலுத்தினோம். இது 13 வருடங்களுக்கு முன் நிகழ்ந்ததுஎன்றும், இப்போதுதான் அந்தப்பெண் இதைபற்றிக் குற்றம் சாட்டுகிறார் என்றும் தெரியவந்தது.எத்தனை காலத்துக்குமுன் நிகழ்ந்தாலும், குற்றம் குற்றமே ( நக்கீரப் பரம்பரையோ)என்று தீர்ப்பு அளித்துஅந்த சம்பவத்தில் ஈடுபட்ட அந்தக்காவலர்களை( இப்போது அவர்கள் பதவி உயர்வு பெற்று அதிகாரிகளாயிருந்தனர்)வேலை நீக்கம் செய்தது மட்டுமின்றி அவர்களுக்கு மேலும் தண்டனையும் வழங்கப்பட்டது.


காவல் நிலையங்களும் மற்ற அலுவலகங்கள் போலவே இயங்குகின்றன. வாசலில் 'செண்ட்ரி'யெல்லாம்கிடையாது. வரவேற்பு அறையில் உட்கார ஆசனக்களும், நம் முறை வரும்வரை பொழுதுபோக்க வாரப்பத்திரிக்கைகளும், குழந்தைகள் விளையாட சில பொம்மை, மற்றும் விளையாட்டுப் பொருட்களுடன் கூடியதனியிடமும் உண்டு. இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும் என்றால், நானும் ஒரு முறை காவல் நிலையம்செல்ல நேர்ந்தது.


ஒரு நாள் எங்கள் கடை வாசலில் ஒரு நியூஸிலாந்து 'பாஸ்போர்ட்' கீழே விழுந்திருந்தது. அது இன்னும் 9 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும் நிலையிலும் இருந்தது. குடிமக்களின் கடமையின்படி, நான் பொலீஸ¤க்கு·போன் மூலம் தெரிவித்தேன். அந்த சம்பாஷணை இப்படி இருந்தது.


" ஒரு ·பாஸ்போர்ட்டைக் கண்டெடுத்தேன். நான் என்ன செய்ய வேண்டும்?"

" இங்கே கொண்டுவந்து ஒப்படைத்துவிடுங்கள்"

" பொலீஸ் ஸ்டேஷன் எங்கே இருக்கிறது?"

" நீங்கள் எங்கேயிருகின்றீர்கள்? நாளை, நீங்கள் கடை திறக்கப் போகும்போது கொடுத்துவிட்டுப் போகலாமே "

(இடம் சொல்லப்பட்டதும், எந்தக்காவல் நிலையம் அருகிலுள்ளது என்ற தகவல் கிடைக்கிறது.)

அவ்வளவுதூரம் என்னால் வரமுடியாது.நான் கடைக்குப் போகும் வழி அதுவல்ல. நீங்களே யாரையாவது அனுப்ப முடியுமா?

"இங்கே ஆட்கள் மிகவும் குறைவு. உங்களால் எப்போது முடியுமோ அப்போது கொண்டுவந்தால் போதும்"

"தொலைத்தவர்களுக்கு அவசரமாகத் தேவைப்படாதா?"

"அப்படியா? ஒன்று செய்யுங்கள். அதிலுள்ள எண்களைச் சொல்லுங்கள்.
யாராவது, தொலைத்துவிட்டதாக காவலரை அணுகினால் உங்களுக்குத் தகவல் தெரிவிக்கிறேன். அப்போது கொண்டுவரலாமே"

இது சரிப்படாது என்று, ஒரு வாரம் கழித்து வந்த வார இறுதியில், காவல் நிலையம் சென்றேன்.

வரவேற்பில், வந்த காரணம் சொல்லப்பட்டதும், ஒரு அதிகாரி, ஆசனத்தில் அமரச்செய்து, குடிக்க ஏதாவதுகா·பி, டீ வேண்டுமா என்று கேட்டு உபசரித்துவிட்டு, ஒரு படிமத்தில் விவரங்களைப் பதிந்து கொண்டார்.அந்தப் பாஸ்போர்ட் உரிமையாளருக்கு உங்கள் விலாசம் தரலாமா என்றும் கேட்டார். காரணம் ,அவர்கள்நமக்கு, நன்றிக் கடிதமோ, மலர்களோ அனுப்புவார்களாம். அவையெல்லாம் தேவையில்லை என்று சொன்னேன்.அதன் பின் ஒரு வாரம் சென்றபின், காவல் நிலையத்திலிருந்து, நன்றி தெரிவித்து ஒரு கடிதமும், உரிமையாளர்அந்த 'பாஸ்போர்ட்'டைப் பெற்றுக் கொண்ட விவரமும் இருந்தது.


இங்கே, காவல்துறை மிகவும் கவனமாக இருப்பது சாலை விதிகளிலும், போதை மருந்து விஷயத்திலும்தான்.மேலும், மது அருந்தும் உரிமையுள்ள வயதை பதினெட்டாகக் குறைத்திருப்பதால், இளவயதினர், அளவுக்குமீறீயஅளவில் மது அருந்திவிட்டு, வண்டி ஓட்டுவதைக் கண்காணிக்கிறார்கள். எல்லாம் தும்பை விட்டு வாலை பிடித்தகதைதான்.
லஞ்சம், ஊழல் இவைகள் இங்கே அநேகமாக் கிடையாது என்றே சொல்லலாம். ஆகையால் அதன் காரணங்களால்ஏற்படுகிற குற்றங்கள் இங்கே இல்லை.


இவ்வளவு ஏன்? இங்கே 'Tips' வாங்கும்/கொடுக்கும் வழக்கம்கூட இல்லை. அண்டை நாடானஆஸ்தராலியாவிலும்இதேதான்!


ஆனானப்பட்ட அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் பரவியுள்ள இந்த 'டிப்ஸ்' பழக்கம் இங்கே இல்லாததால், இதற்குப்பழகிபோன நாங்கள் மற்ற நாடுகளுக்குப் போனால், அங்கும் இதைபற்றிய எண்ணம் இல்லாது இருந்து விடுவோம்.டிப்ஸ் எதிர்பார்க்கும் ஆட்கள் எங்களை, 'சரியான கஞ்சப் பேர்வழி' என்ற பார்வை பார்க்கும் போதுதான் நாங்கள்விழித்துக் கொள்வோம். இதுபோல ஏளனப்பார்வைகள் ஏராளமாகப் பெற்ற அனுபவம் உண்டு!


நான் சென்ற வருடம் சென்னை வந்திருந்தபோது, அண்ணா சாலையில் ஒரு காவலரிடம் ஒரு விவரம் கேட்டபோதும் சரி,விமான நிலையத்திலும் சரி, நம் சென்னை நகரக் காவல்துறையினர், மிகவும் பண்போடுதான் நடந்துகொண்டனர். ஆனால்பத்திரிக்கைகளில் வரும் செய்திகள் வேறுமாதிரி இருக்கின்றன.


காவல்துறையில் வேலை செய்பவர்களில் பலர், இது மிகவும் மன அழுத்தம் ஏற்படுத்துகின்ற வேலையாக இருக்கிறது என்றுஅந்த வேலையை விட்டு விட்டு வேறு ஏதாவது தொழிலுக்குப் போய்விடுகிறார்கள். எங்கள் வீட்டுக்கு 'எலெக்ட்ரிகல்' வேலைக்குவரும் 'எலெக்ட்ரீஷியன்' முன்பு காவல்துறையில் காவலராக இருந்தவர்தான்!


காவல்துறையில் உயர்ந்த பதவியில் இருந்த அதிகாரியான,எங்கள் நண்பர், அவருக்கு ஏற்பட்ட மன அழுத்தம் காரணம், அந்தவேலையை உதறித்தள்ளிவிட்டு, இப்போது, ஒரு சிறிய கம்பெனியில் 'ட்ரைவர்' வேலை செய்கின்றார். ஏனெனில் இந்த வேலையில்சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லையாம்!



இவ்வளவு ஏன்? ஒருமுறை இந்த நாட்டின் பிரதம மந்திரி, அவருடைய வேலையில் 'ஸ்ட்ரெஸ்'அதிகம் என்று ராஜினாமா செய்துவிட்டார்.இது எப்படி இருக்கு?


இவை எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல் இன்னொன்றும் நடந்துள்ளது. போன வாரம் நடந்தது இது.தொலைக்காட்சியில் வந்தது.
சிறையில் அடைக்கப்பட்ட சில கைதிகள் அவர்களுக்குத் தரப்பட்ட 'வசதிகள்' சரியில்லையென்று அரசங்கத்தின்மேல் வழக்குத் தொடுத்துஅதில் வெற்றியும் பெற்றிருக்கின்றனர். அவர்கள் உடற்பயிற்சி செய்யத் தோதான வசதிகள் மறுக்கப்பட்டனவாம். மேலும் அவர்கள் அறையில்நல்ல ஆரோக்கியமான காற்றோட்டம் இல்லையாம். அவர்களுக்கு $130000 ( இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 39 லட்சங்கள்!) வழங்கவேண்டும் என்று தீர்ப்பாகியுள்ளது.
இன்று அதிகாலை தொலைக்காட்சிச் செய்திகள் சொன்னது, இன்னும் சில கைதிகள் இதுபோல வழக்குத் தொடுக்கத் தயாராகிவிட்டனராம்!

செய்த தவறுக்கு தண்டனை இல்லையா சிறை வாழ்க்கை?

நன்றி: சங்கமம் 2004

Monday, September 26, 2005

நியூஸிலாந்து. பகுதி 4

குளிர் குளிர் குளிர்


நம் நாட்டை ஒப்பிடும்போது இங்கே குளிர் கொஞ்சம் கூடுதல்தான்! இதுக்கு முக்கியமானகாரணம் எதுன்னா, இந்த நாட்டுக்கு ரொம்பப்பக்கத்திலே 'தென் துருவம்' இருக்கறது. இங்கேயும்நான்கு பருவங்கள் ஒரு வருஷத்திற்கு உண்டு. குளிர் காலம், வசந்த காலம், கோடை காலம் அப்புறம்இலையுதிர் காலம். எல்லாம் மும்மூணு மாசங்கள் என்று சொன்னாலும்கூட, நம்மைப் போல 'ட்ராபிகல்க்ளைமேட்' நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு எல்லாக் காலங்களும் குளிர் காலம்தான். வேணும்னாகுறைந்த குளிர், அதிகக்குளிர், ரொம்பவே அதிகமான குளிர் இப்படியெல்லாம் சொல்லலாம்! அதிலும்'சதர்லீ' எனப்படும் காற்று அடிக்கும் தினம் என்றால் கேட்கவே வேண்டாம்! தென்துருவத்திலிருந்துவரும் காற்றல்லவா? எலும்பைக் கூட உருக்கும் குளிர் என்றால் மிகையில்லை.'அடிமைப்பெண்'எம்.ஜி.ஆர். போலதான் நிமிராமல் நடக்கவேண்டும்.

குளிர்காலத்தில் பனிமழை பொழிவதும் அதன் காரணம் வீடுகள், கார்களின் கூரைகளிலும் வெள்ளைப்போர்வையாகப் பனிகட்டிகள் வீற்றிருப்பதும் பார்ப்பதற்கு வெகு அழகாக இருப்பது உண்மையே என்றாலும்இந்தப் பனியின் காரணமாக ஆயிரக்கணக்கான உயிர்கள் நஷ்டமாவது எனக்கு மிகவும் வருத்தத்தையேதருகிறது.


இங்கே ஆடுகள் நிறைய உண்டு என்று முன்பே குறிப்பிட்டேன் அல்லவா? அவைகளுக்கு பேறுகாலம்அனேகமாக ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்திலிருந்து ஆரம்பித்துவிடுகிறது. அப்போது குளிர்காலம்முடிவடையும் தருணம் தான். ஆனால், இங்கே அப்போது தென் துருவத்திலிருந்து குளிர்காற்று அடித்தாலும்,அல்லது மழை பொழிந்து கொண்டிருந்தாலும் அது பனித்துகளாக மாறி விடும்.


ஆட்டுப்பண்ணை வைத்திருப்பவர்களுக்கு இது ஒரு தீராத தலைவலிதான்! அந்தக் குளிர் தாங்காமல் அந்தப்பிஞ்சு உயிர்கள் இவ்வுலகத்தைவிட்டே போய்விடுகின்றன. இறந்துபோன சடலங்களை வாரி வாரி வண்டியில்போடுவதை தொலைக்காட்சி செய்தியில் காண்பிக்கும்போது மிகவும் துக்கமாக இருக்கும்.அவைகளை ஒரு பாதுகாப்பான இடத்தில் வைத்திருந்தால் இந்த இழப்பு நேராதே என்று வருந்துவேன்.ஏன்தான் இப்படிச்செய்கிறார்களோ?


ஆனால், பாருங்கள். இன்று தொலைக்காட்சிச் செய்தியில் ,இந்த நாட்டில் உள்ள பிராணிவதைத் தடுப்புச் சங்கம்முதல் முறையாக ஒரு பண்ணை வைத்திருப்பவர்கள் மேல் வழக்கு தொடர்ந்துள்ளது என சொல்லப்பட்டது.காரணம், இந்த வாரம் பெய்த பேய் மழையால், வடக்குத் தீவில் உள்ள ஒரு பண்ணையில் வெள்ளப் பெருக்குஏற்பட்டு, அதன் உரிமையாளர்களின் கவனக்குறைவினால் ஒரு இரவு முழுதும் மாடுகள் தண்ணீரில் தலைமட்டும் வெளியே தெரியும் வண்ணம் நின்றிருக்கின்றன!
பண்ணை உரிமையாளர்கள் சொன்னது, அவர்கள் 'கேட்'டைத் திறந்து விடும்போது, தண்ணீர் உள்ளே புகுந்துவிட்டது. அதனால் அவைகளை மேடான நிலத்திற்கு ஓட்டிக்கொண்டு போகமுடியவில்லை.பார்க்கலாம், மாடுகளுக்கு நீதி கிடைக்கிறதா என்று! (கிடைத்தது. )


இந்தக் குளிரைத் தாங்கும் வண்ணம் இங்கே வீடுகள் முதலில் கட்டப்படவில்லை. இங்கே முதலில் குடிபெயர்ந்தவர்கள் இங்கிலாந்து நாட்டிலிருந்து வந்த விவசாயிகள். அப்போது வீடுகளில் மரக்கட்டைகளைஎரித்து வீட்டை உஷ்ணப்படுத்தினார்கள். இந்தப் பழக்கம் இன்னும் உள்ளது. எல்லா வீடுகளில் இருந்தும்புகைபோக்கி மூலம் வரும் புகையானது, நகரைச் சூழ்ந்துகொண்டு அப்படியே நின்றுவிடுகிறது. இதனால்கொஞ்ச நஞ்சம் வரும் சூரிய வெளிச்சமும் பூமிக்கு வருவது தடைப்படுவதுடன், விமானப் போக்குவரத்துக்கும்இடைஞ்சலாகிவிடுகிறது. இதைக் குறைப்பதே இங்குள்ள நகரக் கவுன்சிலின் முக்கிய வேலையாக உள்ளது.மின்சாரத்தைப் பயன்படுத்தலாம் என்றால் அதன் கட்டணம் பயங்கரமாக ஏறிக்கொண்டே போகிறது.


இப்போது விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் பல வந்துவிட்டன அல்லவா? தற்போது கிடைத்துள்ள விவரத்தின்படி, குளிரைக் கட்டுப்படுத்தி, வீட்டினுள் ஏற்படுத்தும் உஷ்ணத்தைத் தக்கவைத்துக் கொள்ள ஒருவிதமான பஞ்சு நுரைபோல உள்ள 'பிங்க் பேட்'என்னும் பொருள் வீட்டின் உட்புறச் சுவரில் பதிக்கப்படுகிறது. ஆனால் இதையெல்லாம் புதிதாகக் கட்டும் வீடுகளில் தான் செய்யமுடியும். பழைய வீடுகளுக்கு இதைச் செய்ய முடியாது. ஜனத்தொகை அவ்வளவாக இல்லாத காரணத்தால் புதிதாக வீடுகள் கட்டப்படுவது குறைவே.


இதெல்லாம் குளிருக்குத் தெரியுமா ? வழக்கம்போல வந்து நம்மை உலுக்கி எடுத்துவிடுகிறது!இதுக்கெல்லாம் ஒரு கால அட்டவணையும் உள்ளது.குளிர்காலம் என்றால் ஜூன் முதல் தேதி தொடங்கும்.செப்டெம்பர் மாதம் ஒன்று முதல் இங்கே வசந்த காலம். இப்படியே டிஸம்பர் மாதம் கோடை, மார்ச் முதல்இலையுதிர்காலம். இதெல்லாம் அதிகாரபூர்வமான தேதிகள். ஆனால் இயற்கை அன்னைக்கு எந்த அட்டவணையும் தேவையில்லை! ஆகஸ்ட் மாதம் கடைசி வாரம் வரும்போதே, 'டா·போடில்' பூக்க ஆரம்பித்துவிடுகிறது.


வசந்த காலத்தில், இங்கு வித விதமான மலர்க்கூட்டங்களைப் பார்த்தாலும், மற்ற எல்லாக் காலங்களுக்கும்பூக்கள் பூக்கின்றன. இப்போது இங்கே நல்ல குளிர். ஆனாலும், பார்ப்பதற்கு 'ரோஜா'வைப் போலத்தோன்றும் 'கமீலியா' பூக்கள் பல நிறங்களில் பூத்துக் குலுங்குகின்றன. அவைகளுக்கு 'குளிர் விட்டுப் போச்சு'என்று நினைப்பேன். மேலும் 'விண்டர் காக்டஸ்' என்னும் செடியும் அழகாகப் பூக்கின்றது, இந்தக்குளிரிலும்!


கோடை வந்தாலே கொண்டாட்டம்தான். அதை வரவேற்க என்றே பெரிய விழா உண்டு. அன்று இரவு வாணவேடிக்கை நடைபெறும். அதற்காக என்றே ஒரு நிபுணர் பக்கத்து நாடான ஆஸ்திரேலியாவிலிருந்து வருவார்.எல்லாம் ஒரு ஒழுங்குமுறைப்படி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். அதேபோல, கோடை முடியும் சமயமும், அதைவழியனுப்புவது போல ஒரு வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெறும். ஊரே திரண்டு வந்து வேடிக்கைப் பார்க்கும்.
பட்டாசைப் பற்றிச் சொல்லும்போது இன்னொரு விஷயமும் ஞாபகம் வருகிறது. இங்கே பொதுவாகப் பட்டாசுகள்கிடைப்பதில்லை.ஆனால் நவம்பர் மாதம் ஐந்தாம் தேதி 'கை ·பாக்ஸ் டே' என்று கொண்டாடப் படுகிறது.இந்த 'கை ·பாக்ஸ்' என்பவன், 1605 ஆம் ஆண்டு, ப்ரிட்டிஷ் பார்லிமென்ட் கட்டிடத்தை தகர்ப்பதற்காக,திட்டம் போட்டவன். ஆனால் திட்டம் நிறைவேறும் முன்பே, வெடி மருந்துடன் பிடிபட்டு, மரண தண்டனைவிதிக்கப்பட்டு மரணம் அடைந்தான். அந்த நாளையே ஆங்கிலேயர்கள், 'கை ·பாக்ஸ்'தினமாகக் கொண்டாடுகிறார்கள்.சுருக்கமாகச் சொன்னால் இவன்தான் ஆங்கிலேயர்களின் 'நரகாசுரன்' எனலாம்! இந்த நிகழ்ச்சிக்காக இங்கே அக்டோபர் மாதம் 25/26 தேதிகளில் இருந்து, பட்டாசு விற்பனை உண்டு. எல்லாம்கம்பி மத்தாப்பு, பூ மாரி போல் இருப்பவை மட்டுமே. வெடிகள் வெடிக்க முடியாது. அது தடை செய்யப்பட்டுள்ளது.இவைகளும் நவம்பர் 5 ஆம் தேதி மாலை வரை மட்டுமே கிடைக்கும். அதற்குப்பின் விற்பனைக்கு அனுமதி இல்லை.
இதில் ஒரு வேடிக்கை என்ன வென்றால், பதினாலு (14) வயதுக்குட்பட்டவருக்கு விற்க மாட்டார்கள். பெரியவர்கள்மட்டுமே வாங்க முடியும்!பட்டாசு கொளுத்த, சின்ன வயதுக்காரர்களுக்குத்தானே மிகவும் விருப்பம்!


எப்படியோ ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் இந்த விழாவால் எங்களுக்கும் ஒரு நன்மை உண்டு. நம் நாட்டுப் பண்டிகை'தீபாவளி' அனேகமாக அக்டோபர்/ நவம்பரில் தானே வருகிறது. இங்கே கிடைக்கும் இந்த பட்டாசுகளை வாங்கி வைத்துக்கொண்டு, தீபாவளி சமயம் நம் வீட்டுப் புல்வெளியில் கொளுத்தி (சும்மா, ஒரு சாஸ்த்திரம்,சம்பிரதாயம் தான்) மகிழ்வோம்.


இந்தக் குளிரினாலும் நாட்டுக்கு நன்மை உண்டு. இதுவும் அன்னியச் செலாவணியை ஈட்டுகிறது! பூமத்திய ரேகையின் வடக்கில்இப்போது கோடை அல்லவா? ஆகவே பனிச் சறுக்கு விளையாட்டில் ஈடுபாடு உள்ளவர்கள், பனிமலைகளைத் தேடி, இங்கேவருகிறார்கள்.'சதர்ன் ஆல்ப்ஸ்' என்று அழைக்கப்படும் மலைத் தொடரில் உள்ள பனி படர்ந்த இடங்கள் இவர்களின் விளையாட்டுமைதானமாகிவிட்டன! இந்த மலைத் தொடரில்தான் பூமத்திய ரேகையின் தெற்கில் உள்ள மிக உயரமான மலைச் சிகரம் இருக்கிறது.இதன் பெயர் 'மவுண்ட் குக்'. இந்தத் தீவைக் கண்டு பிடித்தவர்தான் 'கேப்டன் குக்'. சில ஆண்டுகளுக்கு முன், இந்தச் சிகரம்அதன் கூம்புப் பகுதி உடைந்து விழுந்து கொஞ்சம் குள்ளமாக ஆகிவிட்டது! 'மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்கவில்லை' என்றுசொல்வதுபோல இதுதான் இன்னமும் உயர்ந்த இடமாக உள்ளது!


ஆட்டக்காரர்களுக்குத் தேவையான அளவில் பனி இல்லையென்றால், செயற்கை முறையில் பனியை இப்போதெல்லாம் உருவாக்கிவிடுகின்றனர்! எல்லாம் ஒரு வியாபார நோக்கம்தான்! இவை மட்டுமின்றி, எளியவர்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும் இயற்கையேபல இடங்களில் பனி பெய்து வைக்கிறது! சிறிய குன்றுகள் ஏராளமாக 'ரோடு' ஓரத்திலேயே இருக்கின்றன. முதல்நாள் நல்ல பனிமழைபெய்துவிட்டு, மறுநாள் நல்ல வெயிலாக இருக்கும் பட்சத்தில், சின்னக்குழந்தைகள் உள்ளவர்களும், நம்மைபோல 'பனிச் சறுக்கை'ரசிக்கமட்டுமே தெரிந்தவர்களும் கூட்டமாக இந்த இடங்களுக்கு படை எடுப்போம்! 'ப்ளாஸ்டிக் ஷீட்'எடுத்துக் கொண்டுபோய், குன்றில்கொஞ்சதூரம் ஏறிவிட்டு, அந்த விரிப்பில் உட்கார்ந்தால் தானாய் வழுக்கிக்கொண்டு கீழே வந்துவிடலாம்!
'ரோஜாக் கன்னங்களுடன்' சிறுவர், சிறுமியர் இப்படி விளையாடுவதைப் பார்ப்பதே அருமையாக இருக்கும்! ஐந்தாறு மாதக் குழந்தைகளும்இதில் ஈடுபடும்!


ஆனால், விளையாடி முடித்த பின்பு, அனைவரும் அவரவர் கொண்டு போயிருந்த 'ப்ளாஸ்டிக் விரிப்பு'களை அங்கேயே விட்டுவிடாமல்கவனமாக திரும்ப எடுத்துக் கொண்டு வந்துவிடுவோம்! இங்கேயும் இப்போதெல்லாம் 'ப்ளாஸ்டிக் அரக்கனை' எதிர்க்க ஆரம்பித்துள்ளனர்.


சும்மா குளிர் குளிர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேனே! எத்தனை டிகிரி என்று யாருக்கும்சந்தேகம் வரவில்லையா?


இப்போது குளிர் காலம் அல்லவா? ஆகையால் பல நாட்களில் 'சிங்கிள் டிஜிட்' தான். அநேகமாகஏழு அல்லது எட்டு டிகிரி வரை வரும். பனி பெய்யும் நாட்களில் ஸீரோ டிகிரி அல்லது சில சமயங்களில்மைனஸ் இரண்டு, மூன்று என்று போகும்.


கோடையில் பதினெட்டு முதல் இருபத்தி இரண்டுவரை போகும். எப்போதாவது இருபத்தொன்பது, முப்பதுஆகிவிடும். அன்று தெருவில் நம்மை காண்போரெல்லாம் 'இண்டியன் சம்மர், நல்லா இருக்குமே உங்களுக்கு'என்று அன்புடன் விசாரிப்பார்கள்.(நமக்கும் அது ரொம்ப சூடாத்தான் இருக்கும்.இங்கே வந்து அநேக ஆண்டுகள்ஆனதால் நம் உடல் இந்த ஊர் காலநிலைக்குப் பழக்கப்பட்டிருக்கும் அல்லவா? ஆனால் ஒரு அசட்டுச் சிரிப்பைமட்டும் காட்டிவிட்டு போகவேண்டியதுதான்!)


இந்த உஷ்ணமே நமக்கு அதிகமாகத் தெரிவதன் காரணம் என்னவென்றால், இங்கே காற்றில் ஈரப்பதம் இல்லை.ஆகவே எந்த சூட்டுக்கும் நமக்கு உடல் எரிவது போல இருக்குமே தவிர வேர்க்காது. உடம்பு வேர்த்தால் தானேசூடு வெளியேறும்! ( அணியும் ஆடைகள் அழுக்காகாது. இது ஒரு லாபம்)
மற்றபடி வசந்த காலம், இலை உதிர்காலம். இவை இந்த குளிருக்கும், சூட்டுக்கும் இடைப்பட்டது தான். ஆனால்காலம் எதுவாக இருந்தாலும், தெற்கேயிருந்து காற்று வந்தால் 'தொலைந்தோம்' எப்போதும் ஒரு குளிருக்கான 'கோட்' கையிலிருப்பது மிகவும் அவசியம்.


இங்கே நியூஸிலாந்துலே குளிராச்சா. எதுவுமே கெடாது. பழைய குழம்பை கீழே ஊத்துறதுக்கு ஒரு காரணம் வேணுமேன்னு, ·ப்ரி¢ட்ஜ்லே வைக்காம வெளியிலே வைப்பேன். அது கெட்டுப் போயிட்டா,ஆஆஆஆ கெட்டுப் போச்சு,அதனாலே கீழே ஊத்தியாச்சுன்னு 'ஜஸ்டி·பை' பண்ணலாம்னு பாத்தா,ஊஹ¥ம் .. கெடாம நல்லாவே இருக்கும். ஊரே ·ப்ரிட்ஜ்லே இருக்கற மாதிரிதான்.


நன்றி: சங்கமம் 2004


( இந்தத் தொடர் தமிழ்நாட்டைவிட்டு வெளியே இதுவரை போகாத மக்களுக்காக எழுதப்பட்டது)

Saturday, September 24, 2005

வருஷம் ஒண்ணு!

இன்னையோட இந்த வலை பதியற தொழிலுக்கு(!) நான் வந்து ஒரு வயசாகுது. எப்பப் பார்த்தாலும் கணி முன்னாலேஉக்காந்துக்கிட்டு 'டொக்கு டொக்கு'ன்னு என்னத்தைத் தட்டிக்கிட்டு இருக்கா அம்மான்னு என் ரெண்டு பூனைங்களும் ஒரு லுக் விட்டுட்டுப் போறது இப்ப ரொம்ப சகஜமாப் போயிருச்சு.


இந்த ஒரு வருசத்துலே அரட்டை அடிச்சது போக உருப்படியா என்ன செஞ்சேன்னு பார்த்தா.....


பார்த்தா? ஒண்ணுமேயில்லைன்னுதான் சொல்லணும். 'ஸ்டாப் ஸ்டாப்' ஒரேடியா அடக்கி வாசிக்கறது வேணாம்.


போட்ட பதிவுகளிலே என் மனசுக்குப் பிடிச்சதுன்னு சொன்னா, ஃபிஜித் தீவுகளைப் பத்தி வந்த 21 பதிவுங்க,என்னுடைய செல்வங்களைப் பத்திவந்த 18 பதிவுங்க ( இதை நான் ஆரம்பிச்சது மரத்தடியிலே இருந்துதான்,அப்புறம் இங்கேயும் அங்கேயுமா பதிஞ்சுவச்சேன்) புத்தகமும் பழக்கமும் என்ற தலைப்புலே வந்த 5 பதிவுங்க,சிங்கைப் பயணக்கட்டுரையா வந்த ஒரு 10 பதிவுகன்னு சொல்லலாம். இதுலே ரொம்பப்பிடிச்சுப் போனதுஇந்த சிங்கைப் பயணம். காரணம் என்னன்னா, இந்த வலை உலகத்துலே எழுத்துமூலமே பரிச்சயப்பட்டிருந்தவுங்க சிலரை, நேருக்குநேராப் பார்த்தது!

முதல்முறையா சந்திச்சாலும், ரொம்ப நாள் பழக்கத்துலே இருக்குற நண்பர்களைச் சந்திச்ச ஒரு உணர்வு. கிட்டத்தட்ட, நம்மகூட வேலை செய்யறவங்களை தினம்தினம் பார்ப்பமே அது போல! ஏதோ விட்டகுறை தொட்டகுறையாஇருந்தது. பொதுவா எழுத்தாளன்/ளிக்கு அவுங்களோட இயல்பான முகம் ஒண்ணு, எழுத்தாலே அறியப்படுற முகம்ஒண்ணுன்னு இருக்கறதா, பரவலான அபிப்பிராயம் இருந்தாலும், அப்படி வேறுபடுத்திப் பார்க்க முடியாம, எழுத்தே தானாய்,தானே எழுத்தாவும் இருக்குற சிலரையும் தெரிஞ்சுக்கிட்டதுலே சந்தோஷம்தான்.



என்னையும் ஒரு எழுத்துக்காரியா(!) மொதமொதல்லே ஏத்துக்கிட்டது மரத்தடிதான். அங்கே ஒரு ஆறுமாசம்,கூட்டுக்குடித்தனமா குடியிருந்துட்டு அப்புறம் தனிக்குடித்தனம் செய்ய ப்ளொக்கருக்கு வந்து, அப்படியே 'தமிழ்மணம்' ன்ற'அப்பார்ட்மெண்ட்'க்கும் வந்துட்டேன். செளகரியமாத்தான் இருக்கு.


நண்பர் காசி இந்த 'பில்டிங்'கை அருமையாக் கட்டி இலவசமா தமிழ்வலைஞர்களுக்கு கொடுத்திருக்கார். அவர்கூடசேர்ந்து சில நண்பர்கள் எதாவது மராமத்து, ரிப்பேர் வேலை,( தண்ணி வரலை, பவர் போயிருச்சு, லிஃப்ட் ரிப்பேர் இப்படிஎதாவது)எல்லாம் கவனமாப் பார்த்து செஞ்சுதராங்க. மதிதான் இந்தக் கட்டிடத்துக்கு 'இன்டீரியர் டெகரேட்டர்'. அபார்ட்மெண்ட்லே இருக்கறவங்களுக்கு என்ன மாதிரி தேவைங்க இருக்குன்னு பார்த்துச் செஞ்சுதராங்க.இந்த பில்டிங்குலே நிறைய இளவயது ஆட்கள் குடியிருக்காங்க. அவுங்கெல்லாம் தங்களுக்குத் தேவையான அல்ங்காரத்தைத் தானே செஞ்சுக்கற திறமை இருக்கறவங்க. என்னைமாதிரி கொஞ்சம் பழையகாலத்து ஆளுங்க இருக்காங்க பாருங்க அவுங்களுக்கு எல்லா உதவியும், (அலங்காரத்தைப் பொறுத்தவரைங்க)செஞ்சு குடுத்தது இவுங்கதானாம். ஒருத்தர்க்கு ஒருத்தர் எப்பவாவது இமெயிலிலே சந்திக்கறப்பப் பேசித் தெரிஞ்சுக்கிட்டது. காசிக்கும், மதிக்கும் எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை.( பதிவாவே போட்டு அவுங்களைஅறுக்கவேண்டியதுதானா?:-))

இன்னும் நான் நேரிலே சந்திக்க இஷ்டப்படுற ஆக்கள் இங்கே நிறைய இருக்காங்க. வேளைதான் வரலை. ஆனாநட்பு வட்டம் பெருசாகிகிட்டே போகுது. இப்போ உலகத்துலே எந்த இடத்தைச் சொன்னாலும் அங்கே எனக்குத் தெரிஞ்சவுங்க(!) இருக்கறதா கோபால் கிட்டே பெருமையாச் சொல்லிக்கறேன். இதுலே சில 'பெருந்தலை'களும்உண்டு.


ஒரு பத்து நிமிஷம் கிடைச்சாலும் போதும், ஓடிவந்து யார் என்ன எழுதியிருக்காங்கன்னு பார்க்கற வழக்கம் வந்துருக்கு.முந்தி இப்படித்தான் டிவி.யே கதின்னு இருந்தேன். ஒருவழியா அந்த அடிக்ஷன்லே இருந்து வெளியே தப்பி வந்துட்டேன்னுஇருந்தப்ப, இப்படி இந்த அடிக்ஷன் வந்துருச்சு. ஆனா இதுலே இருந்து தப்பிக்கணுமுன்னு நினைக்கலை. இது 'நேரம்விழுங்கி'ன்னாலும் மனசுக்கு சந்தோஷமாத்தான் இருக்கு. அதுலேயும் ஒரு பதிவைப் போட்டுட்டு, அதைப் படிச்சவுங்கஎதாவது பின்னூட்டம் கொடுத்துருக்காங்களான்னு ஓடிப் போய் பாக்கறப்ப, எதாவது இருந்தா அதுத் தனி மகிழ்ச்சி.


எல்லாரும் அக்கா அக்கான்னு கூப்புட்டு எழுதறப்ப ஏதோ ரத்தபந்தம் இருக்கற சொந்தங்களோட இருக்கற உணர்வுவந்துருது. இந்தச் சின்னவயசுக்காரங்ககூட நானும் சேர்ந்துக்கிட்டு சிலசமயம் படம் காட்டுறதும், கலாய்க்கறதுமாகூத்தடிச்சுக்கிட்டு இருக்கேன். எங்கியோ ஒரு கோடியிலே வசிக்கிறோமேன்னு இருந்த தனிமையுணர்வு கூடபோயேபோச்!


நான் இன்னும் கத்துக்கவேண்டியது நிறைய இருக்கு. மொதல்லே தமிழை ஒழுங்கா எழுதக் கத்துக்கணும். அப்புறம்உங்க 'ஹரியண்ணா' சொன்னதுபோல( எனக்குத்தான்) !!!!!!! இதை கொஞ்சமா, (குழம்புலே பெருங்காயம் சேர்க்கறமாதிரியா?)உபயோகிக்கணும். ஏகப்பட்ட !!!!!!! அள்ளித் தெளிச்சுடறேன்னும், அது அங்கங்கே 'ஸ்பீட் ப்ரேக்கரா' இருக்குன்னும்சொன்னார். கவனமாத்தான் இருக்கேன். ஆனாலும்.............!


எழுத ஆரம்பிச்சுட்டு, அப்படியே ஓரங்கட்டி வச்சிருக்கறதையெல்லாம் எடுத்து தூசிதட்டி,திரும்ப ஆரம்பிக்கணும்.ரெண்டு ரெண்டரை வருசத்துக்கு முன்னே நான் எழுதி, நானே படிச்சிட்டு 'கப்சுப்'ன்னு இருந்ததையெல்லாம் திரும்ப எடுத்து உங்களைச்சோதிக்கலாமான்னும் ஒரு நினைப்பு அப்பப்ப வருது. பார்க்கலாம், மனசுலே தைரியம் வருதான்னு?


இன்னொரு முக்கியமான பாயிண்ட். வலவளன்னு எழுதிக்கிட்டுப் போகாம 'நறுக்'குன்னு நாலே வார்த்தையிலேசொல்ல வந்ததைச் சொல்லமுடியுமான்னு பார்க்கணும்.( இதையே எப்படி நீட்டிட்டேன் பார்த்தீங்களா?)


சுருங்கச் சொல்லி?

ம்ம் ஊஹூம்.....

இதுவரைக்கும் போட்ட பதிவுங்க இதோட 192

இந்தப் பதினோரு மாசத்துலே நம்ம வீட்டுக்கு வந்தவுங்க 32453

அதென்ன பதினோரு மாசம்? ஒரு மாசம் கழிச்சுத்தானே 'கவுன்டர்' வந்தாரு.

கடந்து வந்தது எல்லாமே மலர் தூவுனதா இல்லை. ஆனா இந்த சந்தோஷமான நேரத்துலே என்னத்துக்குக் கெட்டதைநினைக்கணும்? நான் மறந்துட்டேன்.

பெரியோர்களே, தம்பிகளே, தங்கைகளே இதுவரை தந்த ஆதரவுக்கு நிஜமாவே நன்றி. எல்லாரும் நல்லா இருங்க.

என்றும் அன்புடன்,

துளசி.
24/09/05



Friday, September 23, 2005

நியூஸிலாந்து. பகுதி 3

'பிரசவத்துக்கு இலவசம்'


இது என்ன ? ஆட்டோவுலே எழுதியிருக்குறதா? இல்லங்க. இங்கே நியூஸிலாந்து நாட்டில்தான் 'பிரசவத்துக்கு இலவசம்'.ஆஸ்பத்திரி, டாக்டர், இப்படி அப்படின்னு ஒரு செலவும் கிடையாது!!!ஏன் தெரியுமா? இங்கே ஜனத்தொகை ரொம்ப இல்லை. நாடு முழுவதும் இருக்கற ஜனங்களைக்கூட்டினாலே 40 லட்சத்துக்கு மேல இல்லை. ஆனா ஆடுங்க 480 லட்சம் இருக்கு. ஆளுக்கு 12 ஆடுகள்.அதனாலே அரசாங்கமே மக்கள்தொகைப் பெருக்கத்தை ஆதரிக்கின்றது. சிவப்பு முக்கோணம் எல்லாம் இல்லீங்கோய்....



மேலே படிக்கறதுக்கு முன்னாலே ஒரு நிமிஷம். நேத்து பாயிண்ட்ஸ் பத்திப் போட்டிருந்ததுபோனவருஷ நிலவரம். இப்ப சமீபத்துலேஆன மாறுதல் இதுன்னு தோழி ஒருத்தர் தனிமடலில்சொன்னாங்க. இதைக் கவனியுங்க. எல்லாவிவரமும் இப்ப இணையத்துலேயே கிடைக்குது.


இந்த system எல்லாம் இப்போ மாறி விட்டது.இப்ப 100 points இருந்தால் Expression Of Interest apply பண்ணலாம். பதிலுக்கு NZIS Invitation to Apply அனுப்பும்.
சீக்கிரமா அப்ளை செஞ்சு வந்து சேருங்க. வலைஞர்கள் மகாநாடு நடத்தணும்:-))))

ஒரு பெண், தான் கர்ப்பமுற்றிருப்பதாக நினைத்தால், உடனே அவ்ர்களுடைய குடும்ப டாக்டரிடம்பரிசோதனை செய்யவேண்டியது. அந்த நிலை உறுதியானால், அந்த மருத்துவரே ஒரு 'மிட்வொய்·ப்'எனப்படும் பேறுகால உதவிசெய்யும் மருத்துவத் தாதியை ஏற்பாடு செய்துவிடுவார். அல்லது, அவர்கள்தரும் பெயர் பட்டியலில் இருந்து, உங்களுக்கு பிடித்தவரை ஏற்பாடு செய்து கொள்ளலாம். அனேகமாக,கர்ப்பிணி வசிக்கும் இடத்துக்கு சமீபமாக இருப்பவரை தெரிவு செய்வார்கள். அப்போது தானே, கூப்பிட்ட குரலுக்கு ஆள் வரும்.


அதன்பின், அந்த மருத்துவத் தாதி, கர்ப்பிணியின் வீட்டுக்கே சென்று, எல்லா விவரங்களையும் தெரிந்துகொண்டு, தேவையான ஆலோசனைகளையும், கரு நல்ல நிலையில் வளர்கின்றதா என்றுஅறிய உதவும் 'ஸ்கேன்' ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்து விடுவார். இரத்தசோகை உள்ளதா என்றும்பரிசோதனை நடக்கும். அவ்வப்போது, தொலைபேசி மூலமும், நேரிலும் வந்து கவனித்துக் கொள்வார்கள்.


பிரசவ காலம் நெருங்கிவரும்போது, அடிக்கடித்தொடர்பு கொண்டு கவனிப்பார்கள். கர்ப்பிணியும்,அவரது'பார்ட்னரும்'(கவனிக்கவும், கணவன், மனைவி என்ற சொல் பிரயோகம் இல்லை. எல்லாம் 'பார்ட்னர்ஷிப்'தான்)கைத்தொலைபேசி மூலமும் மருத்துவத்தாதியை என்நேரமும் தொடர்பு கொள்ளலாம். முதல்முறையாகப்பெற்றோர் ஆகிறார்களென்றால், இருவருக்கும் வகுப்புகள் வேறு நடக்கும்.பிரசவ வலி கண்டவுடன் என்னசெய்யவேண்டும்?, குழந்தையை எப்படிப் பிடித்து தூக்க வேண்டும், ஆடை, 'டையாபர்' அணிவிப்பது எப்படி,ஈர நாப்கின்களை எப்படி அப்புறப்படுத்துவது இத்யாதிகள்.


வலி வந்தவுடன், ஆசுபத்திரிக்குப் போய்க் குழந்தையைப் பெற்று எடுக்கும் வரையிலும், அந்தத் தாதிகூடவே இருந்து உதவி செய்வார்கள். சுகப் பிரவசமோ, சிக்கலானதோ எதற்கும், தேவையான எல்லாஏற்பாடுகளும் இலவசமே.


குழந்தை பிறந்தவுடன்,வேறு ஒரு மருத்துவ மனைக்கு( இது முன்பு தனியார் மருத்துவமனையாக இருந்தது)தாயும், குழந்தையும் கொண்டு போகப்படுவார்கள். அங்கே 2 நாள் முதல் ஒரு வாரம் வரையிலும்உங்கள் விருப்பம்போலத் தங்கலாம். 'ஐந்து நட்சத்திர ஹோட்டல்' போன்ற ஆடம்பரத்துடன் இருக்கும்இங்குள்ள அரசாங்க மருத்துவமனைகள். தனியார் மருத்துவமனைகள் ஏறக்குறைய இல்லவே இல்லைஎனலாம். எல்லா 'வார்டு' களிலும், ஏராளமான காலிப் பூச்சாடிகள் வைத்திருப்பார்கள். நோயாளியைப்பார்க்கவரும் பார்வையாளர் கொண்டுவரும் பூக்களை வைப்பதற்காம்.


சரி. குழந்தை பிறந்து விட்டது. இனி அவர்கள்பாடு என்று போய்விட மாட்டார்கள்.'plunket' என்றஅமைப்பு, குழந்தையின் நலனைக் கவனிக்க வந்துவிடும். வீட்டிற்கு வந்து, குழந்தையைக் குளிப்பாட்டுவது,சரியானபடி உணவு( பால் தான்) புகட்டப் படுகின்றதா, எடை கூடிவருகிறதா, தடுப்பு ஊசிகள் போன்றஅனைத்தையும் பார்த்துக் கொள்வார்கள். வீட்டீற்கு வரும்போதே, குழந்தையின் கார் பயணத்திற்கென்றே விஷேசமாகத் தயாரிக்கப்பட்ட , கூடைபோன்ற 'கார் சீட்' தரப்படும். சிறு தொகை ஒன்றை வசூலிக்கின்றார்கள் என்று நினைக்கின்றேன். (முந்தியெல்லாம் இது இலவசமாக இருந்தது)இதனை, 6 மாதங்கள் வரை வைத்துக் கொள்ளலாம். குழந்தைக்கான சாமான்கள் விற்கும் 'பேபி சிட்டி'போன்ற கடைகளில்வாங்கலாம். குழந்தை பெரிதானவுடன் விற்றுவிட்டால் ஆச்சு! இது இல்லாமல் பயணம் செய்தால், போலீஸ் பிடித்துக் கொண்டு, அபராதம் கட்டவேண்டும். மேலும், பாதுகாப்பு தரவில்லை என்ற வழக்கும் போடுவார்கள். இங்கே கார் வைத்திருப்பதுமிகவும் அவசியம். 'சோறு' இல்லாமல் இருப்பார்களே தவிரக் 'கார்' இல்லாமல் இருக்க மாட்டார்கள்.சொல்ல மறந்து விட்டேனே! அப்பாவுக்கு 7 வேலை நாட்கள் சம்பளத்துடன் லீவு உண்டு. தாய்க்குஉதவுவதற்காக. 'paternity leave'


சமீப காலமாக, 'ஹெல்த் இன்ஷ¥ரன்ஸ்' ( தமிழில் என்ன? .....காப்பீடு ?)நிறுவனம் ஒன்று,முன்னேற்பாடுடன்( pre organaised) செய்யும் அறுவை சிகிச்சைகளுக்கு, (இதயம், சிறுநீரகமாற்று, இடுப்பெலும்பு மாற்று போன்றவை) ஒரு மருத்துவமனை கட்டியுள்ளது.இது இன்னும் நன்றாக இருக்கும். அந்தக் குறிப்பிட்ட நிறுவனத்தில்'ஹெல்த் இன்ஷ¥ரன்ஸ் பாலிஸி' எடுத்தவர்களுக்கு மட்டுமே இந்த சேவை.இன்னொரு முக்கியமான விஷயத்தை விட்டுட்டேனே. எல்லா மருத்துவ மனைகளிலும் சாப்பாடு நன்றாக இருக்கும்.தினமும்,3 'மெனு கார்ட்'தருவார்கள். நமக்குப் பிடித்த உணவைக் குறித்துக் கொடுத்தால் போதும். 3 course meal. கூடவே குடிக்க 'wine'ம் தருவார்கள். நமக்குப் பழக்கமில்லை என்று சொன்னால்ஒரு விசித்திரப் பார்வை வீசப்படும். 'பாத்தாப் பாருன்னு' இருப்போம். நமக்குத்தெரிந்தவர்கள் யாராவது,மருத்துவமனையில் இருந்தால், மாலை நேரத்தில் அவர்களைப் பார்க்கப்போவோமல்லவா? அப்போதுஅங்கே உணவுக் கூடத்திலிருந்து 'பசியைத்தூண்டும் ஒரு வாசனை' வரும் பாருங்க! ஆஹா!!!!ஆனால், நோயாளி அவைகளை ரசித்து, ருசித்து உண்ணும் மனநிலையில் இருக்கவேண்டுமே?


எல்லா சேவைகளும் சரியென்றும் சொல்ல முடியாது. ஒரு முறை எங்களுக்குஏற்பட்ட அனுபவம் மிகவும் பயங்கரமானது.அதைப் பற்றி வேறு ஒருசமயம் சொல்வேன்.


ஒவ்வொரு நகரத்திற்கும் ஒரு அரசாங்க மருத்துவமனை உள்ளது. இது தவிர,பெரிய நகரங்களில் முதியோர் சிகிச்சைக்காக ஒரு மருத்துவமனையும் உள்ளது. இது தவிர 'முதியோர்கள் இல்லம்' நிறைய உள்ளன.அவையெல்லாம், தனியார்கள் நடத்துபவை.மிகச் சிலவற்றைத்தவிர,வணிக நோக்கத்துடன் நடப்பவைகளேபெரும்பாலும்.


பொது மருத்துவராக உள்ளவர்களைபற்றியும் ஒரு விஷயம் இங்கு சொல்லணும். திங்கள் முதல் வெள்ளி வரைதான் அதுவும் 9 முதல் மாலை 5 வரை மட்டுமே அவர்களைப் பார்க்க முடியும். மாலை 5 மணிக்கு மேல் காலை 9 வரை அல்லது வார இறுதிகளில் ஏதாவது ஏற்பட்டு மருத்துவ உதவி தேவைப்பட்டால், அரசாங்க மருத்துவமனைக்கோ அல்லது 'after hoursurgery' என்று இயங்கும் இடத்திற்கோ போகலாம்.அரசாங்க மருத்துவமனை என்றால் இலவசம்.மற்ற இடம் என்றால் இரட்டிப்பு காசு. நம்ம வீட்டில் பிள்ளைகளுக்கெல்லாம், வெள்ளிக்கிழமை மாலை5 மணிக்குமேல்தான் வாந்தி, காய்ச்சல் என்று ஆரம்பிக்கும். இந்த ஊருக்கு வந்த புதிதில் அனேகமாகஎல்லா வார இறுதிகளிலும் ' எமெர்ஜென்ஸி க்ளீனிக்' எனப்படும் 'ஆ·ப்டர் அவர் சர்ஜெரி'யில்தான்வரிசையில் அமர்ந்திருந்தோம். நம்முடைய முறை வருவதற்குள், இந்த வாந்தியெல்லாம் நின்று போயிருக்கும்.


குழந்தைகளின் ( 18 வயது வருவரை) உரிமைகளைப் பற்றி கதையே எழுதலாம். அப்புறம் சொல்வேன்.

நண்றி: சங்கமம் 2004
********************************************************************


Thursday, September 22, 2005

நியூஸிலாந்து பகுதி 2

சமீப காலமாக இந்த நாட்டின் புகழ் பரப்பும் செயலை, நம் திரைப்பட உலகத்தினர் திறமையாகச் செய்துவருகிறார்களெனத்தெரிகிறது. திரைப்படம் என்பது ஒரு 'mass media'. மக்களை எளிதில்சென்றடைகிறதல்லவா? நானுமே, வலைகளில் வலம்வரும்போது, சினிமாச் செய்திகளைப் படிப்பேன்.சினிமாவுக்கென்று ஒரு கவர்ச்சி உள்ளதை மறுக்க முடியாதல்லவா?


போன வாரம் வெளியான ' குமுதம்' என்ற வெகுஜன இதழில்,இங்கே தனுஷ் நடிக்கும் 'சுள்ளான்' படபிடிப்பிற்கு வந்த இயக்குனர் 'நியூஸிலாந்து' நாட்டைப் பற்றிக்கூறியுள்ளார். தண்ணீர் பாட்டில் விலை 150 ரூபாய் என்றும் சொல்கிறார்.


தண்ணீர் பற்றிப் பேச்சு வந்ததால், தண்ணீர் பற்றித் தெரிவிக்க வேணுமல்லவா?. சும்மா சொல்லக் கூடாது,உண்மையாகவே, மிகவும் உலகத் தரம் உயர்ந்த, சுத்தமான குடினீர் இங்கு, நம் வீட்டுக் குழாயிலிலேயேவருகிறது. அப்படியே குடிக்கலாம். காய்ச்ச வேண்டிய அவசியமில்லை. திரைப்படக்காரர்களின்'பந்தா' தனியாச்சே!
போதாக்குறைக்கு, சினிமா நடிகைகளான சினேகா, ரீமா சென் போன்ற அம்மணிகளும் கொ.ப.செ.ஆகிவிட்டனர் போலுள்ளது.'ஜனா' படத்தில் ஒரு காட்சியில், 'நியூஸிலாந்துக்கு போய்விடலாம், மைக்கிரேஷன் ஆவது ரொம்ப ஈஸி'என்றொரு வசனம். இதுபோல் ஆளாளுக்கு இஷ்டம்போல் அளந்து விடுவதால், நம் ஜனங்களும், இங்கே'தேனும், பாலும்' ஓடுவதாக நினைக்கலாம். (ஊரெல்லாம் ஈ வந்துடாதோ?)



எந்த ஒரு நாட்டையுமே சுற்றுலாப் பயணியாக பார்க்கும் பார்வைக்கும், அங்கேயே தங்கி வாழ்வதற்கும்நிறைய வித்தியாசங்கள் உள்ளன.'பாயிண்ட்' அடிப்படையில் இப்போதெல்லாம் 'பெர்மனெட் ரெஸிடென்சி' தருகிறார்கள். படிப்பு, அனுபவம், வயது, ஆங்கில மொழி அறிவு இன்னும் பல அம்சங்களின் அடிப்படையில் மதிப்பெண் போல சில எண்கள் தரப்படுகின்றன. மொத்தம் 29 வந்தால், உங்களுக்குக் கிடைக்கக் கூடிய சாத்தியக்கூறுகள்உண்டு. ஆனால், உங்கள் படிப்புக்குத்தகுந்த வேலை கிடைப்பதற்கு ஒரு உத்திரவாதமும் இல்லை. இன்னும்சொல்லப்போனால், பல படிப்புகளுக்குக் கிடைத்த 'டிகிரி' களுக்கும் அங்கீகாரமே கிடையாது எனலாம்.உடலுழைப்புக்கு அஞ்சாமல், எந்த வேலையாயினும் சரி என்ற மன நிலையிருப்பவர்கள் ஓரளவு தப்பித்துக்கொள்வார்கள். ஆனால், ' டாக்டர், எஞ்சீனீயர்' போன்ற தொழிலுக்குப் படித்தவர்களின் நிலமை மிகவும் மோசம். அந்தப்படிப்புக்கு இடம் கிடைக்கவே, அவர்கள் 'டொனேஷன்,மற்றும் அந்த நிதி, இந்த நிதிஎன்று எவ்வளாவோ செலவழித்திருப்பார்கள். இங்கே வந்தால், அவர்கள் சில தேர்வுகளை எழுதவேண்டும்.அது அவ்வளவு சுலபமல்ல. சிலசமயம் பார்க்கும்போது, வேண்டுமென்றே அவ்வளவு கடுமையான தேர்வுமுறைகளைவைத்துள்ளனரோ எனத்தோன்றும். அதுவும் 3 முறைதான் வாய்ப்பு. மூன்றாவது முறையும் தவறினால், பிறகுஅவர்களுக்குத் தேர்வு எழுதவுமே அனுமதி இல்லை. தேர்வுகளுக்கு கட்டணமும் கூடுதல். ஒவ்வொரு தேர்வுக்கும்நம்நாட்டு நாணய மதிப்பில் 2 முதல் 3 லட்சங்கள் கட்ட வேண்டும். என்னதான் ஆங்கில அறிவுக் கல்வியில்படித்திருந்தாலும், இவர்கள் பேசும் 'ஆக்ஸென்ட்' புரிந்து கொள்வது முதலில் கொஞ்சம் கஷ்டமே. இந்தியர்களுக்கு'பிரிட்டிஷ்'காரர்களின் உச்சரிப்புக் கூட சற்று சுலபமாகப் புரிந்துவிடும். ஆனால், நியூஸிலாந்து, ஆஸ்திரேலிய உச்சரிப்புஉச்சரிப்பு சற்று வித்தியாசமானது.( நியூஸிலாந்துக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் கூட வித்தியாசம் உண்டு, அவர்களைஇவர்களும், இவர்களை அவர்களும் கேலி செய்வதும் 'ஜோக்' குகளும் கூட நிறைய உண்டு) என்னடா எல்லாம்எதிர்மறையாகச் சொல்கிறாளே என்று நினைக்க வேண்டாம். அப்படித் தேர்வில் மட்டும் தேறிவிட்டால், எங்கேயோ.....போய்விடலாம். மிகவும் நல்ல சம்பளம், ஆரம்பமே 20 லட்சம் வருடத்திற்கு. வரிகளும் உண்டு. அதை பற்றி அப்புறம்.


இந்தியாவில் கல்வி ஆண்டு தொடங்கிய நிலையில், குழந்தைகளை ஓரளவு நல்ல பள்ளிகளில் சேர்ப்பதற்குஓடியாடி, நொந்து நூலாகிப்போன பெற்றோர்க்கு ஒரு இனிப்பான ( ஒருவேளை அவர்கள் வயிற்றெரிச்சலைக்கிளப்புவதற்கோ?)செய்தி! இங்கே தனியார் கல்வி நிலையங்கள் மிகவும் குறைவு.அவைகளும், கிறிஸ்தவ மதத்தைச்சார்ந்தவைகளே. கல்வித்தரத்தில் அரசாங்கப் பள்ளிகளுக்கும், தனியார் பள்ளிகளுக்கும் வேறுபாடு( மத போதனையைத் தவிர) ஒன்றுமே இல்லை எனலாம். பெற்றோர்களீல் 99 சதவிகிதத்தினர் அரசாங்கப் பள்ளீகளையே விரும்புகின்றனர்.அட்மிஷன் கட்டணம், அன்பளிப்பு என்றெல்லாம் அதிகமாக ஒன்றுமில்லை. பெற்றோர், ஆசிரியர் சங்க நிதி மட்டும் உண்டு.அதையும் கட்டாயமாக அடைக்க வேண்டுமென்றில்லை. முடியாவிட்டால் சொல்லிவிடலாம். அதுபோல, மதிய உணவு கொடுத்துவிடமுடியாத ஏழ்மை ( ?) நிலையெனில், மற்ற மாணவர்கள் அறியமுடியாதபடி, அந்த்ப் பிள்ளைகளுக்கும் மிகச் சிறந்த உணவுஏற்பாடு செய்யப்படுகின்றது.என்ன ஏழ்மை என்கிறீர்கள் ? அரசாங்கம் தரும் உதவி பணத்தைப் பெற்றோர் அனாவசியமாக ( குடி, சிகெரெட், லாட்டரி, குதிரை)செலவழித்துவிட்டு, தன் குழந்தைகளைப் பற்றீக் கவலைப்படாதவர்களும் சிலர் உண்டு. ஆனால் இந்த உதவித்தொகை மிகக் குறைந்தஅளவு இல்லை. சில இந்தியர்கள், இதிலேயே, மிச்சம் பிடித்து, விடுமுறைக்கு, இந்தியா வருகிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.


ஒவ்வொரு ஏரியாவுக்கும் பள்ளிகள் உள்ளன. அந்தந்த 'zone'ல் உள்ளவர்கள் அங்கங்கே படிக்கவேண்டும். அனுமதி மறுப்பு இல்லை.மூன்றரை வயதானால், ' கிண்டர்கார்ட்டன்' என்ற மழலைப் பள்ளிகளில் சேரலாம். அங்கேயும், 4 வயதுவரை பிற்பகல் 1 முதல் 3 வரையும், 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு காலை 9 முதல் 11.45 வரையுமே கல்வி நேரம். படிப்பு என்று பெரிதாக ஒன்றுமில்லை.சும்மா விளையாட்டுதான். விளையாட்டைத்தவிர வேரொன்றுமில்லை.இங்கு சேர்வதும் கட்டாயமில்லை. குழந்தை, சிலமணி நேரமாவதுபோய்வரட்டும், நமக்கும் கொஞ்சம் ஓய்வு என்றுதான் பல பெற்றோர்களும் நினைக்கிறார்கள் என்பது வேறு விஷயம்.
5வது பிறந்த நாளன்று, அது எந்த மாதமானாலும் சரி, ஆரம்பப்பள்ளியில் அனுமதி. அதற்கு ஒரு மாதம் முன்பு விண்ணப்பித்தால் போதும்.கோடைவிடுமுறையான 'டிஸம்பர் 15 முதல் ஜனவரி கடைசிவாரம் வரை என்றால் தான் 5வதுபிறந்தநாளன்றே பள்ளீயில் சேரமுடியாது.அப்போதும் ஒன்றும் பெரிதாகச் சொல்லித்தருவதில்லை. ஸ்கூல் புத்தகங்கள் வாங்குவது, தினமும் மூட்டையாகச் சுமந்துகொண்டு போவதுவீட்டுப்பாடம் எழுதறது இப்படியெல்லாம் ஒன்றுமே இல்லை. உயர் வகுப்புகளுக்கு பள்ளிப் பாடப்புத்தகங்கள் இலவசமாகமே, பள்ளிகளில்தரப்படுகின்றன.மொத்தம் 13 ஆண்டுகள் படிப்பு.இதில் ஆரம்பக் கல்வி 6 ஆண்டுகள். முதல் 4 ஆண்டு புத்தகம், வீட்டுப்பாடம் ஒன்றுமில்லை. பாக்கியுள்ள 2 ஆண்டுகளில் சில 'நோட்டுப்புத்தகம் வாங்கவேண்டும். கொஞ்சமே கொஞ்சம் வீட்டுப்பாடம் உண்டு.எல்லாம் ' அசைன்மெண்ட்'கள்தான்.தினமும் 40 நிமிடங்களுக்குமேற்படாமல் வீட்டுப்பாடம் தரலாமாம்.அரசாங்கம் நிர்ணயம் செய்த அளவு.
அடுத்து இடைநிலைப் பள்ளி, இது 2 ஆண்டுகள்.'text books' இப்பவும் வாங்கவேண்டாம். வீட்டுப்பாடம் ஒரு மணி நேரம்.இந்த2 வருடங்களில், தச்சுவேலை, சமையல் என்ற விஷயமும் உண்டு. மர ஸ்டூல், பாதி வெந்த கேக் என்று சில தினுசுகள் வீட்டிற்குஅப்பப்ப வரும்.


கடைசியிலே உயர் நிலைப் பள்ளி.5 வருஷம். இப்ப 'text books' பள்ளியிலே இலவசமாகக் கிடைக்கும். வீட்டுக்கு கொண்டுவரலாம். அந்தந்த வருடக் கடைசியிலே அதைத் திரும்ப ஒப்படைக்கணும். வீட்டுப்பாடம் சில மணி நேரம் கூடும். முன்பு இந்த 5 வருஷப் படிப்பில்மூன்றாம் வருடம் ஒரு அரசாங்கத்தேர்வு, (நம்ம ஊர் பத்தாவது மாதிரி)இருந்தது. இப்ப அதுவும் இல்லை.

இன்னும் வரும். இது பொதுப்படையா இருக்கு. சிறப்பு அம்சங்கள் வந்துக்கிட்டு இருக்கு!


நன்றி: சங்கமம் 2004


Wednesday, September 21, 2005

நம்ம பத்ரிதானே?

இந்த வாரக் குமுதத்துலே தகவல் பகுதியிலே ஒரு கேள்வி.
மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் அறிமுகம் செய்யற 10,000 ரூபாய் கம்ப்யூட்டரின் தரம்என்ன? எங்கே கிடைக்கும்?ன்னு.
இதுக்குக் கணினி வல்லுநர் பத்ரி சேஷாத்ரி பதில் சொல்லியிருக்கார். அது இங்கே.
http://www.kumudam.com/hotmain.php
பேரை பார்த்தவுடனே நம்ம பத்ரிதானோன்னு ஒரு ச்சின்ன சந்தேகம்.
தெரிஞ்சவுங்க சொல்லுங்களேன் ப்ளீஸ். பத்ரியேகூட சொல்லலாம்:-)))



Tuesday, September 20, 2005

நியூஸிலாந்து. பகுதி 1

ஒரு நாள் நம்ம மதிகிட்டே ஃபோன்லே பேசிக்கிட்டு இருந்தப்ப, 'நீங்க இருக்கற ஊரையும், நாட்டையும் பத்திஎழுதுங்களேன்'னு சொன்னாங்க. நானும் ரொம்ப மெத்தனமா, 'வேற ஒரு இணைய இதழ்லே ஏற்கெனவே ஒருதொடரா 13 வாரத்துக்கு எழுதியிருக்கேன். கடைசிப் பகுதி வெளியிடறதுக்கு முந்தி ஏதோ காரணத்தாலே அந்தஇதழ் அப்படியே நின்னு போச்சு'ன்னு சொன்னேன்.


அப்புறம் அந்த விஷயத்தை 'அசை' போட்டுக்கிட்டு இருந்தப்ப, என்னதான் எழுதினேன்னு மறுபடியும் பார்த்தேன்.ரொம்ப மேலோட்டமாத்தான் எழுதியிருக்கேன். ஒரு புது நாட்டுலே வந்து வசிக்கறப்ப, இல்லே வர்றதுக்கு முன்னாலே அந்த நாட்டைப் பத்தித் தெளிவாத் தெரிஞ்சுகிட்டா வர்றோம்?



அங்கே நம்மாளுங்க இருக்காங்களா, அரிசி, உப்புப் புளி மிளகாயெல்லாம் கிடைக்குதான்னு பார்த்தேனே தவிர,அங்கே வேற என்ன பாஷை இருக்கு, அவுங்க பழக்க வழக்கம் எப்படின்னெல்லாம் தெரிஞ்சுக்கத் தோணலை.'வெள்ளைக்காரங்க தேசம்( என்ன ஒரு தப்பான கணிப்பு!)தானே, எல்லாம் நம்ம இங்கிலீஷே போதும்'ன்றஒரு தைரியம். எங்க இவர் வேற குடும்பத்தோடு இங்கே நாங்க வர்றதுக்கு முன்னாலே,'ஒரு நடை(!) போய்ப் அங்கே ஃபேக்டரியெல்லாம் எந்த நிலைமையிலே இருக்குன்னு பார்க்கணும். அப்படிப் பார்த்துட்டுத்தான் கிடைச்ச மாற்றலை ஏத்துக்கிறதா வேணாமான்னு முடிவு செய்யணுமு'ன்னு சொல்லிக்கிட்டுஇருந்தார். நானும் ஒரு லிஸ்ட் கொடுத்தனுப்புனேன். இதுக்குதான் நான் எப்பவும் 'ரெடி' யாச்சே!
திரும்பிவந்தவுடனே 'ஊர் நல்லாத்தான் இருக்கு. எனக்கும் வேலை செய்யற இடம், அங்கே இருக்கற மத்தஆளுங்க எல்லாமும் பரவாயில்லை. குளுர்தான் கூடுதலா இருக்கு. அடுத்த மாசத்திலே இருந்து( இவர் போனதுஒரு ஆகஸ்ட் மாசம்) குளிர் குறைஞ்சுருமாம். வீடுங்களும் வசதியாத்தான் இருக்கு. கூட வேலை செய்யப்போறசிலருடைய வீடுகளுக்குப் போயிருந்தேன். இங்கே நாம ஃபேன் போட்டுக்கறமாதிரி அங்கே 'ஹீட்டர்ஸ்' போட்டுக்கணும்.அப்பக் குளிர் தெரியாது(!)ன்னு சொன்னார்.


அங்கே எல்லா வீடுகளும், தெருக்களும் அமைதியா இருக்கு. நீ எப்பப்பார்த்தாலும் மிக்ஸியிலே எதாவது அரைச்சுக்கிட்டுஇருக்கியே. அதை நினைச்சாத்தான் கவலையா இருக்கு,அக்கம்பக்கத்துலே சத்தம் கேக்குமேன்னு. சொல்லிக்கிட்டேஒரு ச்சின்ன டயரியைக் காமிச்சார். பப்படம், ச்சிக் பீஸ், ரைஸ், கறி பவுடர்..... இப்படி சில எழுதியிருந்துச்சு. என்னன்னாஇங்கே ஒரு பெரிய டிபார்ட்மென்ட்(டல்) ஸ்டோர்ஸ் போனாராம். அங்கே சகலமும் கிடைக்குமாம். இதெல்லாம் கூடஇருக்குதாம். அப்புறம் 'கிறைஸ்ட்சர்ச்'ன்னு ஒரு புத்தகம் நிறையப் படங்களோடு. பார்க்கறதுக்கே அட்டகாசமாஇருந்துச்சு. பெரிய பெரிய தோட்டங்களும், கலைநயத்தோடு கூடுன கட்டிடங்களும், கலர்க்கலராப் பூக்களுமா ஏதோதேவலோகம் போல( நான் எப்ப தேவலோகம் போனேன்னு கேக்காதீங்க) இருக்கு. அதுசரி. டூரிஸ்ட்டுங்களுக்காகபோடற புத்தகம் வேற எப்படி இருக்கும்? ஆனா அது அப்பத் தெரியலையே(-:


அதுக்கப்புறம் தான் ஒரு 'நல்ல விஷயம்' சொன்னார். 'எல்லாப் பெண்களும் கையிலே வைர மோதிரம் போட்டிருக்காங்க.உனக்கும் ஒண்ணு வாங்கிரலாம்'. ஆஹா யோகம் வந்திருக்குன்னு இருந்தேன். பாவம் இவர். என் நல்ல காலம்,வைரமோதிரம் போட்ட பெண்களை மாத்திரமே பார்த்திருக்கார்!


வொர்க் பர்மிட் வாங்கி அனுப்பறோம். உடனே வந்து சேர்ந்திருங்கன்னு அங்கே சொன்னாங்களாம். ஆனா இவர்நிரந்தரமா வசிக்கிற உரிமை கிடைச்சால்தான் வருவேன்னு சொன்னதாலே அதுக்கு அனுமதி வாங்க சிலமாசம்காத்திருக்கும்படியா ஆச்சு. அப்பதான் நாங்க இருந்த ஃபிஜித் தீவுகளிலே ராணுவம் ஆட்சியைப் புடிச்சுக்கிட்டுஒரே அமர்க்களமா இருந்ததாலே அங்கே இருக்குற நியூஸிலாந்து ஹைகமிஷன் வேலைங்க எல்லாம் ரொம்பமெதுவா நடந்துக்கிட்டு இருந்தது. முக்கிய அதிகாரிகள் எல்லாம் இங்கே திரும்ப வந்துட்டாங்க. ஒரு மாதிரி நிலமை சரியாகி, எங்களைக் கூப்பிட்டு இன்டர்வியூ செஞ்சு, எங்க பாஸ்போட்டுகளிலே பி.ஆர்.ன்னு ஸ்டாம்புஅடிச்சு பிப்ரவரி மாசம் முதல் வாரத்துலே நாங்க இங்கே வர்றது உறுதியாச்சு. அப்பதான் என்னோட பிறந்தநாளும்வந்துச்சு. அடிச்சேன் பிரைஸ், அருமையான வைர மோதிரம்! இனி மூட்டை முடிச்சைக் கட்டவேண்டியதுதான்.


கிளம்பறதுக்கு ஒரு வாரம் இருக்கப்பவே வீட்டு சாமான்களையெல்லாம் அனுப்பிட்டோம். அதுலே அரிசி, பருப்பு, புளிமிளகாய்வத்தல் இப்படி ஏராளமான சாமான்களை வச்சுட்டோம். வந்தவுடனே சாப்பிடவேணாமா? கடைகண்ணியைத்தேடறவரை பட்டினியாவா இருக்கமுடியும்? அக்கம்பக்கம் மிக்ஸி சத்தம் கேட்டா வம்போன்னு பயந்துக்கிட்டு இட்டிலிக்குத்தொட்டுக்கறதுக்கு மொளகாப்பொடி நிறைய ,ஒரு ஆறுமாசம் வர்றமாதிரி அரைச்சே வச்சுட்டேன். இங்கத்துக் குளுருலேமாவு புளிக்காம இட்டிலி/தோசைக்கு 'டாட்டா' சொல்லவேண்டியதாப் போச்சு. அந்த ஆறு மாச ஸ்டாக் நமக்கு ரெண்டு வருசம் வந்துச்சுன்னா பாருங்களேன். என்னா, இங்கே இருக்குற வெதருக்கு சாமான்கள் ஒண்ணும் கெட்டுப்போறதில்லை!


இப்ப இந்த நாட்டுக்குள்ளே கொண்டுவர்ற பொருட்களுக்கு ஏகப்பட்டக் கட்டுப்பாடு இருக்கு. ஏர்போர்ட்லே 'நாய்' நம்ம பெட்டிங்களையெல்லாம் வாசனை பிடிச்சு, வேண்டாத சாமான் இருந்தாச் சொல்லிருது. ஆனா அப்ப அவ்வளவு கடுமை இல்லை.( இப்பத்தான் முழிச்சுக்கிட்டாங்க போலெ)


இந்த ஏர்போர்ட் நாய்ன்னதுன் இன்னொரு விஷயம் ஞாபகம் வந்துருச்சு. அப்புறமாச் சொல்லலாமுன்னு பார்த்தா...எங்கே?'மருந்து குடிக்கிறப்ப குரங்கை நினைக்காதே'தான். மனசுக்குள்ளெ உக்காந்துக்கிட்டுப் பிராண்டுது. சொல்லிடறேன்.ரரத்த்ரி தூங்கணுமில்லே.

ஒரு சமயம் நானும் மகளும் சென்னையிலே இருந்து இங்கே தனியா வந்தோம்.இலந்தவடை'ன்னு ஒண்ணு இருக்கு தெரியுமா?மகளுக்கு அது ரொம்பவே பிடிக்கும். அதை அம்பிகா அப்பளம் டெப்போ லே நிறைய வாங்கி கைப்பையிலே வச்சுக்கிட்டுநாலைஞ்சு நாளாத் தின்னுக்கிட்டே இருந்தோம். அதோடயே சிங்கப்பூர் வந்து அங்கேயும் கொஞ்சம் தின்னோம். ரெண்டு நாளுஅங்கே சுத்தினப்ப, அங்கேயிருக்கற தீனிகளையும் விடலை. ஒருவழியா கிறைஸ்ட்சர்ச் வந்து சேர்ந்துட்டோம். ஏற்கெனவேநல்லா பேக் செஞ்சிருந்த தீனிகளை 'டிக்ளேர்' செஞ்சுறலாம். பிரச்சனையில்லை. பிளேன்லே இருந்து இம்மிகிரேஷன்வர்ற வழியெல்லாம் இங்கே கொண்டுவரக்கூடாத சாமான்கள் இருக்கான்னு பாரு. பிடிச்சுட்டா $10,000 அபராதம்னுஅறிவிப்பா இருக்குல்லே, அதைப் பார்த்துக்கிட்டே வர்றோம். மகள் சொன்னா, தலையெல்லாம் கலைஞ்சிருக்கு. ரெஸ்ட்ரூம்லே தலைவாரணும், சீப்பு தாங்க'ன்னு கேட்டாளா, சீப்பை எடுக்கக் கையை விடறேன், கையோடு வருதுஇலந்தவடை பேக்கெட். பக்காவான பேக் இல்லை. சும்மா பாலித்லீன் பேக். பேரு இல்லை, mfg & exp date ஒண்ணும்இல்லை. ச்சின்னதுதான். ரெண்டுலேயும் 12+12 வடை இருக்கு. தூக்கிக் கடாசிடலாம்னா மனசு வருதா. மகள் சொல்றா,இங்கே இது கிடைக்காதுல்லே. தெரிஞ்சிருந்தா ப்ளேன்லேயே தின்னுருப்பேன். அதான் நல்லா தூங்கிக்கிட்டு வந்தியேன்னுசொல்லிட்டு இப்பத் தின்னுடறயான்னு கேட்டேன். சரின்னாளா, ஆளுக்கு ஒரு பேக்ன்னு அவசர அவசரமாத் தின்னுட்டுஇமிகிரேஷன் வந்தப்ப, எல்லோரும் போயிட்டு காலியா இருக்கு. நாய் கிட்டே வந்து நின்னுது. ஹேண்ட் பேகைக்காமிச்சேனா, மோந்து பார்த்துட்டு என் கையை மெதுவா நக்குச்சு. கொஞ்சம் தடவிக் குடுத்து 'குட் பாய்' சொல்லிட்டுவெளியே வந்து, பெல்ட்டுலே தனியாச் சுத்திக்கிட்டு இருந்த பெட்டிங்களை எடுத்தோம்.


எங்களைக் கூட்டிட்டுப் போகவந்த கோபால், இதென்னடா எல்லோரும் வெளியே வந்துட்டாங்க. இவுங்களைக் காணலையேன்னு தவிச்சுக்கிட்டு இருந்தாராம்.


'இப்ப இங்கே கோடைகாலம். நல்ல வெய்யில் இருக்கு'ன்னு இவரோட ஆஃபீஸ்லே இருந்து ஃபோன்லே சொன்னாங்க.நாங்களும் ஹாயா வந்து இறங்கிட்டோம். விமானநிலையத்துக்குள்ளெ இருந்து வெளியே வந்தவுடனே 'ச்சில்'ன்னுகாத்து மூஞ்சுலே அறையுது. அங்கே மத்த ஆளுங்கெல்லாம் 'சம்மர் சம்மர்'னு அரை நிஜார் போட்டுக்கிட்டு அலையறாங்க.ஆத்தாடி, என்னமாக் குளுருதுன்னு நடுங்கிகிட்டே ஹோட்டலுக்குப் போய்ச் சேர்ந்தோம். கோடை காலம்னு சொல்லிஅங்கே எல்லா ரூம் ஹீட்டர்ஸ்ம் ஆஃப்லே இருக்கு. ரிசப்ஷன்லே தொணப்பினப்புறம் ஒரு ச்சின்ன ஹீட்டர் கொண்டுவந்து ரூம்லே வச்சுட்டுப் போனாங்க. அதைச் சுத்தி உக்காந்துக்கிட்டு இருந்தோம். இது கோடையாம்! அப்பக் குளிர்?


அப்புறம் ஒரு மாதிரியா இங்கே செட்டில் ஆகி இப்ப 18 வருசமாச்சு. இங்கே வெள்ளைக்காரங்களைத்தவிர இங்கத்துநேடிவ் ஆளுங்களான 'மவோரி இன'மக்களும் இருக்காங்க. அவுங்களுக்குன்னு தனி பாஷையும், கலாச்சாரமும்இருக்கு. இந்தப் பதினெட்டு வருசத்துலே மேலோட்டமா அவுங்களைப் பத்தித் தெரிஞ்சுக்கிட்டதைத்தவிர, உண்மையானஆர்வத்தோட ஏதாவது அவுங்க மொழியைப் பேசவோ, அட்லீஸ்ட் பேசுனாப் புரிஞ்சுக்கவோ செஞ்சிருக்கேனா?


ஊஹூம்... இல்லவே இல்லை. காரணத்தை யோசிச்சுப் பார்த்தா, எல்லோருமே இங்கிலீஷ் பேசிடறாங்க. மவோரிஇன மக்களும் நம்மகிட்டே ஆங்கிலமே பேசறதாலே,இதுவரை பிரச்சனையை நேரிடலை. 100 சதமானம் மவோரிரத்தம் உள்ளவங்க( ஏங்க எல்லா ரத்தமும் ஒண்ணுதானே? சிகப்பு?) இப்ப இல்லவே இல்லையாம். வெள்ளையரோடுதிருமணம் செஞ்சுக்கிட்டவங்களாலே ஒரு கலப்பினமா இருக்காங்களாம் இவுங்க. ஆனாலும் அவுங்க மூதாதையர்எந்த 'ஈவி'யோ ( க்ரூப்) அதுலே இவுங்களைச் சேர்த்துருவாங்களாம். முப்பாட்டனுக்கு முப்பாட்டன்/முப்பாட்டிமவோரியா இருந்தாலும் போதுமாம். அப்படி எதுக்கு இனம் காட்டிக்கணும்? காரணம் இருக்கே! கிடைக்கிற சலுகைகள்!!இதைப் பத்தி அப்புறம் விலாவரியாச் சொல்றேன்.


இப்ப இவுங்க 'முழிச்சுகிட்டாங்க'. தங்களுடைய மொழியைக் காப்பாத்தணுமுன்னும், கலாச்சாரத்தைக் கட்டிக்காக்கணுமுன்னும் தீர்மானிச்சுட்டாங்க. ஒரு டெலிவிஷன் ச்சேனல் கூடத்( மக்கள் வரிப்பணத்துலே) தொடங்கியிருக்காங்க. தவறுதலாஅந்தச் ச்சேனலைப் போட்டாலும், என்ன ஏதுன்னு தெரிஞ்சுக்காம உடனே வேற இடத்துக்குத் தாவிருவேன்.எல்லாரும் அப்படித்தானாம். நண்பர்கள் வட்டத்துலே பேசும்போது சொன்னது!


நாங்க வந்த புதுசுலே ச்சின்னப்புள்ளைங்களுக்காகவே போடற பகல் நிகழ்ச்சிகளிலே 'கஹங்காரியோ'ன்னு ஒருஅரைமணி நேரம் மவோரியும் ஆங்கிலமுமா கலந்து வந்துச்சு. அப்புறம் கொஞ்ச நாளுலே அது நின்னு போச்சு.


இப்பத்தான் உண்மையான ஆர்வம் இவுங்களைப் பத்தித் தெரிஞ்சிக்கணுமுன்னு வந்திருக்கு. மொத வேலையாஎங்க லைப்ரரிக்குப் போய் நிறைய புத்தகங்களை அள்ளிக்கிட்டு வந்தேன். அதென்ன 'எங்க லைப்ரரி?'நானு ஒரு ச்ச்சின்னப் பசங்களுக்காகவே இருக்குற லைப்ரரியிலே வேலை செஞ்சுக்கிட்டு இருக்கேன். அங்கே ரொம்ப சிம்பிள் வழியிலே இந்தக் கலாச்சாரம் பத்தி எழுதுன புத்தகங்கள் நிறைய இருக்கு. எல்லாமே 'ஈஸி ரீடிங்'


இது எல்லாத்தையும் மேய்ஞ்சிட்டு, உங்களுக்குச் சொல்லப்போறேன். அதுவரைக்கும் எல்லாம் சத்தம் கித்தம்போடாம, நான் ( மேலோட்டமா) எழுதுன தொடர் கட்டுரையை( 'வியாஸம்' னு பாரதியார் சொல்றார். இந்த வார்த்தைஎனக்கு பிடிச்சுப் போச்சு!) பதிவாப் போடப்போறேன். அது முடிஞ்சவுடன் புது வியாஸம் தொடரும்:-)
என்ன சரிதானே?


ஒண்ணு சொல்ல விட்டுப் போச்சே. நீங்கப் படிக்கப்போறதோட 'நடை' கொஞ்சம் வேற மாதிரி இருக்கும்/இருக்கலாம்.வேற ஒரு இதழுக்கு அனுப்பறமேன்னு கொஞ்சம் 'நடையை மாத்திப் பாத்தேன்'. அதையெல்லாம் கண்டுகிடாதீங்க..



நாலில் இருந்து பதினாலு வரை...

புள்ளையார் தமிழ்நாட்டு சாமி இல்லை. சாளுக்கிய நாட்டுலே இருக்கற வாதாபின்ற நகரத்திலிருந்துதான் மொதமொததமிழ்நாட்டுக்குக் குடிபெயர்ந்தார்னு அன்னிக்கு சித்ராவோட ஒரு பதிவுலே படிச்சேன். அப்ப நாம இப்பச் செஞ்சுக்கிட்டுஇருக்கற காரியத்தை( அதான் புலம் பெயருதல்!)ஆரம்பிச்சுவச்ச புண்ணியவான் இவர்தானோ?


எப்படியோ இப்ப அவர் தமிழ்நாட்டுக்குடியுரிமை வாங்கி, நிலையா நிலைச்சுட்டார். அதுமட்டுமா, எந்தக் காரியமும்அவர் இல்லாட்டா நடக்காதுன்றமாதிரியும் பண்ணிட்டார். நல்ல சாமர்த்தியசாலிதான்,இல்லே? போகட்டும்.



இங்கேதான் நம்ம பக்கம் ஒருநாள் பிள்ளையார் சதுர்த்திக் கொண்டாடிட்டு விட்டுடறோம், இல்லையா? ஆனா மஹாராஷ்ட்ராவிலே பத்துநாள் இருந்து செமத்தியா எல்லா பூஜை, படையல்களையும் வாங்கிகிட்டுத்தான் போறார்.
எல்லாரும் கதை கேக்க ரெடியா இருக்கீங்களா? கொஞ்சம் இருங்க,நானு 'கொசுவத்திச் சுருளை' ஏத்திக்கறேன்.


அப்ப (1977) நாங்க 'பூனா'விலே இருந்தோம். வந்த கொஞ்சநாளிலேயே புள்ளையார் சதுர்த்தியும் வந்து போச்சு.ஏன், வந்து போச்சுன்னு சுவாரசியம் இல்லாம மொணங்கறேனா? வீடு கிடைக்காம ஒரு மாளிகை(!)யிலே தங்கி\யிருந்தோம்.ரொம்ப 'ஹை செக்யூரிட்டி ஏரியா'( என்ன தப்பா நினைக்கிறீங்க? ஜெயில் இல்லீங்க.நம்புங்க, நிஜமாவே மாளிகைதான்.மிலிட்டெரிஏரியா)வாப் போனதாலேயும், நாட்டு நடப்பு தெரிஞ்சுக்கறதுக்குத் தேவையான மொழி அறிவு ( இந்தி தெரியாதுன்றதை இப்படிநாசுக்காச் சொல்றேன்)அப்ப இல்லாததாலும் கொஞ்சம் அடங்கியே(!) இருந்தோம்.


அதுக்கடுத்தவருஷம் கொஞ்சம் தேறிட்டோம்லெ. அதுக்குள்ளே நம்ம மாமி, மாமாவோட நட்பு கிடைச்சதுலே எங்கஉலகமே மாறிடுச்சு. 'கண்பதி' வந்துருச்சு. புள்ளையார் சதுர்த்தின்னு நீட்டிவலிச்சுச் சொல்லாம நாங்களும் பூனா ஸ்டைல்லேமராத்திக்காரங்க சொல்றமாதிரி 'கண்பதி'ன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டோம். அங்கே நம்ம ஆஞ்சநேயர் கூட 'மாரு(த்)தி''தான்!
மாமி சொல்லிட்டாங்க, கண்பதி முடியுறவரைக்கும் இங்கேயே ,அவுங்க வீட்டிலேயே தங்கிரணுமுன்னு! அங்கேயே குட்டியா ரெண்டு ரூமு.அவுங்களுக்கே பத்தாது. ஆனாலும் தாராளம்.அப்பத்தான் நானும் கத்துக்கிட்டேன், இடம் பெருசாஇருந்து ஒரு பிரயோசனமும் இல்லை. மனசுதான் பெருசா இருக்கணுமுன்னு! தினம் ராத்திரிக்கு அங்கே போறதுன்னுஒருமாதிரி ஏற்பாடு செஞ்சுக்கிட்டோம். அவுங்க வீடு இருந்தது 'ராஸ்தா பேட்(டை)'. இவர் சாயந்திரம் வேலை முடிஞ்சுவந்தபிறகு, காஃபி ,டிஃபன்(?) சாப்டுட்டு 'ச்சலோ ராஸ்தா பெட்'தான். எப்படியும் அங்கே மாமி வீட்டிலே சாப்புடு சாப்புடுன்னு ஒரே தொந்திரவு(!) தான்றதாலே நம்ம வீட்டுலே சாயங்காலக் காப்பித்தண்ணியோட கடையைக் கட்டிறதுதான்.
அங்கே போயிட்டா ஒரே ஊர் சுத்தல்தான். அநேகமா அங்கே ராத்திரிக்கு 'அரிசி உப்புமாவும் மாங்காய் இனிப்பு ஊறுகாயும்'தான். என்னோட ஃபேவரைட் ஆச்சே, தினம் தின்னாலும் அலுக்காது! சிலநாள் இட்டிலி, தோசைன்னு இருக்கும்.பாபுவும், வத்சலாவும்( மாமியோட பசங்க)வேலையிலே இருந்து வந்தவுடனே கிளம்பிடுவோம்.


அங்கே பேட்டைக்குப் பேட்டை 'படா' பந்தல் எல்லாம் போட்டு கண்பதியை ரகம்ரகமா அலங்கரிச்சு வச்சிருப்பாங்க.சதுர்த்தியன்னிக்கு ஆரம்பிச்சு பத்துநாள் விழா. பதினாலாம் நாளான சதுர்த்தசியன்னிக்கு கொண்டாட்டம் வேற மாதிரி!சொல்றேன் சொல்றேன்.....


கண்பதி வர்றதுக்கு நாலஞ்சுமாசத்துக்கு முன்னாலேயே எந்தமாதிரி அலங்காரம்ன்றது திட்டம் போட்டுப் பரம ரகசியமாவச்சுக்குவாங்க. அதுக்கப்புறம் ஆரம்பிக்கும் காசு வேட்டை. நிறைய இளைஞர்கள் ஒரு படையா சேர்ந்துக்கிட்டு இந்தக்காசு வசூலுக்குப் போவாங்க. அவுங்களோட இஷ்டதெய்வம் கண்பதின்றதாலே ரொம்ப உற்சாகத்தோட கிளம்பிருவாங்க.சாமி பேரைச் சொல்லி வசூல் செஞ்சு, ஆசாமிங்க துன்னுருவாங்களொன்னு நாம பயப்படத் தேவையில்லை. அதெல்லாம்நல்ல ஒழுங்குமுறையாத்தான் நடந்துக்குவாங்க. ஒரு ரகசிய இடத்துலே பக்காவா ப்ளான் பண்ணி, கண்பதி செய்யஆரம்பிச்சுருவாங்க. தனித்தனியாச் செஞ்சுவச்சதையெல்லாம் பண்டிகைக்கு மொதநாள் தெருவை அடைச்சுப் பந்தல்போட்டு போறவர்ற ஜனங்க பாத்துராம மறைவுக்காக தகரம் எல்லாம் வச்சு உள்ளே அலங்கரிச்சுக்கிட்டு இருப்பாங்க.ஜரிகை மாலைங்களும், நிஜப்பூ மாலைங்களும், கலர்க்கலரான சீரியல் பல்பு செட்டுங்களுமா வேலை நடந்துக்கிட்டுஇருக்கும். பேட்டைக்குப் பேட்டை, சிலப்ப தெருவுக்குத் தெரு இதே கதைதான்! பயங்கரப் போட்டிங்கதான். கடைசியிலேஎந்தப் பேட்டைப் புள்ளையார் ஜெயிக்கப்போறாருன்னு ஊரே ஆவலா எதிர்பார்த்துக்கிட்டு இருக்குல்லெ. முதலிடம் சும்மாக்கிடைச்சுருமா? ஒவ்வொண்ணுக்கும் ஒரு 'தீம்' வேற!


இதெல்லாம் எப்ப, எப்படி ஆரம்பிச்சதுன்னு கொஞ்சம் மூக்கை நுழைச்சேன். சுதந்திரப் போராட்டம் நடந்துக்கிட்டுஇருந்த காலங்களிலே, பொதுக்கூட்டம் கூட்டறதுக்கு தடை இருந்துச்சாம். அப்ப நம்ம திலகர், அதாங்க பாலகங்காதரதிலகர், கோபால கிருஷ்ண கோகலே போன்ற பெரிய தலைவர்கள் எல்லாம்,சுதந்திர வேட்கையை மக்கள் மத்தியிலேபரப்பவும், செய்திகளைப் பரிமாறிக்கவும் இந்தக் கூட்டத்தைப் பயன்படுத்திக்கிட்டாங்களாம். மத சம்பந்தமானகூட்டம்ன்றபடியாலே வெள்ளைக்காரங்க அரசாங்கம் கொஞ்சம் மெத்தனமா இருந்துருச்சாம். அதுதான் அப்படியேவளர்ந்து இன்னிக்கு இப்படி பெரிய கொண்டாட்டமா ஆயிருச்சாம்.


(அப்ப சென்னையிலே எல்லாம் இப்படி இல்லை. காலையிலே புள்ளையாரை வச்சுக் கும்பிட்டு கொழுக்கட்டை தின்னுட்டு,அன்னைக்கே கிணத்துலேயோ, ஆத்துலேயோ போட்டுருவாங்க. இப்பப் பத்திரிக்கைகளிலே வர்ற சேதிகளைப் பார்த்தா'மஹாராஷ்ட்ராவை மிஞ்சிடுச்சு மெட்ராஸ்'ன்னு இருக்கு. நேத்து இங்கே எங்கூருப் பேப்பருலே கண்பதி பத்தி போட்டுந்தாங்களாம்.நம்ம கிவி நண்பர்/நண்பிங்க ஃபோன் செஞ்சு வாழ்த்துச் சொன்னாங்க எனக்கு! என்ன போட்டுருந்தான்னு பார்க்கணும். )


நாங்க மொதல்லே, அக்கம்பக்கம் கிட்டக்க இருக்கற கண்பதியைப் பாக்கப் போவோம். இவுங்களைமட்டும் தினம் தப்பாமப்போய்க் கண்டுக்கிட்டு வருவோம். நேத்து இருந்ததைவிட எதுனா கூடி இருக்கா? பூமாலை இன்னிக்கு என்ன கலர்? இப்படிமுக்கியமானதையெல்லாம் 'நோட்'பண்ணிக்கிடுவோம். வீடுதிரும்புறப்ப நம்ம 'பாய்ண்ட்'எல்லாம் சொல்லி விவாதம் வேற!
சாப்பாடு ஆனபிறகுதான் இன்னும் மஜா. மாமியோட பசங்களும் ஏறக்கொறைய எங்க வயசுன்றதாலே அப்படியேப்பச்சக்குன்னு ஒட்டிக்கிட்டோம். அதுக்குள்ளே மணியும் ஒம்பதரை/பத்து ஆயிருக்கும். முக்கியமான எல்லா தெருக்களிலும்போக்குவரத்தை நிறுத்திருவாங்க. இஷ்டம் போல ரோடுலே குறுக்கேயும் நெடுக்கேயுமா போற வார ஜனக்கூட்டத்துலே அப்படியேநாங்களும் ஐக்கியம்தான். வண்டி வருதான்னு கவலைப்படாம டக்குன்னு தெருவைக் கடந்துபோற சுகம் இருக்கே,ஆஹா.ஆனா என்ன, அங்கங்கே தெருமத்தியிலே ச்சின்னச்சின்ன குன்றுகள் இருக்கும். அதைக் கவனிச்சுப் போகணும்.கொஞ்சம்கூடகவலையில்லாமல் ,'தேமே'ன்னு படுத்திருக்கற மாடுங்கதான் அது. பெரிய கொம்புங்களோட பாக்கறதுக்குப் பயங்கரமாஇருந்தாலும் அங்கே இதுங்க சாதுப் பிராணிங்க. கடந்து போற ஆட்களும் அதைத் தொட்டு கண்ணுலே ஒத்திக்கிட்டுப்போகுங்க. பசு லக்ஷ்மியாச்சே! சில இடங்களிலே புள்ளையாருக்குக்காக கலை நிகழ்ச்சி வேற! 'பொம்மலாட்டம்'தான் எனக்குரொம்பப் பிடிச்சது. லேட்டஸ்ட் சினிமாப் பாட்டுக்கு அந்த பொம்மைங்க ஆடற ஆட்டம் இருக்கே, தூள்!


நமக்கு அதுக்குள்ளே செவி வழிச் செய்தியா எந்தப் பிள்ளையார் ஜோரா இருக்கார்ன்ற நியூஸ் வந்திருக்குமே. இதுலேவழியிலே நம்மைப் பாக்கறவங்க தெரிஞ்சவுங்களோ, தெரியாதவுங்களோ, தகவல் பரிமாற்றம் செஞ்சுகிட்டுத்தான்போறது வழக்கம். உடனே எந்த ஏரியான்னு கேட்டுக்கிட்டு அங்கே பாயறதுதான். எல்லாம் 'நடராஜா சர்வீஸ்'தான்.காலுங்க களைச்சுப் போய் இனி நடக்கமுடியாதுன்ற நிலமை வரும்போது,( அவ்வளவு சீக்கிரம் வந்துருமா என்ன?சின்ன வயசுதானே?) வீட்டுக்குத் திரும்புவோம். அங்கங்கே மசாலாப் பால் பெரிய கடாய்களிலே காய்ச்சிக்கிட்டேஇருப்பாங்க. சூடான வியாபாரம்! அதையும் ஒரு கிளாஸ் அடிச்சுட்டு போய்ப் படுத்தோம்னா அவ்ளோதான்.


தூக்கம் சுகமறியாது கதைதான். எட்டுக்கு அஞ்சு இடத்துலேயே நாலுபேரு முடங்கிடுவோம். காலையிலே மாமி,சுடச்சுட ஃபில்டர் காஃபி ரெடி செஞ்சுட்டு எழுப்புவாங்க. அப்பத்தான் கல்தரையிலே உருண்டதோட பலன் தெரியும்.அந்தக் காஃபியைக் குடிச்சுட்டு சைக்கிளை எடுத்துக்கிட்டு நேரே நம்ம வீடுதான். டபுள்ஸ்.


கொஞ்சம்கூட சலிக்காம இதே கதைதான் பத்துநாளும். கடைசிநாளான ஆனந்தசதுர்த்தசிக்கு அரசாங்க விடுமுறை.காலையிலே இருந்தே ஆரம்பிச்சுரும் ட்ரம் சத்தம். புள்ளையாரைத் தண்ணியிலே கரைக்கற நாள். பூனாவுலேகடல் கிடையாதில்லையா. அதனாலே மூலா ஆறும், மூத்தா ஆறும் சந்திக்கற இடத்துலே தான் இது நடக்கும்.அந்த இடத்துக்கு 'சங்கம்'ன்னு பேரு. எல்லா ஏரியாவுலே இருந்தும் கண்பதி புறப்பட்டுருவார். ச்சும்மாப் போக முடியுமா?தாரை, தப்பட்டை வேணாமா? அதுக்குத்தான் இந்த பெரிய பேரல் ட்ரம்ங்க. அதைத் தூக்கிப் பிடிக்கவே ரெண்டுபக்கம்ரெண்டு ஆளூங்க.அடிக்கறவரோட இடுப்புலே தாம்புக்கயிறாலே பிணைச்சிருப்பாங்க. அடிக்க அடிக்க ஊரே அதிரும்.


நாங்க பால்கனியிலே நின்னுக்கிட்டே இந்த ஊர்வலங்களைப் பாக்கறதுதான். கீழே இறங்கிப் போய்ப் பார்த்தா அந்தக்கூட்டத்துலே ஒண்ணும் சரியாத் தெரியாது. குங்குமத்தைத் தட்டுலே குமிச்சுவச்சுக்கிட்டு எல்லார் நெத்தியிலேயும்பூசிக்கிட்டே போவாங்க ஊர்வல கோஷ்டிக்காரங்க. எவ்வளவு குங்குமத்தை நெத்தி தாங்கும்?


'வசதி' உள்ள கண்பதி, வெறும் ட்ரம் இல்லாம முழு வாத்திய கோஷ்டியோட போவார். பத்தடிக்கு ஒருதடவை நின்னு,சினிமாப் பாட்டெல்லாம் வாசிச்சுட்டுத்தான் நகரும் இந்த கோஷ்டி. கண்பதி க்காகவே ஒவ்வொரு சீசனிலும் ஒருகுத்தாட்டப்பாட்டு கட்டாயம் ஹிந்தி சினிமாவுலே வந்துக்கிட்டு இருந்த காலம்.


இசையைக்கேக்கக்கேக்க நம்ம காலு தானாவே ஆடும். வேடிக்கைப்பாக்கற ச்சின்னக் குழந்தைங்க( நிக்கத் தெரிஞ்சாபோதும்) தானாவே ஆடும் பாருங்க ஒரு ஆட்டம்! இசைக்கு எவ்வளவு வலிமை, அது எப்படி நம்ம உடம்புலே ஊடுருவிப்போகுதுன்னு அப்பத் தெரியும்.


தண்ணி குடிக்கக்கூட உள்ளே வரமுடியாது. அடுத்தடுத்து வர்ற ஊர்கோலத்தை 'மிஸ்' செஞ்சுட்டா? அன்னிக்குப்பூராடி.வி.யிலே வேற சங்கத்துலே கண்பதி கரைக்கறதையும், ஊர்வலம் நகரின் பலபாகங்களிலே இருந்து வந்துக்கிட்டுஇருக்கறதையும் காமிச்சுக்கிட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ இருப்பாங்க.


கடைசிச் சத்தம் ஓயறவரை நின்னுபார்த்துட்டுத்தான் மறுவேலை. அசம்பாவிதம் ஏதும் நடந்திராம இருக்க ஊர் முழுக்க பலத்த போலீஸ் காவல் வேற. எங்கே பார்த்தாலும் ஜனங்களுக்குச் சரியா போலீஸ்!
'கண்பதி பப்பா மோரியா, அக்லேவர்ச்சே லவுக்கரியா' கூவலோ கூவல். புள்ளையாரே, இப்பப் போயிட்டு அடுத்தவருசம் சீக்கிரமாவா'ன்னு அன்பாக் கட்டளை போடுற கூப்பாடு!!!!


ஆனாலும் இந்த ஜனங்களுக்கு பண்டிகைக் கொண்டாட்டம் கூடுதல்தான்.



மோரியாரே பப்பா மோரியாரே, கண்பதி பப்பா மோரியா!!




Monday, September 19, 2005

பனி மழை





படங்காட்டுனது போதும். நடக்கற வேலையைப் பாக்கலாமுன்னு நினைச்சா, எங்கே?


இதுலே தருமிவேற உனக்காச்சு எனக்காச்சுன்னு அறிகூவிக்கிட்டு இருக்கார்.


பொழுது விடிஞ்சதும் பார்த்தா 'ஸ்நோ' விழுந்துக்கிட்டு இருக்கு.


குளிர் காலம் முடிஞ்சிருச்சுன்னு நினைச்சது கனவாப் போச்சே(-:

செப்டம்பர் 19க்கு பனிமழை பொழிகிறது.


rest goes here


Sunday, September 18, 2005

எங்க தேறுதல் 2005

இங்கே எங்க நாட்டுலே எலீக்க்ஷன் முடிஞ்சுருங்க. எல்லாம் நேத்துதான். சாயந்தரமா ஓட்டு எண்ணஆரம்பிச்சுட்டாங்க. ஒவ்வொருத்தரும் ரெண்டு ஓட்டுப் போடணும். நம்ம தொகுதியிலே நிக்கறவங்களிலேயாரை உங்களுக்குத் தெரிவு செய்யணுமுன்னு இருக்கோ அவுங்களுக்கு. இன்னொண்ணு எந்த கட்சி உங்களுக்குப்பிடிச்சிருக்கோ அதுக்கு.


இந்த 'பார்ட்டி' ஓட்டு கிடைக்கிற விகிதாச்சாரத்தைப் பொறுத்து அந்தந்தக் கட்சிங்களே சிலரை எம்.பி. ஆக்கிரும்.இவங்களுக்குப்பேரு 'லிஸ்ட் எம்.பி'. முந்தி நம்ம ஊர்லே வேண்டப்பட்டவங்களுக்குக் கொடுக்கறதுக்குன்னே'ராஜ்ய சபா எம்.பி.' இருந்தாங்களே அதே போல!


18 வருசத்துக்கு முன்னாலே ( அதென்ன ஆன்னா ஊன்னா 18 வருசம்னு கேக்கறீங்களா? அதுதாங்க நம்ம சரித்திரம்இங்கே. அப்ப இருந்து என்ன தெரியுமோ அதைத்தானே சொல்லணும்?) இங்கே ரெண்டே ரெண்டு அரசியல் கட்சிங்க தான். இப்ப கணக்கிலடங்கான்னு ஆயிருச்சு. அதிலும் முக்கியமாச் சொல்ரதுன்னா 8 கட்சிங்களைச் சொல்லலாம்.அந்த எட்டுலேயும் ரொம்ப முக்கியமானது ரெண்டுதான். ( அதாங்க அந்தப் பழைய ரெண்டு. மத்தது தாய்கட்சியிலே இருந்து பிரிஞ்சதுங்க.)


லேபர் 50நேஷனல் 49 நியூஸி ஃபர்ஸ்ட் 7 க்ரீன் 6மவோரி 4ஆக்ட் 2யுனைட்டட் ஃப்யூச்சர் 3பிராக்ரஸிவ் 1


இதுதான் இன்னைக்கு இருக்கற நிலமை. இனிமேத்தான் பேரம் பேசத் தொடங்குவாங்க. கூட்டணி ஆட்சிதான்.இதெல்லாம் நமக்கு ஜுஜுபியாச்சே.


இதுலே அம்மாதான் பிரதமரா வருவாங்கன்னு நம்மத்தகுந்த வட்டாரங்களிலே இருந்து சேதி வந்துக்கிட்டு இருக்கு.


நேஷனல் தலைவர் முந்தி ரிசர்வ் பேங்க் கவர்னரா இருந்தவர்.பணம் காசைப் பத்தித்தான் தெரியும், பாலிடிக்ஸ்தெரியாது அவருக்குன்னு ஒரு பரவலான நம்பிக்கை.


அம்மா? பழம் தின்னு கொட்டை போட்டவங்க. 1999 லே இருந்து பிரதமர். ஈஸியா அடிச்சுட்டுப் போயிருவாங்கன்னுஒரு நினைப்பு.


இதுலே பாருங்க போன 2002 தேர்தல்லே லேபர் வாங்குன ஓட்டுலே ஏறக்குறைய பாதிதான் நேஷனல் வாங்குச்சு.ஆனா இந்த எலக்ஷ்ன்லே சரியான போட்டி. வெறும் 22751 வோட்டுதான் வித்தியாசம். சபாஷ், பலே பலே!


ஓட்டுப் போட்ட ஜனங்க 2052813. ஓட்டுப் பதிவு 73%
ஆஸ்த்ராலியாவுலே கட்டாயம் கட்டாயம் ஓட்டுப் போடணுமாம்.


போடலேன்னா 300$ அபராதமுன்னு சொல்லக் கேள்வி. ஷ்ரேயாதான் இது உண்மையான்னு சொல்லணும்.


ஆமாம், நான் ஓட்டுப் போட்டேனான்னு கேக்கறீங்களா? புத்தம் புது புடவை, நகை நட்டுன்னு அலங்காரமாப் போய்ஓட்டுப் போட்ட ஆளு நானாத்தான் இருப்பேன். அது ஏனா? போனவாரம் இங்கே நம்ம கேரளா அசோஸியேஷன்லேஓண்ம பண்டிகைக் கொண்டாட்டத்துக்குப் போனோமில்லெ, அப்பவே ஸ்பெஷல் ஓட்டுப் போட்டுட்டுப் போனோம்.கோபால் எலிக்ஷன் அன்னிக்கு இங்கே இருக்கமாட்டருல்லே. இந்தமாதிரி ஆக்களுக்கு ரெண்டு வாரத்துக்கு முன்னேயே ஸ்பெஷலா ஓட்டுப் போட ஏற்பாடு இருக்கே. போஸ்டல்லேயும் போடலாம்தான். பக்கத்துலே இடம் இருக்கறப்பஎன்னாத்துக்குன்னு தான். அவரு போட்டப்பயே, நானும் எனக்கும் அன்னைக்கு வரமுடியாதுன்னு சொல்லி ஓட்டுப்போட்டுட்டு வந்துட்டேன். ஒரு வேஸ்ட் பண்ணக்கூடாதுல்லே?


ச்சின்ன நாடா இருக்கறதாலே இங்கத்து தேர்தலைப்பத்தி, உலகத்துலே யாரும் அவ்வளவாக் கண்டுக்கறதில்லை.அதனாலே நம்ம வலை மகா ஜனங்களுக்கு விசயத்தைச் சொல்லிரலாமுன்னுதான்..........


யார் 'முடிசூட'ப்போறாங்கன்னு அறிவிப்பு வந்ததும் சொல்றேன். இப்பப் போயிட்டு வரட்டா?


Saturday, September 17, 2005

பூ பூவா பூத்திருக்கு.




இந்த வலைப்பதியுற ஆட்களுக்கெல்லாம் என்னவோ ஆயிருச்சு போல!

எல்லாரும் ஒரேதா படம் காமிக்கிறாங்க.

இதுலே ச்சின்னவரும் பூ படத்தைப் போடுங்கன்னு நேயர் விருப்பம்கேட்டுட்டார்.

விடமுடியுதுங்களா?

அதனாலே இங்கே சில பூ படங்களைப் போடறேன்.

அது என்ன பூன்னு சொல்லுங்களேன்.




மதியின் கூழும் துளசியின் களியும்.

மதியோட கூழ், இங்கே நியூஸிவரை வந்து ஒரு கொசுவர்த்தி ஏத்திவச்சிருக்கு பார்த்தீங்களா? கூழுக்கு இருக்குற 'ரசிகர்களுக்காக' அங்கே போய் இவ்வளவு நீளமான பின்னூட்டம் இடறதுநல்லாவா இருக்கு? தனியா ஒரு பதிவு போட்டுரலாமுன்னுதான்..........( ஹை!!! இன்னைக்கு ஒரு பதிவும் ஆச்சு)



இங்கே தமிழ்நாட்டுலே செய்யற களி/கூழ் பற்றி சில வார்த்தை( எனக்குத் தெரிஞ்சது)



முதல்லே ஒரு நல்ல சட்டி/பாத்திரம் எடுத்து ஒரு டம்ளர் மாவுன்னா ரெண்டரை டம்ளர் தண்ணி ஊத்திகொதிக்க வச்சு, வீட்டிலே நொய் அரிசி( உடைஞ்ச அரிசி) இருந்தா ஒரு கைப்பிடி போட்டு வேக வைக்கணும்.நொய் இல்லேன்னா சாதாரண அரிசியே போடலாம். அது வெந்ததும் உப்பு சேர்த்துட்டு மாவைத் தூவிக்கிட்டேகிளறணும். நிறம் மாறி வெந்துகிட்டே மொத்தையா வரும். ஒரு பேசின்லே தண்ணியை ஊத்திட்டு அதைக்கொட்டிட்டு அந்த ஈர பேசின்லே இந்த வெந்த மாவை எடுத்துப்போட்டு பேஸினைச் சுழட்டுனா அப்படியேகளி உருண்டை ஃபார்ம் ஆயிரும். இதையே குழம்பு, கூட்டு இன்னும் பிடிச்சதோட சாப்புடலாம். பாக்கியானகளி உருண்டைய தண்ணி இருக்கற ஒரு பாத்திரத்துலே போட்டு வச்சுட்டு மறுநாள் பழைய சாதம் கரைச்சுக்குடிக்கிறதைப் போல நல்லாக் கட்டியில்லாமக் கரைச்சுட்டு, வெங்காயம் பொடியா நறுக்கிப் போட்டுத் தயிர்ஊத்திக் கரைச்சுக் குடிச்சா அது கூழ்.


அப்புறம் மாரியம்மனுக்கு நேர்ந்துக்கிட்டுக் கூழ் ஊத்துறவங்க செய்யறது வேற மாதிரி. அவுங்க கூழாவேசெஞ்சுருவாங்க. அதாவது தண்ணி நிறைய வச்சு ஒரு பாத்திரம் மாவுன்னா 4 பாத்திரம் தண்ணின்னு!அது வெந்து இறக்கறப்பவே கொழகொழன்னு கூழாவே இருக்கும். இதையும் முதல்நாள் இரவு செஞ்சுவச்சுட்டு மறுநாள் தயிர், வெங்காயம்,உப்பு எல்லாம் போட்டுக் கரைச்சு, திண்ணையிலே அண்டாவை வச்சுத் தெருவிலே போறவார ஜனங்களுக்குக் கொடுப்பாங்க.


இப்பெல்லாம் சென்னையிலே காலையிலே தள்ளுவண்டியிலே வச்சுக் கூழ் விற்பனை நடக்கறதா ஒரு பிரபலஎழுத்தாளரோட பதிவுகளில் இருந்து எனக்குத் தெரிய வந்திருக்கு.


எங்க பெரியஅக்கா கல்யாணம் கட்டுன புதுசுலே இந்தக் களியைச் செய்யறதுக்குத் தெரியாம ரொம்பக் கஷ்டப்பட்டுப்போனாங்களாம். எங்க மாமாவுக்கோ களி ரொம்பப் பிடிக்குமாம்.பக்கத்து வீட்டு அம்மாதான் அவுங்களுக்கு இந்த விஷயத்துலே டீச்சராம். அப்புறம் அக்கா களி செய்யும்போது பக்கத்துலே இருந்து பார்த்து நான் தெரிஞ்சுக்கிட்டேன்.ஆனா ஒரு நாளும் சமைச்சதில்லை. களிக்கு எங்க பக்கம் சொல்றது 'சங்கிட்டி'ன்னு!
இங்கே நியூஸி வந்தபிறகு, இந்தியன் ஸ்பைஸ் கடைகளிலே இந்தக் குரக்கன் மாவு பார்த்தேன். நம்ம இலங்கைநண்பர்கள் மூலமா அதுதான் நம்ம கேழ்வரகு மாவுன்னு தெரியவந்துச்சா, நாமும் செஞ்சு பார்க்கலாமுன்னு, ஒருநாள்செஞ்சு பார்த்தா, நல்லாவே வந்துச்சு.


அதுக்கப்புறம் என்னுடைய 'அறிவை' உபயோகிச்சு என்னுடைய வழக்கமான 'குறுக்கு வழி'லே இதை மைக்ரோ வேவ்அவன்லே செஞ்சு பார்த்தேன். சூப்பரா வந்துச்சு. வேலை மிச்சம்!


அதோட செய்முறை இதோ.


ஏற்கெனவே வீட்டுலே சாதம் இருந்தா இன்னும் நல்லது. அதுலே இருந்து மூணு/நாலு ஸ்பூன் சாதம் எடுத்துஒரு மைக்ரோவேவ் பாத்திரத்துலே போட்டுக்கணும். இப்ப மாவு ஒரு அரை டம்ளர் எடுத்து அதுலேயே சேர்க்கணும்.ஆச்சா, இப்ப ஒண்ணரை டம்ளர் தண்ணிஅதுலே ஊத்திக் கரைக்கணும். உப்பும், ஒரு டீஸ்பூன் எண்ணெய், (நல்லெண்ணையாஇருந்தா விசேஷம்) சேர்த்துக்கணும். ஒரு பத்து நிமிஷம் அப்படியே ஊறட்டும். அதுக்கப்புறம் அவன்லே அஞ்சு நிமிஷம் ஃபுல் பவர்( நம்மது 1100 வாட்) சூடாக்குனா நம்ம களி ரெடி! அதுலே மீந்தா, மறுநாள் கூழ்!
இங்கே இப்ப வறுத்தரைச்ச உளுத்தம் மாவு, புட்டு, இடியாப்பம் செய்ய சிகப்பரிசி மாவு ,வெள்ளை அரிசிமாவு(இதெல்லாம் ஏற்கெனவே வறுத்தது. அதனாலே வேலை மிச்சம் ஆஹா....) எல்லாம் கூடக் கிடைக்குது. இலங்கையிலே இருந்து இது மட்டுமில்லே இன்னும் கறிப்பவுடர், தேங்காய்ப் பால் பவுடர், ஈரமான புளி( இதுநல்லாவே இல்லை, ஒரே மண்ணு & ஒரு கெட்ட வாசனை) மால்தீவ் ஃபிஷ் இப்படிப் பலசாமான்கள் வர ஆரம்பிச்சிருச்சு.பல பேக்கட்டுகளில் தமிழிலே பேரும் எழுதியிருக்குறது, பார்க்க நல்லாவே இருக்கு.


இலங்கையிலே செய்யறமாதிரி மசாலா,இன்னும்பல நான் வெஜ் சாமான்களைச் சேர்த்துச் செய்யற வழக்கம் தமிழ்நாட்டுலேஅநேகமா இல்லைன்னு நினைக்கிறேன். விவரம் தெரிஞ்சவுங்க சொல்லுங்களேன்.


Friday, September 16, 2005

பந்தியிலே சாப்பாடு?


இந்தப் பதிவு நம்ம மதிக்கு 'அர்ப்பணம்'!
நானும் ஒரு பந்தியோட பதிவைப் போட்டுத்தான் ஆகணுமுன்னு நினைக்கிற அளவுக்கு என்னைக் கொண்டுவந்துட்டீங்களே, இது நியாயமா?வலைப்பதிவுலே நாலு வரி இல்லேன்னா அது படத்தைத் தூக்கிருமாமே?
இப்ப கொஞ்சம் கொஞ்சமா விவரம் வருதில்லே. இதோ நாலு வரியை முடிச்சுட்டேன்.





வாத்துப் போட்டிக்கு




இந்த மாதிரி ஒரு வாத்துப் போட்டி இருக்கறது இப்பத்தான் தெரிஞ்சது. இதையும் சேர்த்துக்க முடியுமா?

இது எங்க ஊர்லே 'ஹேக்ளி பார்க்'லே எடுத்தது. ப்ரெட் மீந்து போனா கொண்டுபோய் 'டக் ஃபீடிங்' செய்யறதுதான்




துள்ளும் காலம்.


என்னுடைய தனி தியேட்டரில் படம் போடறேன். வரமுடியாதவங்களுக்காக இதோ விமரிசனம்.
நடிகர் நடிகையர் பேருலே கொஞ்சமாவது தெரிஞ்சதுன்னா 'வினிதா'வைச் சொல்லலாம். அப்புறம்ஸ்ரீமன் வரார்.


கிராமத்துக்கதை. நாலு இளைஞர்(!)கள் மரத்தடிலே உக்காந்துக்கிட்டுப் போற வாரவங்களைக் கலாய்ச்சுக்கிட்டுஇருக்காங்க. அந்தக் கிராமத்துலே இருந்து ஒரேஒரு பொண்ணு பி.இ.. படிக்குது(அட!)


இந்தப் பசங்களும் காலேஜ்லே இடம் கிடைச்சு, டவுனுக்குப் படிக்கப்போயிடறாங்க.

கிராமத்துலே ஸ்ரீமன் மீட்டர் வட்டிக்கு பணம் கடன்கொடுத்து, வசூல் பண்ணிக்கிட்டு இருக்கார்.

வழக்கம்போல கதாநாயகி கார்லே காலேஜ்வாசல்லே வந்து இறங்குறது, ஒரு கூட்டம் அங்கே ஜொள்ளூவிட்டுக்கிட்டு உக்காந்து'ராக்'செய்யரது, அசட்டுத்தனமான லெக்சரர், முத்தின மூஞ்சுள்ள மாணவர்கள்னுதமிழ்சினிமாவோட இலக்கணத்தையொட்டி எல்லாம் தடம் பொறளாம நடக்குது.

காலேஜ்ன்னா இன்டர் காலேஜ் போட்டி/விழா இல்லாம இருக்குமா? கதாநாயகன் பாட்டுப் போட்டியிலேகலக்கிடறார். தமிழ் சினிமாவுலே பாட்டு எழுதற ஒருத்தர் (பேரு விவேகான்னு சொன்னாங்க) அப்புறம்அந்த ஊர் கலெக்டரம்மா இவுங்கெல்லாம் முக்கிய விருந்தினராக் கலந்துக்கிடறாங்க. யாரு ஜெயிச்சான்னுஉங்களுக்குத் தனியாச் சொல்லணுமாக்கும். மோஹினி ஆட்டத்துமேலே இயக்குனருக்கு என்ன கோபமோ?ஒரு பொண்ணு வந்து ஆடுது.

நாயகனோட அண்ணன் மிலிட்டரி மேன், ஊருக்குவராரு. முறைப்பொண்ணைப் பொண்ணு கேட்டுவாங்கன்னுபொண்ணோட அம்மாவே வந்து சொல்லிட்டுப் போறாங்க. இஞ்சிநீயரிங் படிச்ச பொண்ணு எஸ்.எஸ்.எல்.சிமிலிட்டரியை வேணாமுன்னு சொல்லி அவமானப்படுத்துது.
கதாநாயகனுக்குக் காதலில் நம்பிக்கையில்லை. இதைக் குடிச்சுட்டு உளறச் சொல்ல, நாயகி கேட்டுட்டாங்க.

பரீட்சை முடிஞ்சுருது. நாலுநண்பர்களிலே ரெண்டு பேர்மட்டும் பாஸ் செஞ்சுட்டாங்க. கதாநாயகன் ஃபெயிலு.பாஸ் செஞ்சவுங்க, இவனைக் கழட்டிவிட்டுட்டு மேற்படிப்புக்குப் போயிடறாங்க. ஃபெயிலான நண்பன் கண்ணாலம்கட்டிக்கிட்டு, அப்பாவோட வியாபாரத்துக்குப் போயிடறான். இப்ப இவன் தனி. கிராமத்துலே ஒரு நாய்கூட இவனைமதிக்கலே. இப்பத்தான் நான் நிமிந்து உக்காந்தேன். எதுக்கு? இன்னும் கொஞ்சநேரத்துலே படம் முடிஞ்சுருமேன்னு!

படிச்ச பொண்ணுக்குப் பெரிய இடம்(டாக்டர்) மாப்பிள்ளையா வருது. ஆனா, பொண்ணோட நிலம் மீட்டர்வட்டியாலேகைவிட்டுப் போச்சுன்னதும் கல்யாணம் நின்னுருது.

'பாக்கியை வெள்ளித்திரையில் காண்க'ன்னு கெத்தாச் சொல்லியிருப்பேன். ஆனா.....

நானே நேத்து இந்தப் படம் பார்த்துட்டு, கைவேற கால்வேற, தலைவேறன்னு துண்டுதுண்டாச் சிதறிக் கிடந்தேன்.சின்னச்சின்னத்துண்டா அறுத்துத்தள்ளிட்டாங்க. இந்த தண்டனை உங்களுக்கும் கொடுக்கணுமா? 'ஆமாம்னு சொல்லு. நீ பெற்ற இன்பம் உன் வலைக்கூட்டமும் பெறவேணாமா?'ன்னு மனசாட்சி ஒரு மூலையிலேநின்னுக்கிட்டுச் சொல்லுது. இது மனசாட்சியின் வில்லி சைடு.

நல்ல சைடு சொல்லுது, 'இவுங்க இந்தப் படத்தைப் பாக்கவா போறாங்க. நீயே கூட இந்தக் கதையை வேறமாதிரிவளைச்சுச் சொன்னாலும் தெரியவா போகுது. அப்பாவி மக்க. போனாப்போட்டும், மிச்சத்தையும் சொல்லிப்புடு.பொழைச்சுப் போகட்டும்'னு! சரி. நல்லது யாரு சொன்னாலும் கேட்டுக்கணுமில்லெ?

படிச்ச பொண்ணுக்குத் தன்அம்மாவுக்கு இதயநோயிருக்குன்றதும், தன்னோட படிப்புக்காகத்தான் நிலம் அடமானம் போச்சுன்றதும்தெரிஞ்சுபோய், தாய் சொல்ற ஆளைக் கல்யாணம் கட்டிக்கிடறேன்னு சொல்லி அழுவுது. பாவம்!
மிலிட்டரிக்கார் சமாதானம் சொல்லி, தன்னைவிடக்கூடப் படிச்ச, பி.எஸ்சி ஃபெயில் தம்பிக்கு அந்தப் பொண்ணைக்கட்டிவைக்கிறார். சுபம்.
இதுலே வினிதா என்னவா வராங்க? மிலிட்டரிக்கும், நாயகனுக்கும் தாயா இருந்து குடும்பத்துக்காக உழைக்கிறடீச்சர் அக்கா. நல்லா குண்டடிச்சு இருக்காங்க. அவுங்க காசு, அவுங்க சாப்புடறாங்க.நாம யார் இதைச் சொல்ல?
கதாநாயகன் சேட்டுப் பையர். பேசறதைவச்சும், நிறத்தைவச்சும் சுலபமாக் கண்டுபிடிச்சிரலாம். அவுங்க கிட்டேதானேகாசு இருக்கு, சொந்தமா ( பணம் கொடுத்து)நடிக்க. அவர் பேரு ஷங்கர். நாயகி/கள் பேரு என்னன்னு யாருங்கே அங்கே கேக்கறது?இப்ப அதுவா நமக்கு முக்கியம்? வுடுங்க.

அடடா, படத்துலே இருக்கற 'மெசேஜ்' பத்தி இன்னும் சொல்லலையில்லெ. அது யாருங்க குறுக்கே குறுக்கே'அப்படிக்கூட ஒண்ணு இருக்கா'ன்னு கேக்கறது? சொல்றேன் இருங்க. அருமையான ரெண்டு மெசேஜ் இருக்கு.

1. படிக்கிறப்ப எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டீஸ் செஞ்சாலும், படிக்கிறதைக் கோட்டைவிட்டா நீங்க ஃபெயில்ஆயிருவீங்க.

2. கூடக்கூத்தாடுற நண்பர்கள் எல்லாம் கவனமாப் படிச்சுட்டு, அவுங்க பாஸ் ஆனதும் உங்களைக் கழட்டிவிட்டுட்டுமேற்படிப்பு படிக்கப் போயிருவாங்க( எல்லாரும் என் நண்பன் சுப்ரமணியா என்ன? இது அடுத்தகதைக்கு அஸ்திவாரம்?)

சரி. தப்பிச்சேன், பிழைச்சேன்னு ஓடி அவுங்கவுங்க சோலியைப் பாருங்க. அடுத்த பிளேடோடு விரைவில் வருவேன்.

பி.கு: இதுக்கும் இந்தப் படத்துக்கும் என்ன சம்பந்தம்? ஒண்ணுமில்லை,
நேத்துதான் படம் காட்டப் படிச்சேன். அதான் பழகிப்பாக்கறேன்.

இது இங்கே வசந்தகாலத்தில் மரங்கள் பூத்துக் குலுங்குது!


Thursday, September 15, 2005

எண்டே பொன் ஓணம்.


இந்நு ஓண திவசமல்லே? எண்டே ப்ரியப்பட்ட கூட்டுகாரே, நிங்கள் எல்லாவர்க்கும் எண்டே ஆஸம்சகள் பரயான்ஒரு அவசரம் நல்கியதினு நன்னி.


பயந்துட்டீங்களா? கேரளக் கொண்டாட்டத்துக்கு மலையாளத்துலே வாழ்த்து சொன்னேன். இது தப்பா?
முன்பொருக்கில் மஹாபலி.... திருப்பித்திருப்பி மலையாளமே வந்துருது. க்ஷமிக்கணும் கேட்டோ.
அந்தக் காலத்துலே மகாபலி ன்னு ஒரு அசுர ராஜா நாட்டை ஆண்டுக்கிட்டு இருந்தார். ரொம்பவே நல்லவர்.அசுரனா இருந்தாக் கெட்டவனாத்தான் இருக்கணுமா என்ன? நாட்டுமக்களைக் கண்போல காத்துவந்தார்.வாரி வழங்குறதுலே அவர் கர்ணனைப் போலவே இருந்தார்.( அட, இது என்ன? அப்போ கர்ணன் பிறந்திருக்கவழியே இல்லையே? இது நடந்தது கிருஷ்ணாவதாரம் நடக்கறதுக்குக் கனகாலம் முந்தியாச்சே. புரிஞ்சுக்கிட்டீங்கெல்லெ) அவருடைய பெருமையையும் புகழையும் பார்த்த தேவர்களுக்குப் பொறுக்கலே. மஹா விஷ்ணுகிட்டே போய் போட்டுக் குடுத்தாங்க. 'இப்படி இவர் புகழும், பெருமையும்கூடிக்கிட்டே போகுது. நாளைக்கு அவரே நம்மையெல்லாம் தள்ளிட்டு மூணு லோகத்துக்கும் அதிபதியா வந்துட்டாருன்னா நமக்கெல்லாம் கஷ்டம்'னு! ( சரியான பொறாமை பிடிச்ச கூட்டம்?)
மஹாவிஷ்ணு பார்த்தார், என்ன செய்யலாமுன்னு. அப்ப மகாபலி ஒரு யாகம் செய்யத் தீர்மானிச்சு அதை நடத்திக்கிட்டுஇருந்தார். பொதுவா ஒரு யாகம் செஞ்சு முடிச்சவுடனே, அதுலே பங்கேத்து அதை நடத்திவச்ச அந்தணர்களுக்கும்,மற்றபடி யாசகம் பெறவந்தவங்களுக்கும் செல்வங்களை வழங்கறது பதிவு. அதிலும் இவர் வாரிவாரி வழங்கறதுலேமன்னராச்சே! எப்பவும் இல்லை என்ற சொல்லே இவர் வாயிலே இருந்து வராது. இதை நல்லாப் புரிஞ்சுக்கிட்டமஹாவிஷ்ணு, ஒரு ச்சின்ன அந்தணச் சிறுவனா உருமாறி அங்கே யாகம் நடக்குற இடத்துக்குப் போனார்.
அப்ப கேட்டவங்களுக்கெல்லாம், கேட்டது கேட்டபடி தானம் நடந்துக்கிட்டு இருக்கு. ச்சின்னப்பையன் தானம் வாங்கவந்ததைப் பார்த்த மகாபலிச் சக்ரவர்த்திக்கு சந்தோஷம் தாங்கலே. குழந்தைப் பையன் முகத்துலே ஒரு வசீகரம் இருக்கு.இருக்காதா பின்னே? வந்திருக்கறது யாரு? ஈரேழு பதினான்கு லோகத்துலேயும் செல்வத்துக்கு அதிபதியான மஹாலக்ஷ்மியோடகணவனாகிய மஹாவிஷ்ணுவாச்சே!
என்ன வேணுமுன்னு பவ்யமாக் கேட்டாரு ராஜா. ச்சின்ன உருவமான 'வாமனர்' சொன்னார், பெரூசா ஒண்ணும் வேணாம். என் காலடிஅளவுலே ஒரு மூணடி மண் தானம் வேணுமுன்னு. ஆஹா..அப்படியே தந்தேன்னு சந்தோஷமாச் சொன்னார் மகாபலி. அப்ப அவருடைய ஆச்சாரியனான சுக்ராச்சாரியாருக்கு வந்திருக்கறது சாதாரணச் சிறுவன் இல்லேன்னு தெரிஞ்சு போச்சு. 'இது நல்லதுக்கில்லே. வேணாம்'னுராஜாகிட்டேத் தனியாப் பேசித் தடுக்கப் பார்த்தார். ராஜா சொல்லிட்டார், கொடுத்தவாக்கு கொடுத்ததுதான். வந்தவர் விஷ்ணுன்னாஎனக்கு இன்னும் சந்தோஷம்தான். எங்க தாத்தாவோட இஷ்ட தெய்வமாச்சே மஹாவிஷ்ணு. அவரே வந்து என்கிட்டே தானம்கேக்கறாருன்னா அதைவிட எனக்கு வேற பாக்கியம் வேணுமா'ன்னு சொல்லிட்டார். ராஜாவோட தாத்தா யாரு தெரியுமா?ஹிரண்யகசிபுவோட மகன் பிரஹலாதன். 'நாராயணா நமஹ' ன்னு எப்பவும் சொல்லிக்கிட்டு இருந்தாரே, அவர். அப்பதான்அவருடைய அப்பாவான ஹிரண்யனைக் கொல்ல மஹாவிஷ்ணு நரசிம்ஹ அவதாரம் எடுத்தது! இப்படி ஒவ்வொண்ணாச் சொல்லிக்கிட்டே போகலாம். இருக்கட்டும், இப்ப நடக்குற விஷயத்துக்கு வாரேன்.
அந்தக் கால வழக்கப்படி (தானம் வாங்கறவங்க கையிலே, கொஞ்சம் தண்ணி ஊத்திட்டு நீங்க கேட்டதைக் கொடுத்தேன்னு சொல்லணும்) தண்ணி ஊத்த கெண்டியைக் கொண்டுவரச் சொன்னார். சுக்ராச்சாரியாருக்குப் பொறுக்கலை. அரசனுக்குஆபத்து வருதேன்ற பதைப்புலே என்ன செய்யலாம் இதைத்தடுக்கன்னு யோசிச்சு, ஒரு வண்டு ரூபம் எடுத்து,அந்தக் கெண்டியிலே இருக்கற மூக்கு ஓட்டையை அடைச்சுக்கிட்டு உக்காந்துட்டார். ராஜா தண்ணி ஊத்தக் கெண்டியைச்சரிக்கிறார். வாமனர் கையை நீட்டிக்கிட்டு இருக்கார். தண்ணி வரலை. அதான் அடைபட்டுப் போச்சே! அப்ப ஏதோஅடைச்சுக்கிட்டு இருக்குன்னுட்டு, அங்கே யாகம் செஞ்ச இடத்துலே இருந்த தர்ப்பைப்புல் ஒண்ணு எடுத்து அந்தவளைஞ்ச கெண்டிமூக்கு ஓட்டையிலே குத்துறார் ராஜா. அது ஆச்சாரியருடைய கண்ணுலே குத்தி ரத்தமா வருது.திடுக்கிட்டுப் போய் உள்ளெ என்னன்னு பரிசோதிக்கிறாங்க. வெளியே தொப்புன்னு விழுந்த வண்டு பழையபடிஆச்சாரியனா உருமாறிடுது. ஒரு கண்ணுலே ரத்தம் வழியுது.( அதுக்குத்தான் பெரியவுங்க சொல்றது, யாருக்காவது எதாவது தானம் கொடுக்கறப்ப அதைத் தடை செய்யக்கூடாதுன்னு! நீ கொடுக்கலேன்னாப் போ. அடுத்தவன் கொடுக்குறதை ஏன் தடுக்கறே?)
அப்புறம் வேற கெண்டி கொண்டுவந்து தண்ணி ஊத்தி தானத்தை வழங்கிடறார் மகாபலி. மூணே மூணு அடி!
வாமனர் உருவம் விஸ்வரூபம் எடுக்குது. வளர்ந்து வளர்ந்து ஆகாயத்துக்கும் பூமிக்குமாய் நிக்கறார். முதல் அடிஇந்த பூமி முழுசும். ரெண்டாவது அடி அந்த ஆகாயம் முழுசும் ஆச்சு. இப்ப மூணாவது அடி எங்கே வைக்கறது?மஹாவிஷ்ணுவோட விஸ்வரூப தரிசனம் லேசுலே கிடைக்கிற சமாச்சாரமா? ஆனா அன்னிக்கு அங்கே இருந்த எல்லாருக்கும் லபிச்சது. 'ஆ'ன்னு வாயைப் பொளந்துக்கிட்டு எல்லோரும் மெய்மறந்து நிக்கறாங்க. அப்ப ராஜாமகாபலி , மூணாவது அடி என் தலையிலே (சிரசில்)வையுங்கன்னு பணிவாச் சொல்றார்.( வீடுங்களிலேஎப்பவாவது, சில சாமான்களை எங்கே வைக்கறதுன்னு, நாம கைவேலையா இருக்கறப்ப யாராவது கேட்டாங்கன்னா,'ஏன், என் தலையிலெ வையேன்'ன்னு சொல்றோமே இதுகூட இந்த சம்பவத்தாலே வந்ததுதானோ?)
அப்ப மஹாவிஷ்ணு கேக்கறார், 'உன்னுடைய கடைசி ஆசை என்ன?'ன்னு.ஒரு உயிரைப் பறிக்கிறதுக்கு முன்னேகேக்கவேண்டிய நியாயமான கேள்வி. அப்ப ராஜா வேண்டுறார்,'நான் என் நாட்டு மக்களை ரொம்ப நேசிக்கிறேன்.அதனாலே வருசத்துக்கு ஒருமுறை இந்த நாளில்( அன்னைக்கு நட்சத்திரம் திருவோணமா இருந்தது. நம்ம தமிழ்மணத்துலேவர்ற இந்தவார நட்சத்திரத்தையும் இதையும் போட்டுக் குழப்பிராதீங்க) ஜனங்களை வந்து பார்த்துட்டுப் போறதுக்குஅனுமதி தரணும்'ன்னு. அப்படியே ஆகட்டும்னு சொல்லிட்டு அவர்தலைமேலே மூணாவது அடியை வச்சு அப்படியே அவரைபாதாள லோகத்துக்கு அனுப்பிட்டார் மஹாவிஷ்ணு.
அதுக்கு அடுத்த வருசத்துலே இருந்து சம்பவம் நடந்த சிங்கமாசம் ( நம்ம தமிழ்மாசம் ஆவணி), திருவோண நட்சத்திர நாளிலே மகாபலி பூலோகம் வந்து தன்னுடைய ஜனங்களைப் பார்த்துட்டுப் போறாருன்னு ஒரு ஐதீகம். அவரை வரவேற்கறதுக்காக ஒவ்வொருத்தரும்அவுங்கவுங்க வீட்டு வாசலிலே கோலம் போட்டு, அதை பூக்களாலேயே அலங்கரிக்குறாங்க. அதுதான் பூக்களம்னு சொல்றது.எல்லோரும் நல்ல புது ஆடைஆபரணங்கள் எல்லாம் அணிஞ்சு, அருமையான விருந்து சாப்பாடு தயாரிச்சு வச்சுஅவுங்களோட இஷ்ட ராஜாவான மகாபலிச் சக்ரவர்த்திக்கு அர்ப்பணிக்கிறாங்க. திருவோணத்தன்னிக்கு இது நடந்ததாலேஇந்தப் பண்டிகைக்குப் பேரே 'ஓணம்'னு ஆகிருச்சு.
ஏங்க, அந்தக் காலத்துலெயே தமிழ்நாடு, கேரளா, ஆந்திரான்னு எல்லைகளும், பிரிவினையும் இருந்திருக்குமா?இருக்காதுல்லே. அப்ப இந்தப் பண்டிகை லோகம் முழுசும், குறைஞ்சபட்சம் பாரதம் முழுசுக்கும் இருந்திருக்கணும்தானே?அதெப்படியோ, கேரளத்துக்கு மட்டுமுன்னு ஆகிப்போச்சு. சரியாச் சொன்னா இது சிங்கமாசம்அஸ்தம் நட்சத்திரம் தொடங்கி திருவோணம் வரை இருக்குற பத்துநாள் பண்டிகை. சில இடத்துலே கடைசி நாலஞ்சுநாளும்கொண்டாடுறாங்க.
இப்ப கேரள மாநிலத்தைச் சேர்ந்தவுங்க உலகத்திலே பலபாகங்களில் இருக்கறதாலே, அங்கங்கே அவுங்க வசிக்கிற இடத்துலேயே கொண்டாடிடறாங்க. வீட்டுலே கொண்டாடுறது மட்டுமில்லாம, அந்தப் பகுதியிலே இருக்கற மத்தகேரள நண்பர்களோடும் அவுங்க குடும்பங்களோடும் சேர்ந்து கொண்டாடுறதும் வழக்கமாயிடுச்சு. திருவோண நட்சத்திரம்வர்றது சனி ஞாயிறுன்னா அன்னைக்கே கொண்டாடிரலாம். மத்த கிழமைன்னா வேலைநாளாயிடுதுல்லையா? கேரளான்னாஅரசாங்கமே விமுறை தந்துருது. ஆனா மத்த நாட்டுலே இருக்கறவங்களுக்கு? அதனாலே வசதியை வச்சு, அந்தசமயத்துலே வர்ற வார இறுதியிலே எல்லாம் சேர்ந்து கொண்டாடிக்கிறதுதான். என்ன, மகாபலிக்கு இதுக்குன்னு ஒருதடவை வந்துட்டுப் போக ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கணும். அதுலே ஒண்ணும் பிரச்சனை யில்லையாம்!
இங்கே எங்க ஊரு கேரளா அசோஸியேஷன்லே நாலுநாளைக்கு முன்னாலெ சனிக்கிழமையன்னிக்கு 'ஓணம்'கொண்டாடினோம். எங்க அசோஸியேஷன் ஆரம்பிச்சபிறகு வர்ற முதலாவது 'ஓணம்'ன்றபடியாலே ஏற்பாடுகள்எல்லாம் பிரமாதமா செஞ்சிருந்தாங்க. 21 வகையோடு கூடிய ஓணம் விருந்து( ஓண சத்யா). அதுலே ரெண்டுவகைப்பாயசம். வாழையிலை( இந்த ஊரின் சரித்திரத்திலே முதல்முறையாக) போட்டு விருந்து சாப்பாடு பறிமாறினாங்க.நண்பர் ஒருத்தர் சமையல் பொறுப்பேத்துக்கிட்டார். நாங்கள் எல்லாம் சில்லரை வேலை செஞ்சுகொடுத்தோம்.
நாங்க மூணு பெண்கள் காய்கறிகளை நறுக்கிக் கொடுத்தோம். கோபால் தோல் சீவவேண்டிய காய்களையெல்லாம்சீவிக்கொடுத்தார். சுருக்கமாச் சொன்னா 'ஷேவிங் கோபால். கட்டிங்கு நாங்க!
பிள்ளைங்களும், இளவயதுக்காரங்களுமா டான்ஸ், பாட்டு, புலிவேஷம், வள்ளங்களி, கேரளாவைப் பத்தி ஒரு ஃப்லிம்ஷோன்னு அமர்க்களப்படுத்திட்டாங்க. 'பூக்கள மல்சரம்' னு போட்டி வச்சு சிறந்த பூ அலங்காரக் கோலத்தை தேர்ந்தெடுத்து பரிசு வழங்குனதுன்னு ஒரே கொண்டாட்டம்தான் போங்க.
ஆமா, இந்தக் கொண்டாட்டத்துலே நான் எங்கே வரேன்னு கேக்கறீங்களா? பெரிய மனுஷின்ற வகையிலேநாந்தானே ஓணத்தைப் பத்தி ஒரு ஸ்பெஷல் ஸ்பீச் ( மக்களின் வேண்டுகோளை முன்னிட்டு!) கொடுத்தேன்.எல்லைகளைப் பிரிச்சுப் பாக்காத ஒரு இந்தியன்/ள் நான்.
ஆனா இந்த வருஷ விழாவோட 'ஹை லைட்' என்னன்னா வாழையிலைதான். இந்தியாவுலே இருந்து இதுக்காகவரவழைச்சோம்!
லோகம் முழுவனும் நன்னாயிவரட்டேன்னு ஈஸ்வரனோடு ப்ரார்த்திச்சுக்கொள்ளுன்னு. ஒரிக்கில்கூடி நிங்கள் எல்லாவர்க்கும் ஈ பொன் ஓணத்திண்டே மங்களா ஸம்சகள். விஷ் யூ ஆல் அ வெரி ஹேப்பி ஓணம்.
இன்னிக்குத்தான் திருவோண நட்சத்திரம்.அனைவருக்கும் இனிய ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள்!!!! நல்லா இருங்க.!